சோதனைகளை சாதனைகளாக்குவர் மாதர் - சாதனைப் பெண்கள் நூலறிமுகம்


சோதனை கண்டு மனம்தளராமல் சாதனை கண்ட பெண்மணிகள் பலர். அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் 'சாதனைப்பெண்கள்' தொகுப்பினைப் பகிர்வதில் பேருவகை அடைகிறேன். சோதனைக் கொம்பைத் தகர்த்து முன்னேற்றப்படிகளாக மாற்றிக் கொண்டதோடு அல்லாமல் சமூகத்தினையும் தங்களோடு சேர்த்து முன்னேற்றிய இப்பெண்மணிகள் வணக்கத்திற்கு உரியவர்கள். நீங்கள் இவர்களில் சிலரை அறிந்திருக்கலாம், சிலரை அறியாதிருக்கலாம், வாசித்துதான் பாருங்களேன்.


  • தமிழகத்தில் ஜனநாயக மாதர் சங்கம் துவங்கப்பட்டது கே.பி.ஜானகியம்மாள் மற்றும் பாப்பா உமாநாத்தின் முயற்சியால்
  • பகத்சிங் வழக்கு நிதிக்காக நிதி திரட்டிக்kகொடுத்த கேப்டன் லட்சுமி, 'ராணி ஜான்சிrரெஜிமென்ட்' என்ற பெண்கள் படைப்பிரிவிற்குத் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால்nநியமிக்கப்பட்டவர் 
  • பட்டங்கள் ஆள்வதில் மட்டுமல்ல சட்டங்கள் செய்வதிலும் முதல்பெண் - மருத்துவர் முத்துலட்சுமி. சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, சட்டமன்றத் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேவதாசிமுறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பால்ய விவாக தடைச் சட்டம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவர் சாதனைகள்.
  • மதுரை வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி குடிநீர் விற்பனையை எதிர்த்து குழாய் நீர் கொண்டுவந்தார், ரேசன் கடைகளில் சமூக விரோதிகளை எதிர்த்து பொதுமக்களுக்கு எடை குறையாமல் பொருட்கள்  கிடைக்கச் செய்தார், மாமூல் வசூலிப்பிற்கு எதிராக நின்றவர், மக்களுக்காக உயிரையும் கொடுத்தவர். அட, இவர் பற்றி தீக்கதிர் கட்டுரை எழுதியவர் மேல்சொன்ன பாப்பா உமாநாத்.
  • அன்றைய கீழ்த்தஞ்சை-நாகை-திருவாரூர் பகுதியின் உழைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து, சுதந்திர இந்தியாவின் அடித்தட்டு மக்களின் அரசியல் சமூக விழிப்புணர்விற்காக வாழ்ந்த மணலூர் மணியம்மை 
  • தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த இந்தியர்களுக்கு வெள்ளையர் விதித்தத் தலைவரியை எதிர்த்து வெற்றிகண்ட, பதினாறு ஆண்டுகளே வாழ்ந்த, போர்பந்தர் தாத்தாவுக்கே விடுதலை உணர்வூட்டியச் சிறுமி. "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என மகாத்மா காந்தி பாராட்டியவர்.
  • திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி - தமிழகத்தில் இயங்கிவரும் பெண்கள் ஆணையத்திற்குச் சட்ட  அங்கீகாரம் கிடைக்க, பெயருக்கு முன்னால் தாயின் இனிஷியலையும் சேர்க்க, மீன்பிடிக்கும் ஆண்கள் மட்டுமல்ல மீன்விற்கும் பெண்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்று அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க, இஸ்லாமிய மாணவிகளுக்கும் தனி உண்டுறை விடுதி அமைத்திட என்று சட்டமன்றத்தில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர்.
  •  உலக கேரம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வியாசர்பாடியில் மீன்பாடி ரிக்ஸா ஓட்டும் ஏழைத் தொழிலாளியின் மகள் இளவழகி.
  • இவர்களுடன் ஜான்சி ராணி லட்சிமிபாய், அன்னை தெரசா, மலாலா, கல்பனா சாவ்லா 
  • முத்தாய்ப்பாக, கடைசி பக்கம் உங்களுக்காக! ஆமாம் சாதிக்கவிருக்கும் அடுத்த பெண்ணிற்காக! நீங்களாகவோ உங்கள் குடும்பத்தாராகவோ நட்பாகவோ இருக்கலாம். வாழ்த்துகள்!
இவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் படங்களும் சேர்த்திருப்பது அருமை. இடையிடையே பெண்ணியக் கவிதைகள் அணி சேர்க்கின்றன.
பெண்கள் அனைவரும் ஒருமுறையாவது எண்ணியிருப்பது இதோ பாலபாரதி அவர்களின் கவிதையில்,

