ஐங்குறுநூறு 207 - மழை சூழ் மலை

மழை வருமே தோழி, நீ உன் பயிரைக் காவல்காக்கச் செல்வாயே..
இத்தோழியை மறவாமல் இவள் உன் தலைவனைக் கேட்டதாகச் சொல்லு!

ஐங்குறுநூறு 207, பாடியவர் கபிலர்
குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
"அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும்
உணங்கல  கொல்லோ நின்தினையே உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்
மழைதலை வைத்த அவர்மணி நெடுங்குன்றே"



இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இங்கு சொடுக்கவும்.

எளிய உரை: வாழ்க தாயே! கேட்பாயாக! உன் தினை நிலம் வறண்டு போகாது. அங்கு பார், மாமிசத்தில் ஒட்டியிருக்கும் கொழுப்பைப் போல வெண்மேகங்கள் அவருடைய உயர்ந்த குன்றின் மேல் தோன்றுகிறது.

விளக்கம்: தினைப் புனத்தில் (நிலத்தில்) விளையும் தினையைப் பறவைகளிடம் இருந்து காக்கத் தலைவி அங்கு சென்று காவலிருப்பது வழக்கம். அந்த நேரத்தில் தலைவனைக் கண்டு மகிழச் சூழல் அமையும். மழை பொழியவில்லை, அதனால் தினை விளையாது. அதைக் காக்கும்பொருட்டுச் சென்று தலைவனைக் காண்பது நடக்காது என்று வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழி ஆற்றுப்படுத்தக் கூறியது. தலைவன் வாழும் குன்றின் மேல் மழைமேகங்கள் தோன்றுவதைக் காண்பித்து உன் தினைபுனம்  காய்ந்து போகாது, மழை மேகங்கள் தோன்றுகின்றன என்று ஆறுதல் தருமாறு சொல்கிறாள். தாயே என்று தோழியை அழைப்பது அன்புமிகுதியால்.

சொற்பொருள்: அன்னாய் வாழி - வாழ்க தாயே, வேண்டு அன்னை - கேட்பாயாக, நன்றும் - நல்லது, உணங்குல - உலர்ந்து, கொல்லோ - எதிர்மறை (உலர்ந்து போகாது), நின் தினையே - உன் தினையே, உவக்காண் - அங்கே பார், நிணம் - கொழுப்பு/மாமிசம் , பொதி - பொதிந்த, வழுக்கின் - கொழுப்பு/மாமிசம், நிணம் பொதி வழுக்கின் - கொழுப்பு நிறைந்த மாமிசத்தை மூடியிருக்கும் கொழுப்பு, தோன்றும் - தோன்றுகிறது, மழைதலை வைத்து - மழை மேகங்களால் மூடப்பட்ட, அவர் மணி நெடுங்குன்றே - அவருடைய உயர்ந்த குன்றே

என் பாடல்:
"வாழ்கநீ  தோழியே, வேண்டுகிறேன்  கேளு 
உலர்ந்து விடுமோஉன் தினையே? அங்கேபார்! 
புலால்மேல் பொதிந்தக்  கொழுப்பெனத்  தோன்றும்  
மழைமேகம் சூழ்ந்த  அவர்நெடுங் குன்றே"


38 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி
    பாடலுக்கு சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தேனே மதுரமே தங்கள்
    எளிய அற்புதக் கவியே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஒரு சங்கப் படலை அறிந்ததில் மகிழ்ச்சி. எவ்வளவு நுட்பமாக சொல்லப்பட்டிருகிறது!
    இது போன்ற பாடல்களை பாடப் புத்தகத்தில் கடமைக்காக படித்ததோடு சரி. இப்போது அனுபவித்து படிக்க முடிகிறது நல்ல முயற்சி பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்மா ...நலமா?
    அருமை மா தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  5. சின்னச் சின்ன பாடல்களாக இருக்கும் ஐங்குறுநூற்றிற்கு எளிமையான உரையும், விளக்கமும் உரையாசிரியர் புலியூர்க்கேசிகனை நினைவு படுத்தியது. ஆங்கில மொழியாக்கம் படித்தேன். வாழ்க உமது தமிழ்த் தொண்டு.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் படித்துக் கருத்திட்டதற்கு உளமார்ந்த நன்றி ஐயா

