கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

  




கிழக்கு பெட்டி ஆமை 

கடப்பது என்ன அணில் குட்டியா?
வேறுபட்டுத் தெரிகிறதே!
வண்டியை நிறுத்திவிட்டேன்
ஆகா! அணிலில்லை ஆமை!
கடக்கட்டும் என நான் இருந்தால்
அசையாமல் அவளும் இருக்கிறாள்
பழுப்புக் கண்ணினால் பெண்ணாம்
அவனென்றால் கண் சிவப்பாம்
கிழக்கு பெட்டி ஆமையின் உடற்கூறு
வழிவிட்டு இருவரும் நிற்க
கரைந்த நிமிடங்களில்
கவனமாகக் கடந்த ஒரு வண்டிக்குத்
தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்
மெதுவாய்ப் பக்கம் சென்றேன்
பயப்படாமல் பார்த்து நின்றாள்
நட்பின் நறுமணம் காற்றில்
நினைவுப் பரிசு கைபேசியில்
நலம் வாழச்சொல்லி நங்கையை
நத்தையாய் மாற்றினேன் வண்டியை
நிறுத்தி மீண்டும் பார்க்கச் சென்றால்
சாலையில் காணவில்லை அவளை
பருந்து சத்தம் கேட்டுப் பதைத்தேன்
பார்வையால் அங்குலம் அளந்தேன்
புல்லில் அமர்ந்து பத்திரம் என்றாள்
மகிழ்ந்து நானும் கவிதை செய்தேன்!

- கிரேஸ் பிரதிபா
அக்டோபர் 3, 2024.






என் ஆங்கிலக் கவிதையையும் வாசியுங்கள்:

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...