Monday, April 7, 2014

ஐங்குறுநூறு 25 - இழை நெகிழ வருந்த வைக்குதேஐங்குறுநூறு 25 - பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை தோழி தலைவியிடம் சொன்னது 
 
"புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்"
 
வயலைக் கொடி (red purslane)

எளிய உரை: புயலுக்குப் பின் புதிதாய் முளைக்கும் பசுமையான காய்களை உடைய சிவந்த வயலைக் கொடியை நண்டு அறுக்கும் கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பல பெண்களின் அணிகலன்களை நெகிழச் செய்யும் தாயே.

விளக்கம்: பசுமையான காய்களையுடைய வயலைக் கொடியை நண்டு அறுத்து வளர விடாமல் பாழாக்குவது போலத் தலைவனும் பல பெண்களின் வாழ்வை பாழாக்குகிறான். அவனால் வருந்தி அணிகலன் நெகிழும் பெண்கள் பலர் என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள். தலைவனின் பரத்தமைக் குணத்தையே இவ்வாறுக் குறிப்பிடுகிறாள் தோழி. தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியிடம், நீ மட்டும் இல்லை, பல பெண்களை இப்படி ஏமாற்றியிருக்கிறான்..நீ இன்னும் அவனை நினைத்து வருந்துகிறாயே என்று தோழி கோபப்பட்டிருக்கலாம். தோழியை 'அன்னாய்' என்று அழைக்கும் வழக்கம் இருந்தது சங்ககாலத்தில்.

சொற்பொருள்: புயல் புறந்தந்த – மழை வளமாக்கும், புனிற்று வளர் – புதியதாய் முளைக்கும், பைங்காய் – பசுமையான காய், வயலைச் செங்கொடி – சிகப்பு கொடி, கள்வன் அறுக்கும் – நண்டு அறுக்கும், கழனி ஊரன் மார்பு – கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பலர்க்கு – பலருக்கு, இழை – அணிகலன், நெகிழ் செல்லல் ஆகும் – கழண்டு செல்லும், அன்னாய் – தாய்

என் பாடல்:
"புயலுக்குப் பின்முளைத்த பசுமையான காய்களுடைய

வயலைக் கொடியை களவன் அறுக்கும்

கழனி ஊரன் மார்பு பல பெண்களின்

இழை நெகிழ வருந்த வைக்குதே தோழி!"

இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்.

28 comments:

 1. சிறப்பான விளக்கம்! சங்க காலம் தொட்டு இப்படி சிலர் இருந்திருக்கிறார்கள் என்பது வருத்தமான விசயம்தான்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..அன்றிலிருந்தே இந்நிலையும் அதைச் சொல்லி எச்சரிக்கையாய் இருக்கச் சொல்லும் நிலையும்..
   உங்கள் கருத்துரைக்கு நன்றி சகோ.

   Delete
 2. அருமையான எளிமையான
  கவிதையாக்கி ரசிக்கத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 3. வணக்கம் சகோதரே
  ஐங்குறுநூறு பாடலில் உவமைகளும் சொல்லாட்சிகளும் வியக்க வைக்கிறது. அப்பாடலை எளிமைப் படுத்திய உங்களுக்கு நன்றிகள். சிறுவர்கள் முதல் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் அமைந்த தங்கள் வரிகள் மிளிர்கிறது சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.
   உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 4. எத்தனை நயமாய், மறைபொருளாய் அறிவுரை சொல்லியிருக்கிறார் தோழி!
  நான் ஐங்குறுநூறு தோழியையும் , என் தோழி கிரேசையும் சேர்த்து சொல்கிறேன்!:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா நான் என்ன அறிவுரை சொல்லிவிட்டேன் தோழி? பாடலில் இருப்பதுதானே...
   உங்கள் கருத்திற்கு நன்றி மைதிலி.

   Delete
 5. ஆஹா அருமை.அவங்க அப்பவே அப்படிதானா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா...என்ன சொல்றது... :(

   Delete
 6. ஆகா... மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்.

   Delete
 7. வணக்கம் அக்கா...

  அந்தக் காலத்துலயும் இப்படி சில ஏமாற்றுப் பேர் வழி இருந்துருக்காங்க... அதனையும் திறமையா சொல்லியிருக்கற நம்ம புலவர்களை நிச்சயம் பாராட்டித் தான் ஆகணும். இப்படி எளிமையா சொல்ற உங்கள பாராட்டுற மாதிரியே...

  தொடருங்கள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெற்றிவேல்.
   ஆமாம்..எல்லாக் காலத்திலும் ஏமாற்றுபவர் உண்டு..
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete

 8. வணக்கம்!

  நல்லோரம் போகியார் நல்கினார் நற்றமிழில்
  பல்லாரம் மின்னிடும் பாட்டு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா..
   அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கருத்தை..மிக்க நன்றி.

   Delete
 9. சூப்பர் கிரேஸ் .. எளிமையான விளக்கமும், அருமையான பாடலும்

  ReplyDelete
 10. ரசித்தேன்
  சுவைத்தேன்
  நன்றிசகோதரியாரே

  ReplyDelete
 11. சரி சரி தமிழ் கலாசாரத்தில் தலைவர்களின் பரத்தமை பல நூற்றண்டுகளாக தொடர்கிறது ...
  நல்ல முயற்சி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..
   மிக்க நன்றி மது.

   Delete
 12. பழம்பாடல்களில் தோழி தலைவியிடம் நல்லதையும் அல்லாத‌தையும் சொல்லி விளக்குவது மரபு! இங்கேயும் இந்தப்பாடலில் தோழி தன் அறிவுரையை அழகாய் கையாண்டிருப்பது அழகு! உங்களின் தமிழாக்கம் தெளிவாய் சிறப்பாய் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்...அழகான ஒரு மரபு. உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி.

   Delete
 13. சிறப்பான விளக்கம். உங்கள் பாடலும் எளிதான மொழியில். பாராட்டுகள்.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...