மதுரை பதிவர் சந்திப்பில் என் முதல் கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' வெளியிடப்பட்டது பெரும் மகிழ்ச்சி. பல பதிவர்களையும் நேரில் பார்த்துப் பேசியது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
இப்பொழுது நூல் வெளியீடு பற்றி....
என் தந்தை திரு.வின்சென்ட் வெளியிட திரு.முத்துநிலவன் அண்ணா பெற்றுக்கொண்டார். கஸ்தூரிரங்கன் அண்ணாவும் எங்கள் குடும்பநண்பரான திரு.ஓ.முத்து அவர்களும் வாழ்த்திப்பேசினார்கள்.
என் தந்தை பேசும்பொழுது 'ஊரார் மெச்சி உனைப் புகழ்ந்தால் மெய்சிலிர்க்குதடி' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்பத் தன் மெய்சிலிர்ப்பதை எனக்குச் சொல்லி இப்போதைய என் கவிதைகள் மெல்லிய அலைகள் போல் இருப்பதாகவும், வயது முதிர முதிர அனுபவம் பெருக பெருக சமுதாயச் சீர்திருத்தத்திற்கான ஆழமான கருத்துக்களையுடைய கவிதைகளை நான் எழுதவேண்டும் என்று சொல்லி வாழ்த்தினார்கள்.
அடுத்துப் பேசிய முத்துநிலவன் அண்ணா அவர்கள்,
நற்றிணைக் காதலியின் இன்றைய கவிதைகள் என்ற தலைப்பில் என் நூலிற்கு முன்னுரை தந்திருக்கிறார்கள். நற்றிணைப் பாடலில் தலைவி தலைவனிடம் ஒரு மரத்தின் கீழ், "இந்த மரத்தின் கீழ் என்னைத் தொடாதே, ஏனென்றால் இந்த மரம் என் சகோதரி, என்னையும் இந்த மரத்தையும் ஒன்றாகத் தான் என் தாய் வளர்த்தார்கள்'. அதுபோல இயற்கையை ஆராதிக்கும் பழந்தமிழை எடுத்துக்கொண்டு, சங்க இலக்கியத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவதைப் பாராட்டினார்கள். அதோடு இன்றையச் சமுதாயத்திற்கு ஏற்ற கவிதைகளை என் நூலில் கொடுத்திருப்பதாகச் சொல்லி வாழ்த்தினார்கள்.
வாழ்த்திப்பேசிய கஸ்தூரிரங்கன் அண்ணா அவர்கள், "
நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். கவிஞர் குளிர்களி என ஐஸ்க்ரீமை சொல்கிறபொழுதும் சூரியனை அனலி என்று செல்லமாய் சினுங்குகிறபோழுதும், கணிப்பொறி வைரசை நச்சு நிரல் என்கிற பொழுதும் தமிழ் இன்னும் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு துளிர் விடுகிறது." என்று பாராட்டி இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்டி வாழ்த்தினார்கள். அவருடைய வாழ்த்துரை இந்த இணைப்பில்.

அடுத்து அப்பாவின் நண்பரும் எங்கள் குடும்பநண்பருமான திரு.ஓ.முத்து அவர்கள். இலக்கிய ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் கொண்ட முத்து மாமா வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவையான உரையாடல்கள் இருக்கும். பல நூல்களை மேற்கோள் காட்டியும் பேசுவார்கள். நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்து என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மகிழும் அவர்கள் என் நூல் வெளியீட்டில் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பேசும்பொழுது, 'இது ஆரம்பம் தான், ஆலமரம் போல இன்னும் பல விழுதுகள் விட்டு பல கவிதைத்தொகுப்புகள் வரும்' என்று வாழ்த்தித் தொழிற்சங்கத் தலைவரும் முற்போக்குவாதியுமான என் தந்தையின் வளர்ப்பும் தாக்கமும் என் கவிதைகளில் இருப்பதாகச் சொன்னார்கள். தன்னை கவர்ந்த கவிதைகளைச் சொல்லி கவிதைவானில் பிரதிபா ஒளிர்வார், எண்ணற்ற புத்தகங்களைத் தருவார் என்றும் வாழ்த்தினார்கள்.

என் கணவரும் குழந்தைகளும் அன்பு நண்பர்களும் வந்திருக்க என் நூல் வெளியீடு! பல குழப்பங்களுக்கிடையே இனிதே நிறைவேறிய கனவு. அக்டோபர் பதினெட்டாம் தேதியே அமெரிக்கா செல்வதாக இருந்த நிலையில், குழப்பத்திற்கிடையே என் புத்தக வேலையைத் துவங்கினேன். பதிவர் சந்திப்பன்று இருக்க மாட்டேன் என்று நண்பர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனாலும் என் கணவர் பயணத்தை இரு வாரங்கள் தள்ளிப்போட்டு நூலை வெளியிட்டுவிட்டு வரும் மகிழ்ச்சியை அளித்தார். செப்டம்பர் 23ஆம் தேதி முதல் வாராவாரம் பயணங்கள். அதற்கிடையே எப்படியோ என் நூல் வடிவம் பெற்று இனிதாய் வெளியிடப்பட்டுவிட்டது. பயணம் ஓயாமல் பதிவர் சந்திப்பு முடிந்து இரவோடிரவாக பெங்களூரு சென்று இதோ அட்லாண்டாவும் வந்துவிட்டேன். சென்ற ஞாயிறு தான் பதிவர் சந்திப்பா என்று வியப்பாக இருக்கிறது!!
வீடு தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்பதிவை இடுகிறேன். இன்னும் எழுத ஆசை இருந்தாலும் இத்தோடு முடிக்கின்றேன்...
பதிவர் சந்திப்பைப் பற்றி மற்றொரு பதிவு இடுவேன்.