Thursday, June 25, 2015

தீயில் மெழுகாய்

அட, உனக்குத் தெரியுமா? ஒரு நாள் நம்ம வீட்டிற்கு வந்ததற்கே அங்கு அவ்வளவு ஆர்ப்பாட்டமாம். பின் ஏன் வர வேண்டும்?

ஐங்குறுநூறு 32 - பாடியவர் ஓரம்போகியார் 
தலைவி தோழியிடம் (தலைவன் கேட்கும்படியாக) சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். ஐங்குறுநூறு பாடல்கள் 31 முதல் 40 வரை 'தோழிக்கு உரைத்த பத்து' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.


அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே


இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு என்  ஆங்கிலத் தளத்தில் - Wax Ablaze

எளிய உரை: தோழி கேட்பாயாக! வாழ்க தலைவன்.  என் தலைவன் ஒரு நாள் நம் இல்லத்திற்கு வந்ததற்கு அவனைச் சேர்ந்த பெண்கள் தீயில் உருகும் மெழுகாய் நெகிழ்ந்து ஏழு நாட்களுக்கு அழுவர் என்று சொல்கின்றனர்.


விளக்கம்: தலைவன் பரத்தையரிடம் சென்று விடுகிறான். எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் செல்கிறானே என்று தலைவி வருத்தத்துடனும் கோபத்துடனும் இருக்கிறாள். இச்சூழ்நிலையில் தலைவனுக்குத் தலைவியைப் பார்க்க வர வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. நேராக வந்தால் என்ன நடக்குமோ என்று அஞ்சி நண்பர்களை அனுப்புகிறான். தலைவன் வர விருப்பப்படுகிறான் என்று தலைவியிடம் சொல்வதற்கும் அவனை ஏற்றுக் கொள்ளச் சொல்வதற்கும். நண்பரை அனுப்பாமல் தலைவனே வந்து தோழியிடம் உள்ளே வரக் கேட்டிருக்கவும் கூடும்.  அப்படி வந்தவர்கள் வாசலில் நிற்க (அவர்கள் கேட்கும் படியாகத்), தலைவி தோழியிடம் தலைவன் வரவை மறுத்து இவ்வாறு சொல்கிறாள். ஒரு நாள் இங்கு வந்ததற்கே அவன் பெண்கள் ஏழு நாட்களுக்கு தீயிலிட்ட மெழுகாய் உருகி அழுதனராம் என்று சொல்கிறாள். இதில் தலைவி தலைவனை இடித்துரைப்பதாகக் கொள்ள வேண்டும். தலைவனின் பிரிவிற்கு வாடுபவள் அன்புடைய தான் தானே அன்றி பணத்திற்கு வரும் பரத்தையர் அல்ல என்று சினந்து உணர்த்துகிறாள். தலைவன் வர வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்துகிறாள். ஏழு நாட்கள் என்பது மிகுதியைக் குறிக்கிறது. ஒன்றை இரண்டாய் சொல்வது போல. ஒரு நாள் வந்ததற்கே ஏழு நாட்கள் அழுதனாரம், அதனால் வர வேண்டாம் என்கிறாள் தலைவி. தலைவன் பரத்தையரிடம் சென்று பல நாட்கள் இருந்திருக்கிறான் என்பது விளங்குகிறது.

சொற்பொருள்: அம்ம தோழி - கேட்பாயாகத் தோழி,  வாழி - வாழ்க, மகிழ்நன் - தலைவன் (மருத நிலத் தலைவனை மகிழ்நன் என்று குறிப்பிடுவர்), ஒரு நாள் நம் இல் வந்ததற்கு - ஒரு நாள் நம் இல்லம் வந்ததற்கு, எழு நாள் - ஏழு நாட்கள், அழுப - அழுவர், என்ப - என்று சொல்கின்றனர், அவன் பெண்டிர் - அவன் பெண்கள் (பரத்தையரைக் குறிக்கிறது), தீ உறு - நெருப்பில் இட்ட, மெழுகின் - மெழுகைப் போல, ஞெகிழ்வனர்-உருகுகின்றனர், விரைந்தே - வேகமாக, விரைவாக


என் பாடல்:
அம்மநீ வாழியத் தோழி தலைவன் 
ஒருநாள் நமதில்லம் வந்ததற்கு ஏழுநாள் 
தீயில் மெழுகாய் விரைந்து நெகிழ்ந்து 
அழுதார்  அவன்பெண்டிர் என்ப

49 comments:

 1. அருமை கிரேஸ் :)

  ReplyDelete
 2. அருமைம்மா தேனு !எவ்வளவு நாட்களாயிற்று ம்..ம் மீண்டும்சங்க இலக்கியப்பாடல்கள் கேட்க மகிழ்ச்சியாக உள்ளதும்மா. நன்றி பதிவுக்கு !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி இனியா

   Delete
 3. என்னா கொழுப்பு இருந்தா தலைவன் என்னைய விட்டுட்டு பரத்தையரைத் தேடிப் போவான்? இப்ப மட்டும் எந்த மூஞ்சோட வந்தான்? அப்படிங்கற தலைவியோட கோபம் என்னா அழகா வெளிப்படுது இந்தப் பாடலில். தீயில் மெழுகாய் என்பது எத்தனை அழகான உவமை... நம் மொழிககு இணை எங்கும் இல்லை கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. நம்ம மதுரைக்காரர் மொழிபெயர்ப்பும் அசத்தல்..