      நீக்கு
  6. அருமையான ஓர் இலக்கியப் பகிர்வு. முன்பொரு பதிவில் கூறியதுபோல தங்களின் பதிவுகளால் நான் சங்க இலக்கியம் படிக்க ஆரம்பித்துவிடுவேன் போலுள்ளது. எளிய உரையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான விளக்கத்துடன் அழைகிய இலக்கியப் பாடல். தங்கள் உரை எளியதாக இருப்பதால் வெகுஎளிதாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆங்கிலத்திலும் தாங்கள் தருவது உன்னதமான பணி. எல்லோரும் அறிய ஒரு அரிய வாய்ப்பு!!!

    பதிலளிநீக்கு
  8. அருமை...
    வாழ்க ... தமிழ்.....
    பாராட்டுக்கள்
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
  9. என்ன இவ்வளவு நாளா ஆளைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..
    அடுத்தநாள் பண்டிகை
    முதல்நாளிரவு வீட்டுக்குத் தாமதமாக வரும் அப்பா மேல் கோவத்தோடு இருக்கும் குழந்தைகள் அப்பாவின் பையைக் குடைந்து அவர்களுக்கு ஆசையானவை அனைத்தும் இருப்பதைப் பார்த்து மகிழந்து கோபத்தை மறந்துவிடுவதைப் போல.. வந்தாலும் வந்தாய்.. அழகான பாடல்-விளக்கம்-மொழிபெயர்ப்போடு. அருமைம்மா. பொருளில் வரும் உலர்ந்து மற்றும் இணைந்திருக்கும் ஆகிய சொற்களை மட்டும் முறையே வறண்டு, ஒட்டிக்கிடக்கும் என்று அமைத்திருந்தால் இன்னும் இயல்பாகவும் அழகாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனினும் இதுபோலும் உன் முயற்சி சிறப்பானது அதற்கு என் தலைதாழ்ந்த வணக்கமும் வாழ்த்துகளும் கிரேஸ். த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா..
      தெரியும் அண்ணா, சங்க இலக்கியப் பதிவு எழுதிவிட்டுத்தான் உங்களை அழைக்க வேண்டும் என்று இருந்தேன் :) ஆனால் உங்களைக் காணவில்லையே என்றும் நினைத்தேன்..
      வறண்டு என்று மாற்றிவிட்டேன் அண்ணா, ஒட்டி என்பதை விட பொதிந்து நன்றாய் இருக்குமோ என்று அதையும் மாற்றிவிட்டேன்..மிக்க நன்றி அண்ணா.

      இனியவை நாற்பது பாடல் நீங்கள் பார்க்கவில்லை அண்ணா,
      http://thaenmaduratamil.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81

      நீக்கு
  10. சூப்பர் கிரேஸ் . உங்க பாடலும் விளக்கமும் :)

    பதிலளிநீக்கு
  11. ***தினைப் புனத்தில் (நிலத்தில்) விளையும் தினையைப் பறவைகளிடம் இருந்து காக்கத் தலைவி அங்கு சென்று காவலிருப்பது வழக்கம். அந்த நேரத்தில் தலைவனைக் கண்டு மகிழச் சூழல் அமையும். மழை பொழியவில்லை, அதனால் தினை விளையாது. அதைக் காக்கும்பொருட்டுச் சென்று தலைவனைக் காண்பது நடக்காது என்று வருந்தியிருக்கும் தலைவிக்குத் தோழி ஆற்றுப்படுத்தக் கூறியது. தலைவன் வாழும் குன்றின் மேல் மழைமேகங்கள் தோன்றுவதைக் காண்பித்து உன் தினைபுனம் காய்ந்து போகாது, மழை மேகங்கள் தோன்றுகின்றன என்று ஆறுதல் தருமாறு சொல்கிறாள். ****

