நெற்பல பொலிக

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.
அதை வாசித்துக் கொண்டிருந்தபொழுது எனக்கு சட்டென்று உரைத்தது என்னவென்றால் நாட்டுக்கு என்ன வேண்டும் என்றும் நாம் விழைகிறோமோ அவையெல்லாம் இப்பாடல்களில் அழகாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. முதல் பத்தான வேட்கைப்பத்து என்ற பத்துப் பாடல்களில் இருந்து நாட்டிற்கு வேண்டுவதாக அமைந்த அந்த ஒரு வரியை மட்டும் எடுத்துத் தனியாகத் தொடுத்தால் உருவான அழகியச் சரம் கீழே கொடுத்துள்ளேன்.

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவில் லாகுக
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க

இச்சரத்தின் மணம் சொல்வது என்னவென்றால்:
நெல் நன்றாக விளையட்டும், பொன்(வளம்) பெருகிச் சிறக்கட்டும்.
வயல்கள் நன்றாக விளையட்டும், இரவலர் வந்து பயன் பெறட்டும்.
பால் வளம் பெருகட்டும், பகடு(எருது) பலவாகப் பெருகட்டும்.
பகைவர் புல்  உண்ணட்டும்(தோற்றுப்போகட்டும்), பார்ப்பார் வேதம் ஓதட்டும். பசி இல்லாமல் ஆகட்டும், பிணியும் நோயும் நீங்கட்டும்.
வேந்தனுடைய பகை தணியட்டும் (அழியட்டும்), பல ஆண்டுகள் செழிக்கட்டும்.
அறம் நன்றாகச் சிறக்கட்டும், அல்லது(தீயது) கெடட்டும்(அழியட்டும்).
அரசு முறையாக ஆட்சி செய்யட்டும், களவு இல்லாமல் ஆகட்டும்.
நல்லதுப்  பெரிதாய்ச் சிறக்கட்டும், தீது இல்லாமல் ஆகட்டும்.
மாரி (மழை) வாய்க்கட்டும், வளம் நன்றாகச் சிறக்கட்டும்.

எப்படி அருமையானப் பாடல் கிடைத்ததுப் பார்த்தீர்களா? புத்தாண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த நாளிற்கு ஏற்ற பாடல். உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இறுதியில் தன்னலம் ஒன்று: என் எழுத்து சிறக்க :)
என் 101வதுப்  பதிவைப் புத்தாண்டு தினத்திலேயே பதிவு செய்து துவங்குகிறேன்.

சித்திரையே வா! எம் வாழ்வின் சித்திரமே வா! (நூறாவது பதிவு)

 

சித்திரையே வா எம் வாழ்வின் சித்திரமே வா 
சித்தம் எல்லாம் சமாதானம் நிரப்ப வா 
சிந்தனை எல்லாம் சிறக்க வா 
சிரிப்பு எங்கும் உவப்பில் மலர வா 

கன்னல் சுவை வாழ்வில் சேர்க்க வா 
கனி அமுது அனைவர்க்கும் கிடைக்க வா 
கல்லாமையும் இல்லாமையும் நீங்க வா
கள்ளமில்லா அன்பு எங்கும் நிறைய வா  

இனிமையாய் இதம் சேர்க்க வா 
இன்னல் இற்றுப் போக வா 
இனியப் புத்தாண்டை முன்னுரைத்து வா 
இத்தரணி எல்லாம் இன்பம் பொங்க வா 

என் மகன் வகுப்பில் நம் நாடு பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்யப் போயிருந்தேன். காகிதத்தில் தீபம் செய்வதற்கான ஒரு செயல்பாடும் கோலம் ஒன்றை வண்ணமிடும் வண்ணம் அச்சு எடுத்தும் கற்றுக்கொடுத்தேன். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தது. என் சேலை பற்றியும் பொட்டு  பற்றியும் கேள்வி கேட்டார்கள். மாவிலைக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் இருப்பதைச் சொன்னவுடன் ஆசிரியருக்கு அவ்வளவு ஆச்சரியம்! "மாம்பழம் பிடிக்கும், இனிமேல் இலையும் வாங்குகிறேன்", என்று சொன்னார்கள்! :)

என் மகன் செய்த தீபத்துடனும் வண்ணமிட்டக் கோலத்துடனும், 

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



எனது நூறாவதுப் பதிவைத் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுமாறு  அமைந்ததில் அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அதுவும் புத்தாண்டை வரவேற்று!
என் வலைப்பூவை வாசித்தும் கருத்துகளிட்டும் ஊக்கப் படுத்தும் அனைவருக்கும் நன்றி!

