ஒவ்வொருவரும் சமநிலைக்கு - உலக மகளிர் நாள் 2020

படம்: நன்றி இணையம் 

உலக பெண்கள் நாள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்கள் நாளுக்கு ஒரு கருத்தை மையமாக அறிவிக்கும். அவ்வகையில் இவ்வாண்டு #EachforEqual, #ஒவ்வொருவரும்சமநிலைக்கு என்பதே கருவாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சமநிலைக்கு, ஒவ்வொருவரும் சமநிலை நோக்கி என்று நாம் கொள்ளலாம்.



இந்த மையக்கரு எத்துனை அழகு என்று உவக்கிறேன். பெண்ணியத்தை அழகாக முன் நிறுத்தும் கருவாக அமைந்ததன் பொருட்டே என் மகிழ்வு.
ஆம், பெண்ணியம் என்றாலே பலரும் முகம் சுழிக்கின்றனர், சினம் கொள்கின்றனர், அறியாமல் வசை பாடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதாவது புரிந்தால் நலமே! பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தித் தொடங்கினாலும் காலப்போக்கில் மருவி மனிதராகப் பிறந்த அனைவரும் சமம், ஒருவரை ஒருவர் மதித்து இணைந்து வாழ வேண்டும் என்பதையே குறிக்கிறது. அங்கும் இங்கும் சிலர் பெண்ணியம் என்ற பெயரில் ஆண்களை எதிர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் உண்மையான சரியான கருத்து அதுவல்ல.

சமைப்பது பெண்கள் மட்டுமே செய்யவேண்டியப் பணி என்று சுமத்துவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு  சமஉரிமை என்ற பெயரில் நான் சமைக்க மாட்டேன், குடும்பத்தில் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று அகம்பாவம் கொள்வது. உயிர்வாழ உணவு அடிப்படைத் தேவையாக இருப்பதன் பொருட்டு மனிதர் ஒவ்வொருவரும் உணவு சமைக்கக் கற்றுக் கொள்வதே சரி. குடும்பம் என்று வரும்பொழுது பொறுப்புகளைப் பகிர்ந்து செய்வதே நலம். இதனை ஆண்களும் பெண்களும் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்ப்பதோ சண்டையிடுவதோ அல்ல. பெண்ணியம் என்பது பொதுவாக மனித உரிமை மீறலை எதிர்ப்பது. அனைவரும் சமம், அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர் என்பதை முன்னிறுத்துவது. அனைவருக்கும், பெண்ணானாலும் ஆணானாலும் உணர்வுகளும் விருப்பங்களும் இலக்குகளும் இருப்பது இயல்பு என்பதை உணர்ந்து, அதனை மதித்துச் சமமாக நடத்தி வாழ்வது. பெண்களும் ஆண்களும் உடல் அளவில் வேறுபட்ட வலிமையைக் கொண்டிருப்பவர் என்பதை ஏற்றுக்கொண்டு மனிதர் என்ற அளவில் சமமே  என்று வலியுறுத்துவது. வேறுபட்ட வலிமைகளை இணைத்துக் கொண்டு இனிது வாழ்வதற்கு வழிவகுப்பது அல்லாமல் தன் வலிமையைக் கொண்டு மற்றவரை அடக்க நினைப்பது அல்ல.

இதனை எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்துகிறேன்,  பின்பற்றுகிறேன். அடுத்தத் தலைமுறையினர்க்கும் கடத்துகிறேன். ஒவ்வொருவரும் சமம் என்ற நிலைக்கு உறுதி ஏற்போம், செயல்படுவோம். #ஒவ்வொருவரும் சமநிலைக்குக்  கைகோர்க்கும் பொழுது சமுதாயம் இனிதாகும். #IWD2020 #EachforEqual

முந்தைய உலக மகளிர் நாள் பதிவுகளின் இணைப்பு.

10 கருத்துகள்:

  1. சிறப்பு... என்றும் மகளிர் தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு.

    இன்று மட்டுமல்லாது என்றும் பெண்மை போற்றுவோம்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கட்டுரை சிறப்பாக இருக்கிறது சகோ.

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மகளிர் தின நல்வாழ்த்துகள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...