   Delete
  2. ஆமாம் அண்ணா, நம் மொழிக்கு இணை இல்லை! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.

   சரியாச் சொன்னிங்க சசி, அண்ணாவின் பாணியில் எப்படி நச்சுனு இருக்கு பாத்திங்களா? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.

   Delete
 4. அழகான விளக்கம்....எளிதாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கான விளக்கம் சகோதரி! அருமை....தமிழ் விளையாடுகின்றது....தமிழ் இனிமை என்பதன் அர்த்தம் இதுதானோ!!!!

  பரத்தையர் எல்லா காலகட்டத்திலும் இருந்திருப்பதும் தெரிய வருகின்றது இல்லையா...தலைவியின் கோபம் நியாயமானதுதானே....!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான ஊக்குவிக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
   ஆமாம், எல்லா காலத்திலும்....மிகவும் நியாயமான கோபம். அன்று உள்ளே விட்டிருக்கிறார்கள், இன்று விடக் கூடாது என்பதே என் கருத்து, என் பதிவின் நோக்கமும் அதுவே.

   Delete
 5. ஆமாம் வெகுநாட்கள் ஆகிவிட்டது. சங்கப்பாடல்கள் தங்கள் வலையில் பார்த்து.
  அழகான தலைப்பு.
  வாழ்த்துக்கள் பா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி, இனி இடைவெளி விடாமலிருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். உங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி பா

   Delete
 6. வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போன்ற வார்த்தைகள்... அவனுக்கு உரிமையில்லாத பெண்களே அப்படி தங்களை உணர்வார்கள் என்றால் உரிமையுள்ளவளுக்கு எப்படியிருக்கும் என்று அவனுக்கு உணர்த்தும் பாடல். உணர்ந்தால்தான் பிரச்சனையில்லையே... அழகான பாடலும் தெளிவான விளக்கமும் நன்று கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி, உணர்ந்தால் மீண்டும் போக மாட்டானே.
   மிக்க நன்றி கீதமஞ்சரி

   Delete
 7. அழகான குறுந்தொகைப்பாடலுடன் விளக்கம் சிறப்பு! தங்கள் கவிதையும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   ஐங்குறுநூறு சகோ, ஏதோ குழப்பமாகிவிட்டது என்று நினைக்கிறேன் :)

   Delete
 8. வணக்கம் சகோ !

  சங்க இலக்கியத்தின் அழகை தங்கள் பாணியில் சொல்வது மிக அழகு
  தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   உங்கள் இனிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி

   Delete
 9. வணக்கம்,
  நான் முன்பே பின்னூட்டம் இட்ட நினைவில் சென்றேன் போலும்,
  அழகான குறுந்தொகைப் பாடல், தலைவியின் மனநிலையை வெளிபடுத்தும் அருமையான பாடல்,
  அப்புறம் எங்க கூடையில் வைத்து தூக்கி சென்றாள் என்ற தொடர் எழுந்ததோ,,,,,,,,,,,,
  அழகிய பதிவும்மா,
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி. மீண்டும் வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி.

   Delete
 10. செய்யுளை அழகாக பிரித்து தெளிவாக விளக்கி உள்ளீர்கள் தோழி.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 11. எளிமையாய் மட்டும் இல்லை
  கருத்தை மிக மிக அற்புதமாகவும்
  சொல்லிப்போகிறது தங்கள் கவிதை
  நல்ல முயற்சி
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. இவ்வாறான நிகழ்வுகளை நம் தமிழில்தான் காணமுடியும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 13. ச்ச! எத்தனை cute ஆக கடிந்துகொள்கிறாள்!! மகிழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விஜயன்

   Delete
 14. அருமை அருமை சகோ
  நன்றி

  ReplyDelete
 15. வணக்கம் சகோ.

  பாடலின் பொருளை நீங்கள் விளக்கிய விதம் அருமை. ஆங்கில மொழிபெயர்ப்பும் பாடலுக்கு நீங்கள் காட்டிய விளக்கத்தை அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்தது.
  பாராட்டுகள்.