கலங்குபகை அறியா

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்பதாவது நூல் பட்டினப்பாலை ஆகும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பாடும் பாலைத் திணை நூலாகும். பட்டினப்பாலை திருமாவளவன் என்ற சோழ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுப் பாடப்பட்டது.

அதில் அக்காலத்தின் செல்வச் செழிப்பைப் பாடும் ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

"அகல் நகர் வியன் முற்றத்துச் 
சுடர் நுதல் மட நோக்கின் 
நேர்இழை மகளிர் உணங்கு உணாக்கவரும் 
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை 
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் 
முக்கார் சிறுதேர் முன்வழி விளக்கும் 
விலங்குபகை அல்லது கலங்குபகை அறியா 
கொழும் பல்குடிச் செழும்பாக்கத்து "

பாடலின் உரை: ஒளி பொருந்திய நெற்றியும் மென்மையான பார்வையுமுடைய, நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்த மகளிர், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில் உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட , வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்தக் குழையினை (காதணியை) எறிவர். அக்குழை, பொன்னாலான அணிகலன்களை கால்களில் அணிந்த சிறுவர், குதிரை இன்றி கையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறு தேரினை (நடை பயிலும் வண்டி) முன் செல்ல விடாமல் தடுக்கும். இப்படித் தடைகளாக வரும் பகை அன்றி கலக்கமுறுவதற்கான வேறு பகையை அறியாத, செல்வம் நிறைந்த பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற செழிப்பான கடற்கரையை ஒட்டிய ஊர் காவிரிப்பூம்பட்டினம்.

இவ்வாறாக காவிரிபூம்பட்டினத்தின் செழிப்பைச் சொல்லும் இப்பாடல் சோழ நாட்டின் செல்வத்தையும் பகை இன்றி வாழ்ந்த காலத்தையும் நமக்குச் சொல்கிறது.

கோழியைத் துரத்த காதணியை எறிந்தனரா? எவ்வளவுச் செல்வச் செழிப்பு இருந்திருக்கிறது! சிறுவர் நடை பயிலும் மூன்று சக்கர வண்டி சங்க காலத்தில் பயன்படுத்தியதையும் அறியலாம். கோழியைத் துரத்த எறிந்த குழை சிறுவர் வண்டிக்கு ஏற்படுத்திய தடையைத் தவிரக் கலக்கம் கொள்ளுமாறு வேறு எந்தப் பகையும் இல்லையாம். பல இன மக்களும் சேர்ந்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனராம். அத்தகைய செல்வச்செழிப்பும் கலங்கு பகை அறியாத நிலையும் மீண்டும் வந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

தேநீர் குடிக்கலாம் வாங்க...


"வாங்க தேநீர் சாப்பிடலாம்" இது 1950களுக்கு அப்புறம் தான் மிகப் பிரபலம் ஆனதாகப் படித்தேன். அதற்கு முன்னர் மருத்துவ பலன்களுக்காக தேநீர் பயன்படுத்தப்பட்டது போல. அதிலும் பல வகை மூலிகைச் செடிகள் பயன்படுத்தப்பட்டன - அதுதான் கஷாயமோ? ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தேனீர் தோட்டங்கள் அதிகமாக்கப்பட்டன. இன்று தேயிலை என்று சொல்லப்படும் செடிகள் பிரபலமானது ஆங்கிலேயரால். இந்தியத் தேநீர் வாரியம் 1950ல் ஏற்படுத்தப்பட்டு தேநீர் விளம்பரம் ஆரம்பித்ததாம். இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலையில் 70% இந்தியாவிலேயே நுகரப்படுகிரதாம்.
ஆமாம் அதிலென்ன அதிசயம் இருக்கப் போகிறது..

இரு நண்பர்கள் சந்தித்தால் தேநீர்
தேநீர் வேண்டுமென்றால் நண்பர்கள் சந்திப்பு;

வேலை அதிகமா? களைப்பு  நீங்க தேநீர்!
வேலை இல்லையா? பொழுது போக தேநீர்!