    உங்ககிட்ட எனக்குப் பிடிச்சது, என்னை மாதிரி பாமரனையும் மனதில் கொண்டு அழகா பொருளும் கொடுத்துடுறீங்க பாருங்க அதான். :) ஒரு நல்லாசிரியைனா வகுப்பில் உள்ள மக்குக்கும் புரியும்படி பாடம் எடுக்கணும். ஒரு நல்ல தமிழாவலர், வலைபதிவர்னா, உங்களைப் போல்தான் இருக்கணும் கிரேஸ்!

    -----------------------------

    எப்படியோ மழை வந்தால் சரிதான். :) காதலனைப் பார்க்க, மழை வரணும்னு ஏங்கும் தலைவியின் சுயநலத்தில் பொதுநலமும் இருக்கத்தான் செய்யுது. :)

    *** தாயே என்று தோழியை அழைப்பது அன்புமிகுதியால்.****

    இப்போல்லாம் "டியர்" "செல்லம்" "அம்முக்குட்டி"னுதான் தோழியை அன்புமிகுதியால் அழைக்கிறாங்க! இல்லையா, கிரேஸ்? :))).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்..ம்.. பொறாமை பொறாமை ஹா ஹா ... இல்லம்மா தேனு

      நீக்கு
    2. ஆஹா நீண்ட நாட்களின் பின் அழகான கவிதையும் விளக்கமும் கண்டு மகிழ்ந்தேன். என்ன அருமையான தோழி ஆறுதல் வழங்க எல்லோருக்கும் இப்படிக் கிடைப்பார்களா என்ன? அதற்கேற்ப தங்கள் கவிதையும் அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் ...!

      நீக்கு
    3. கிரேஸ் டியர் :))))
      சாரி!!! ரெண்டு பதிவு பார்க்கமுடியல:(( இப்போ பார்த்துவிடுவேன்:) ரொம்ப அழகா அந்த காட்சியை கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள் டா:) இனியாச்செல்லம் caught the point:))) cool:)

      நீக்கு
    4. மிக்க நன்றி வருண்... :)
      ஹாஹா ஆமாம் கால மாற்றம்..தோழிகளை அடையாளம் கண்டு சொல்லியிருப்பது மகிழ்ச்சியே :))

      நீக்கு
    5. நன்றி அன்புத்தோழி இனியா..நீங்கள் தேனு என்று சொன்னதில் பூரித்துவிட்டேன் டியர் ... :)

      நீக்கு
    6. மைதிலி டியர், :)))
      நீங்க இரண்டையும் பார்த்துக் கருத்திட்டப் பிறகே நான் இங்கு வருகிறேன் :)
      மிக்க நன்றி