"ஏழுமணிச்
செய்திகேட்டு
எல்லா நாளிதலும்
வாசித்து
அவசரமில்லாமல்
குளித்துஅலுவலகம் செல்ல...
ஒரு ஆணாக இருந்தால்...?"

"அவசரமாய் அலுவலகக் கழிப்பறையில்
பீச்சிவிடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்றலறும் குழந்தையின் அழுகுரல்" - கவிஞர் அ.வெண்ணிலா

"முகம்காக்க நகம்காக்க
முனைந்ததெல்லாம் போதும்,
யுகம் காக்கப்pபுறப்படு' - கவிஞர் தங்கம் மூர்த்தி

"எல்லாச் சாதிக்குள்ளும்
இழிந்த சாதியாய்
அவரவர் பெண்சாதி" - கவிஞர் நா.முத்துநிலவன்

"நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை" -கவிஞர் கந்தர்வன்

அடுத்த தொகுப்பிற்கு பட்டியல் ஒன்று தயாராக வைத்திருக்கும், வாசகரிடம் ஆலோசனையும் கேட்கும் இத்தொகுப்பின் ஆசிரியர்  அன்பிற்குரிய அண்ணி திருமதி.மல்லிகா நிலவன் அவர்கள். தொடர்பிற்கு: latchumalli@gmail.com

நன்றி அண்ணி, என் நூலகத்திற்கு அணி சேர்க்கும் உங்கள் தொகுப்பிற்கு. அடுத்த தொகுப்பிற்குக் காத்திருக்கிறேன்.

இதனையும் சொல்வதே கடமையென எண்ணுகிறேன், நிலவில் களங்கமாய் இத்தொகுப்பில் அச்சுப்பிழைகள். அது எப்படி என்று ஆச்சரியம் எனக்கு.

குறிப்பு: இத்தொகுப்பினை வாசித்து வரைவில் வைத்திருந்த காலம் ஏறக்குறைய இரண்டாண்டுகள் என்பதில் வெட்கம் கொள்கிறேன்.  வரைவில் இருக்கும் பல நூலறிமுகங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.

5 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம். வெளியிட்ட பதிப்பகம் குறித்தும் எங்கே கிடைக்கும் என்ற தகவலையும் சேர்த்து இருக்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.
      நிலவன் அண்ணாவை அறிவோம் என்று அதனை விட்டுவிட்டேன் போல.. :-) சேர்த்துவிடுகிறேன்.

      நீக்கு
  2. கவிதை வரிகள் ஒவ்வொன்றும்... யப்பா...!

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு அறிமுகம் க்ரேஸ்...

    "அவசரமாய் அலுவலகக் கழிப்பறையில்
    பீச்சிவிடப்படும் பாலில் தெறிக்கிறது
    பசியைத் தின்றலறும் குழந்தையின் அழுகுரல்" - கவிஞர் அ.வெண்ணிலா//

    வரிகள் என்னவோ செய்தது...

    எல்லா கவிதை வரிகளும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...