படிக்க வேண்டுமா? தேநீர்!
படம் பார்க்க வேண்டுமா? தேநீர்!

விழித்திருக்க வேண்டுமா? தேநீர்!
உறக்கம் வரவில்லையா? தேநீர்!

காலை 6 அல்லது 7 மணியா? தேநீர்!
மாலை 4 அல்லது 5 மணியா? தேநீர்!

சிந்திக்க வேண்டுமா? தேநீர்!
சிரிக்க வேண்டுமா? தேநீர்!

கோபம் தணிக்க தேநீர்!
உபசரிக்க வேண்டுமா? தேநீர்!

....

அட போதும், நிறுத்திக் கொள்கிறேன், பட்டியல் நீளமாகப் போகிறது!
உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை போல, தேநீர் இல்லாமலா? இப்படி இருந்தால் விளையும் தேநீரில் 70% என்ன 100% நாமே குடித்துவிடலாம். ஆனால் எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. நம்ம ஊரில் தேநீர் அறிமுகப்படுத்திவிட்டு இன்று உலகமெல்லாம் பல வித ருசிகளில் தேநீர்! எலுமிச்சை தேநீர், இஞ்சி தேநீர் என்று.  இஞ்சி தேநீர் எப்படி செய்ய வேண்டுமாம் என்று கேட்டால், நறுக்கிய இஞ்சித் துண்டுகளை  நீரில் போட்டுக் கொதிக்கவைத்து பின்னர் தேன் சேர்த்து குடிக்கவாம்!! அட அது நம்ம கஷாயம் இல்லிங்களா?
சரி, எலுமிச்சைத் தேநீர் எப்படிங்க செய்றதுனு கேட்டால், தண்ணீரைக் கொதிக்கவைத்து எலுமிச்சை சாறு சேர்த்து தேனும் கலந்து குடிக்கவாம்!!
ஆனால் நம்ம ஊருல எல்லாத்துக்கும் தேயிலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து எழுமிச்சையோ, இஞ்சியோ, தேனோ சேர்த்து பாலும் சேர்த்து..எனக்கு ஒரே குழப்பம் போங்க...அதோட தேநீர் ஆராய்ச்சிய விட்டுடலாம்..

ஆமாம், நம்ம காளமேகப் புலவரு பாடின மோரு என்னங்க ஆச்சு? வந்தவனுக்கு மோரக் குடுத்துப் பழக்காம, அவன் கொண்டுவந்தத நல்லாப் பழகிக்கிட்டோமே! சரிங்க, ரொம்ப யோசிச்சு...

தேநீர் சாப்பிடலாம் வாங்க! :)

ஒரு புன்னகை செய்தால்...

இதயமில்லாதவன்
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
அவனுடைய ஒரு புன்னகையில்
சுற்றுப்புறம் எங்கும் ஆயிரம் மலர்கள்
காற்றில் பரவும் நறுமணம்
மனதில் பல ஆயிரம் இராகங்கள்
கோபம் என்ற ரசம் கூடத் தள்ளிப் போய்விடுகிறது
ஆனால்
அவன் புன்னகை செய்யாவிட்டால்
நிலவொளியும் சுடுகிறது
தேனும் கசக்கிறது
இன்னிசையும் இரைச்சலாய்க் கேட்கிறது
யாரைப் பார்த்தாலும் கோபம் பொங்குகிறது
இதயமில்லாதவன்
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
ஒரு புன்னகை செய்தால்
குறைந்தா போய்விடுவான்!