  இப்பதிவில் காட்டியது போலத் தனித்தனிப் பாடல்களே பெரிதும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

  அவற்றைப் பொருள் விளங்க எழுதும் போது அப்பாடல் தோற்றம் பெற்றதற்கான சூழலையும் நம் மனக்கண்களால் கண்டு எழுதுவோமாயின் வாசிப்பவரின் மனம் பாடலோடு ஒன்ற அது துணை செய்யும். இது என் கருத்து மட்டும்தான். அதே நேரம் நாம் சொல்வதற்கு உரிய நியாயங்கள் பாடலில் இருக்க வேண்டும். என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  உங்கள் பதிவின் வாயிலாக அல்லாமல் இப்பாடலைஇதற்குமுன் நான் வாசித்ததில்லை.

  ஒரு எளிய உரையாடலாக இந்தப் பாடலை இப்படி நான் உள்வாங்கிக் கொண்டேன்.

  ( பரத்தையர் வீட்டுக்குப் போய்விட்டு வந்ததைத் தலைவி அறிந்து கொண்டாள் என்பது தெரிந்து, வீட்டுக்கு வெளியே தயங்கித் தயங்கி நிற்கிறான் அவன். அதைப் பார்த்த தோழி தலைவியிடம், ‘உன் கணவர் வந்திருக்கிறார்’ என்று வெளியே கண்ணைக் காட்டுகிறாள். அதைக் கண்டும் காணாதவள் போலத் தலைவி அவன் காதில் விழும்படி )

  ” ஏய்! ( அவர் எங்கிருந்தாலும் ) நன்றாக இருக்கட்டும் தோழி!

  ஏனெனில்

  அவர் நம் வீட்டில் இருந்து ஒருநாள் பிரிந்து வந்தாலும் கூட
  ஒருவாரம் பிரிந்தது போல எண்ணித் துயர் கொண்டு
  தீ பிடித்த மெழுகைப் போல உடனேயே அவருக்காக உருகிப் போகும் பெண்கள்தான் அங்கிருப்பவர்கள் என ஊர் உலகம் சொல்கிறதே!!!”

  அவ்வளவுதான்.

  பாடல் முடிந்தது.

  இதுதான் இப்பாடலின் பொருளா?

  பாடலைப் படிக்கும் பொழுது எழ வேண்டிய சந்தேகம்.

  ( இந்தச் சந்தேகம் நிச்சயம் உங்களுக்குத் தோன்றியிருக்கும் என்றே எண்ணுகிறேன்.)

  ‘ஒருநாள் பொழுது பிரிந்தாலும் ஒருவாரம் பிரிந்ததைப் போலத் துயர் கொண்டு, தீ பட்ட மெழுகாய் உருக வேண்டியவள் தலைவி அல்லவா?

  பொருட்பரத்தையர் அப்படி உருகுவாரா?’

  எனவே இப்படிப் பொருள் சொல்வதாய் இந்தப்பாடல் எப்படி இருக்க முடியும்?

  இப்பாடலின் தொனிப்பொருள் வேறானது என என் மனத்திற்குப்படுகிறது. தமிழிலக்கணம் இதனைக் ‘குறிப்புப் பொருள்’ என்னும்.

  இங்குத் தலைவி செய்வது அவனுக்கான எள்ளல். பரிகசிப்பு.

  இங்குத் தலைவியின் கூற்றை,

  ஒரு தாய் கோபமாகத் மகனிடம், “ ஆமாப்பா! உம்பொண்டாட்டிதான் உன்னைப் பத்து மாசம் சுமந்து, உன் நோவு நோக்காடுக்கெல்லாம் போகனுமின்னு வேண்டிகிட்டு இத்தனை விரதம், தனக்குக் கஞ்சிக்கு வழியில்லாட்டியும் உனக்குப் பசிக்கக் கூடாதின்னு பட்டினி கிடந்து உன்னை இந்த அளவுக்கு ஆளாக்கிவ!” என்று மருமகளைப் பற்றிச் சொல்வதைப் போலக் காணவேண்டும்.

  கணவன் தன்னைவிட்டு ஒருநாள் பொழுது பிற பெண்டிரை நாடிப் பிரிந்தாலும் அதனை நீண்ட பொழுதாய் எண்ணித் துயர் கொண்டு, அவன் மீண்டு வருமளவும், நெருப்பிடைப்பட்ட மெழுகாய் வாடுபவள் தலைவியே அன்றிப் பொருட்பெண்டிர் அல்லர்.

  அவர்களுக்கு இவனில்லாவிட்டால் இன்னொருவன் அவ்வளவுதான்.

  தலைவி கோபம் கொண்டு பரத்தையரைப் பற்றிச் சொல்வது போல் சொல்வதன் பொருள், மேற்காட்டிய உதாரணத்தில் தாய் தன் செயலை மருமகள் செயலாக்கிக் கூறினாற் போலத்தான்.