      நீக்கு
  12. அன்புச்சகோ,
    உங்கள் தமிழ்ப்பணிக்குத் தலைவணங்குகிறேன். இதன் ஆங்கில ஆக்கத்தையும் கண்டேன் . மிகச் சிறப்பு.
    என்னைக் கவர்ந்த வரி, “ மழைதலை வைத்த மணிநெடுங் குன்று “
    எவ்வளவு அழகான கற்பனை................!
    இதனால்தாம் இவ்விலக்கியங்களைச் செவ்விலக்கியங்கள் என்று நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
    மழையற்ற தினை .............
    இது தலைவியின் புலத்தில் விதைக்கப்பட்டிருக்கும் தினையாய் மட்டுமல்ல,
    “ நின் தினை உணங்கல் கொல்லோ “
    எனத் தோழி கேட்பதில், “ தினை “ என்பது தலைவி, அவளது காதல், கனவுகள், எதிர்பார்ப்புகள், கற்பனைகள் அனைத்திற்கும் குறியீடு .
    தலைவனின் அளிதான் இங்கு மழை.
    ஆனால் அவன் வரவில்லை.
    ஆற்றாமையால் மழையற்ற தினையாய்ச்சோர்ந்திருக்கிறாள் தலைவி.
    தோழிக்குத் தலைவியின் கலக்கம் காணக் கூடவில்லை.
    தோழி ,
    அவன் மலையைக் காட்டி . “உனக்கு அதைக்கண்டதும் என்ன தோன்றுகிறது?“ எனக்கேட்கிறாள்.
    அம்மலையில் மேகங்கள் பொதிந்து கிடக்கின்றன.
    ஏற்கனவே தலைவி தலைவன்மீது ஏகப்பட்ட வெறுப்பில் இருக்கிறாள்,
    அவள் தலைவனின் மலையைப் பார்த்துச் சொல்கிறாள்.
    “அங்கு தென்படுவதுதானே? அது உயிரற்ற அதனால் உணர்வும் அற்ற கொஞ்சம் கொழுப்பெடுத்த ( கொழுப்பு போர்த்திய ) சதைத்துண்டு.“
    தோழிக்குத் தலைவியின் கோபம் தெரிகிறது. அவள் சொல்கிறாள்,
    “அடியேய்! அது குன்று.
    சாதாரணக்குன்றல்ல. நெடுங்குன்று.
    வெறும் நெடுங்குன்றல்ல. வளம்மிகுந்த மணிகளைத் தன்னகத்தே கொண்ட செழிப்பு மிக்க நெடுங்குன்று. “ மணிநெடுங்குன்று.
    அதன் தலையில் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?
    நீ எதற்காகத் தவம் கிடக்கிறாயோ, அந்த மேகம்.“
    தலைவியின் ஆற்றாமையைத் தணிவிக்கும் மொழிகள் அவை.

    உண்மையில் “ அவர் “ தான் அம்மணி நெடுங்குன்று.
    தலைவிக்குத் தேவையானவற்றைத் தலைமேல் தாங்கிச் செய்யக் காத்திருக்கும் மழை தலை வைத்த ( அவர் ) மணிநெடுங்குன்று.

    தோழியின் கூற்றில் குறிப்பிருக்கிறது,

    “உயிரோ உணர்வோ அற்ற கொழுப்பு மூடிய சதைப்பிண்டமாகவோ அதைக் காண்பது உன் பார்வைக் கோளாறன்றி வேறில்லை.

    அவன் வருவான்.
    மலைதலைவைத்த மணிநெடுங்குன்று நிச்சயம், உன் நின் தினை உணங்க ஒண்ணாது.“
    என்பது அக்குறிப்பு.
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தலைவன் தலைவி தோழி இதைப்பதிந்த புலவன் இல்லை.
    உணங்கும் தினையை உட்கொண்டு உள்ளொளியும் நம்பிக்கை ஒட்டிக் கிடக்கும் நிலம் இருக்கிறது. இதோ தூரத்தில் மழை தலை வைத்த ஒரு மணிநெடுங்குன்று கிடக்கிறது.
    இப்பொழுதும் கூட, ஒன்று இன்னொன்றிற்காய்க் காலம் கடந்து காத்துக் கொண்டிருக்கிறது.
    எங்கெங்கோ இழுத்துப் போகிறது, பாடலும் அதைச் சிறப்புச் செய்யும் தங்களின் உரையாக்கமும்.
    தொடருங்கள் சகோ!
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி.
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை..உங்கள் கருத்துரையைப் படித்து மெய் மறந்து அமர்ந்திருக்கிறேன்..எப்படி அண்ணா? இவ்வளவு அருமையாக எளிமையாக ஆழமான விளக்கம் கொடுக்கிறீர்கள்?
      நான் எழுதுவதைக் கொஞ்சகாலம் விட்டுவிட்டு இன்னும் நிறையப் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது..நான் அந்த காட்சிக்கே சென்றுவிட்டேன்..மிக்க நன்றி அண்ணா .
      உங்கள் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றிகள் அண்ணா..நீங்கள தரும் இந்த ஊக்கத்திற்கு நன்றி ....

      நீக்கு
    2. ஆங்கிலத்திலும் படித்துக் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா..

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...