குதிரையும் காக்கையும் - சிறுகதை

என் மகனுக்கு இரண்டரை வயது இருக்கும் பொழுது ஒரு நாள் கதை கேட்டான். நானாக ஏதோ சொல்ல ஆரம்பித்து அவன் போக்குக்கு திசை மாறி 
நகைச்சுவையாக மாறிய கதையை ஆங்கிலத்தில் பதிவு செய்திருந்தேன்...அக்கதை மொழிமாற்றம் செய்து  இங்கே...சிவப்பு வண்ணத்தில் இருப்பது  கதை..நீல வண்ணத்தில் இக்கதையின் கதை!!
ஒரு வெயில் நாளில், ஒரு குதிரை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு குதிரை வடிவ மேகத்தைப் பார்த்தது. உடனே குதிரை மேகத்தைப் பார்த்துக் கனைத்தது. மேகக்குதிரை எங்கே போகிறது என்று கேட்டது. அதற்கு மேகக்குதிரை சொன்னது, "உலகம் சுற்றப் போகிறேன்". புல்வெளியில் இருந்த குதிரை, "நானும் வரட்டுமா?" என்று கேட்டது. மேகக்குதிரையும் குதிரையும் நகர ஆரம்பித்தன.
அப்பொழுது ஒரு ஆப்பிள் படத்தைப் பார்த்த என் மகன், "ஆப்பிள் கதை சொல்லு" என்றான். அதனால் கதையில் ஒரு திருப்புமுனை...
சிறிது தூரம் சென்றவுடன் குதிரைக்குப் பசித்தது. அங்கு சில ஆப்பிள் மரங்களைப் பார்த்த குதிரை, ஒரு ஆப்பிள் பறித்து சாப்பிட்டது.
இங்கு என் மகன், "ஆப்பிள கடிச்சவுடனே காக்கா வந்துச்சு"!! என்றான். என்ன!!! காக்காவா???!!! என்றேன். உடனே அவன், "குட்டிக் காக்கா அம்மா", என்றான் குறும்புப் புன்னகையுடன். இருவரும் சிரித்துக்கொண்டே கதையை தொடர்ந்தோம்.
குதிரை இன்னொரு ஆப்பிள் பறித்துக் கடித்தவுடனே ஒரு காக்கா வெளியில் வந்தது. ஆப்பிளிலிருந்து காக்கா வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குதிரை திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ரொம்ப தூரம் ஓடியபின் மூச்சிரைக்க நின்ற குதிரை ஒரு மரத்தில் ஒரு காக்காவைப் பார்த்தது. உடனே குதிரை சொன்னது, "நீ ஆப்பிளிலிருந்து வந்தாய் என்று எனக்குத் தெரியும்". கோபமுற்ற காக்கா, "நீ என்ன முட்டாளா?" என்று கேட்டுவிட்டுப் பறந்து சென்றது. குதிரை கேட்டதை மற்ற காக்காக்களிடம் சொன்னது. அனைத்துக் காக்கைகளும், "முட்டாள் குதிரை, முட்டாள் குதிரை" என்று கத்த ஆரம்பித்தன. குதிரைக்கு ரொம்ப கோபம் வந்ததால் காக்கைகளை ஒரு உதை உதைத்தது. உதை வாங்கிய காக்கா வலியில் "க்கா" என்று கத்தியது. அப்போதிலிருந்து எல்லா காக்கைகளும் "கா! கா! கா!" என்று கத்துகின்றன!!!

நானும் என் மகனும் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம். தருக்கம் ஏதும் இன்றி சிரிக்க மட்டுமே இக்கதை. :) குதிரை பேசும் இடங்களில் குதிரை போல கனைத்தும் காக்கா பேசும் இடங்களில் காக்கா போலக் கரைந்தும் சொன்னால் பிள்ளைகளுக்கு குதூகலம் தான்!

வருக வசந்தமே!

வசந்தமே நீ  வாராயோ 
என்று அழைத்தேன் 
வந்ததோ என் குரலைக் கேட்டு 
சவுக்கு மரங்கள் 
மஞ்சள் கம்பளம் விரித்து 
வசந்தத்தை வரவேற்கின்றனவோ 
குளவிகளும் சுற்றி சுற்றி வருகின்றனவே 
வாகனங்கள் சாலைகள் 
கதவுகள் சன்னல்கள் 
எங்கும் மஞ்சள் வண்ணம் 



எங்கு தொட்டாலும் 
கரங்கள் மங்களகரம் 
இது வரைக்கும் பரவாயில்லை 
ஆனால் 
மூக்கினுள்ளுமா மஞ்சள் தூவ வேண்டும்?
இனியெங்கும் கேட்கும் 
மகரந்த ஒவ்வாமை என்ற சொல்!
ஆனாலும் உன் வண்ணங்கள் அழகு
உன் இளஞ் சூடு இனிது 
வருக வசந்தமே!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.