  நுட்பமாக, ‘நீ ஒருநாள் பிரிந்தால் கூட, உன் பிரிவினால் கலங்கித் தீயிடைப்பட்ட மெழுகினைப் போல உருக்குலைந்து வாடுபவள் உனக்கென உரிமை பூண்ட நான் தானேத் தவிர, பொருளுக்கு ஆசைப்பட்டு அது இருக்கும் வரை மட்டுமே உன்னை விரும்பி அது தீர்ந்ததும் உன்னை விரட்டியடிக்கும் அப்பொருட்பெண்டிர் அல்லர்.’ என்று அத் தலைவி ‘ உன்னை மட்டுமே உயிராய் நேசிக்கும் என்னைப் போல் அந்தப் பொருட்பரத்தையரை நினைத்தாயோ?’கூறுவதாகவே எனக்குப்படுகிறது.

  இது என் கருத்து மட்டுமே! ஏற்குமானால் கொள்ளலாம்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா. அம்ம என்றால் கேட்பிக்கும் சொல் தான். முந்தையப் பாடலில் அப்படித்தான் எழுதியிருக்கிறேன்.
   http://thaenmaduratamil.blogspot.com/2014/09/will-he-say-not-obligated.html
   எப்படியோ தவறு செய்துவிட்டேன், மன்னிக்கவும். சுட்டிக் காட்டியதற்கு மனம் நிறைந்த நன்றி அண்ணா.
   நீங்கள் சொல்வது சரிதான், தலைவி தான் தீயில் பட்ட மெழுகாய் உருகுவாள். இந்தப் பாடலில் தலைவி பரிகசிப்பதாகவே நானும் புரிந்துகொண்டேன். "ஆமா, அவ தானே ஒரு நாள் பிரிவிற்கு ஏழு நாள் பிரிந்தது போல தீயில் உருகும் மெழுகைப் போல் உருகுவாள்' என்று தலைவி சொல்வது பரிகசிப்பதுதான். மேலே உள்ள இணைப்பில் உள்ள பாடலில் சொல்லியிருப்பது போல, பரத்தையிடம் போக மாட்டேன் என்று சொன்ன தலைவன் மீண்டும் சென்றது கண்டு சினந்திருக்கும் தலைவி அவனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கோபமாகச் சொல்வதுபோலவும் தோன்றுகிறது. நான் தான் உரிமை உடையவள், அதை உணராமல் மீண்டும் மீண்டும் இப்படிச் செய்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தலைவி சொல்கிறாள். என் விளக்கம் இன்னும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
   அம்ம, எனபது பற்றி மாற்றிவிட்டேன் அண்ணா. மீண்டும் மனமார்ந்த நன்றி அண்ணா.

   Delete
 16. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (30/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,
   தகவலுக்கு நன்றி. கண்டிப்பாகப் பார்க்கிறேன். வை.கோ. ஐயாவிற்கும் நன்றி.

   Delete
 17. வணக்கம்,

  நீண்ட நாட்களாகி விட்டது உங்களின் தளத்திற்கு வந்து அதற்கு முதலில் மன்னிக்கவும்!

  இப்பாடலை பற்றி இதற்கு முன் அறிந்ததுமில்லை, வாசிக்க விரும்பியதுமில்லை இதிலிருக்கும் உவமைகளையும் அதன்வழி விளங்கும் வாழ்வியல் நெறியும் அற்புதம். ரொம்ப கடினமான பணி தான் தொடர்ந்து சிறப்புற செய்யுங்கள் வரும் தலைமுறை உங்களை நினைவில் வைத்திருக்கும்.

  சின்ன கருத்து: இந்தப் பாடல்களுக்கு இணையான எளிமையான கதை ஒன்றையும் இத்தோடு இணைத்தால் இன்னும் படிப்பவர்களின் மனதில் சற்று அழுத்தமாக பதியும் என்பது என் நம்பிக்கை. முடிந்தால் செய்யுங்கள், உங்களின் கற்பனை கதையாக இருந்தால் இன்னும் நலம் ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. உங்கள் இனிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி.
   உங்கள் ஆலோசனைக்கும் நன்றி சகோ, முயற்சி செய்கிறேன்.

   Delete
 18. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். எனக்கு முன்னர் புதுவைவேலு அந்த இனிய செய்தியைத் தெரிவித்ததறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா, தகவல் தெரிவிக்க வந்த உங்களுக்கும் என் நன்றி. அன்பு வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி ஐயா

   Delete
 19. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பார்த்து மகிழ்ந்தேன் சகோ. அறிமுகப்படுத்தியதற்கும் தகவல் தெரிவித்ததற்கும் மிக்க நன்றி சகோ.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...