Tuesday, September 4, 2018

நெய்யோடு மயக்கிய உழுந்துஐங்குறுநூறு 211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலைஅம் சிலம்பின் தலையது
செயலைஅம் பகைத்தழை வாடும் அன்னாய்பாடியவர் கபிலர், 'அன்னாய்ப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப்  பாடல்களுள் ஒன்று. தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ள பாடல். தலைவியை அன்புடன் 'அம்மா' என்ற பொருளில் 'அன்னாய்' என்று அழைப்பது வழக்கில் இருந்தது.

 
வயலைக்கொடி
எளிய உரை: நெய்யோடுக் கலந்த உழுந்தை கையால் நூற்றது போன்ற வயலைக் கொடி படர்ந்திருக்கும் அழகிய மலையின் உச்சியில் உள்ள அழகிய அசோகமரத்தின் பகைத்தழையாகிய இத்தழையானது வாடும் அன்னாய்
 


விளக்கம்: நெய் சேர்த்துப் பிசைந்த உழுத்தம் மாவினை நூற்றது போன்ற கொடி என்று வயலைக்கொடி உவமைப்படுத்தப்படுகிறது. வயலைக்கொடி சிவப்பாகவும் வெண்மையாகவும் இருநிறங்களிலும் இருக்கும், இப்பாடலில் சொல்லப்படுவது வெண்வயலைக் கொடியாகும். வெண்மையான வயலைக்கொடி மேற்புறம்  ஒருவிதப் பளபளப்புடன் இருப்பதால் நெய்சேர்த்துப் பிசைந்தது போல என்கிறார் புலவர். அத்தகைய வயலைக் கொடிகள் படர்ந்திருக்கும் தலைவனின் அழகிய மலை உச்சியில் இருக்கும் அழகிய அசோக மரத்தின் தழைகளால் தழையாடை செய்து கொடுத்திருக்கிறான் தலைவன். இந்த தழைகள் வாடிவிடும், அதனால் நீ ஏற்று அணிந்துகொள்ளம்மா என்று தலைவியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள் தோழி.  தலைவனும் கூடிமகிழ்ந்து திரும்பிய தலைவி அவன் பிரிவால் வாடி இருப்பாள். அப்பொழுது தலைவன் தோழி மூலமாகக் கொடுத்தனுப்பும் பரிசாகியத் தழையாடை தலைவியின் பிரிவாற்றாப் பெருந்துயர்க்கும் மருந்தாகும் என்றுணர்ந்தாள் தோழி. தலைவியின் குறை போக்கும் என்பதால் குறை நயப்பித்தல் இப்பாடலின்  பயனாகும்.
தழைகளைப் பறித்ததனால் மாறுபாடு கொண்டிருக்கும் அசோக மரம் என்பதால் பகைத்தழை எனப்பட்டது. உழுந்தை மாவாகத் திரித்து அதனை கைகளால் திரித்து வடகம் போல் செய்யும் வாழ்வுமுறையும் குறிஞ்சி நிலத்தில் அசோக மரத்தின் தழைகளால் தழையாடை செய்யும் பழக்கமும் இருந்தது அறியலாகிறது.

சொற்பொருள்: நெய்யொடு மயக்கிய - நெய்யுடன் கலந்து பிசைந்த, உழுந்து நூற்றன்ன - உழுந்தைத் திரித்ததுப் போன்ற, வயலை - வயலைக் கொடி , அம் - அழகிய, சிலம்பின் - மலையின், தலையது- உச்சியில், செயலை - அசோகமரம்,  பகைத்தழை - மாறுபாட்டிற்குக் காரணமான தழை,  வாடும்  - வாடிவிடும், அன்னாய் - தாயே/தோழி
 
என் பாடல்:
நெய்பிசைந்து நூற்ற உழுந்தினைப் போன்ற
வயலை படர்ந்த கவின்மலை உச்சி
அழகிய அசோகின் பகைத்தழை வாடும் அன்னாய்
 
 

இனிய இப்பாடலை ஆங்கிலத்திலும் படித்து மகிழ, என் மொழிபெயர்ப்பை இந்த இணைப்பில் பார்க்கவும் -Blackgram spun with ghee Ainkurunooru-211


வயலைக்கொடி

12 comments:

 1. சிறு வயதில் இப்படி எல்லாம் படித்தது மறந்த வேளையில் அதை அழகாக எடுத்து சொல்லி சென்றவிதம் அருமை கிரேஸ்.. எப்படி உங்களால் இதையெல்லாம் ஞாபகம் வைத்து அழகாக எடுத்து சொல்ல முடிகிறது....யூ ஆர் வெரி ஸ்மார்ட் சகோ

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மீது எப்பொழுது ஒரு காதல் இருந்திருக்கிறது சகோ. தமிழ் பாடம் எப்பொழுதும் பிடிக்கும். ஆனால் கடந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் சங்க இலக்கியத்தை அதிகம் கற்கிறேன். உரை நூட்கள் மற்றும் தமிழ் இணையக்கழகம் உதவுகின்றன. உங்கள் இனிய கருத்திற்கு மிக்க நன்றி சகோ..மேலும் ஊக்குவிக்கிறது

   Delete
 2. உழுந்து = உளுந்துதானே?

  தமிழை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருடல் ளகரம், சிறப்பு ழகரம் இரண்டுமே பயன்படுத்துகிறார்கள் ஸ்ரீராம்.
   பாடலில் என்ன இருந்ததோ (உழுந்து) அப்படியே நானும் பயன்படுத்தியிருக்கிறேன்.

   தமிழை ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சகோ. மகிழ்வாக இருக்கிறது

   Delete
 3. ஆஹா.... மீண்டும் இலக்கியத் தேன் பருக ஒரு வாய்ப்பு.

  தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சியடைகிறேன்.

   Delete
 4. அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 5. விளக்கத்தை மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
 6. மறுபடியும் இதுபோன்ற பதிவுகளை எழுத ஆரம்பிப்பது கண்டு மகிழ்ச்சி. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...