அமெரிக்கா என்றால் எல்லாம் சரி என்றில்லை

ஜனவரி இருபதாம் தேதி பள்ளியில் விழுந்துவிட்டேன் என்று சொன்ன மகனின் காலைப் பார்த்தால் முழங்காலுக்குக் கீழே இன்னொரு முழங்கால் போல வீக்கம். ஒரு புண், இரத்தக் கட்டு. பதறி உடனே மருத்துவருக்கு அழைத்தேன். மூன்றே முக்கால் மணியாகி விட்டிருந்தது. இங்கு அந்த நேரத்தில் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பது கடினம். அவசரச் சிகிச்சைக்குத் தான் செல்லச் சொல்வார்களோ என்று ஒரு ஐயம். செவிலி பார்ப்பார், உடனே வாருங்கள் என்றார்கள். அழைத்துச் சென்றேன். பார்த்துவிட்டு, ஐஸ் வையுங்கள், வலிக்கு ப்ரூபென் கொடுங்கள், சிவந்து காய்ச்சல் கீய்ச்சல் வந்தால் அவசர சிகிச்சைக்குச் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார். 


வலி வலி என்று துடித்தவனிடம் சரியாகி விடுமென்று தேற்றி ஐஸ் வைத்து..கண்காணித்துக் கொண்டே இருக்க, வலி குறையவில்லை சிவக்கவும் இல்லை. சரியென்று மருத்துவரைப் பார்க்க வேண்டுமென்று முன்பதிவு கேட்டேன். எனக்கு இணைப்பு கிடைத்தபொழுது மணி 8.27. 8.40இற்கு வர முடியுமா? இல்லையென்றால் பிறகு செவிலியைப் பாருங்கள் என்று. சாதாரண போக்குவரத்து இருக்கும் நேரத்திலேயே, எங்கள் வீட்டிலிருந்து சிக்னல் எதிலும் மாட்டாமல் சென்றால் 12 நிமிடங்களாகும். இதில் காலை அலுவலக நேரப் போக்குவரத்து வேறு இருக்கும். சில நிமிடங்கள் தாமதம் ஆகலாம், வந்து விடுகிறேன் என்றேன். இல்லை இல்லை, தாமதமானால் பத்தரைக்குச்  செவிலியிடம் மாற்றிவிடுகிறேன் என்றார். இதோ கிளம்பிவிட்டேன் என்று சொல்லி வைத்துவிட்டு, மகனை வாடா என்றால் உடைமாற்றிவிட்டுத் தான் வருவேன் அவன் வேறு..அவசர அவசரமாக உடையை மாற்றி ஷூவை கையில் எடுத்துக்கொண்டு காரில் உட்காரவைத்துக் கிளம்பிவிட்டேன். இன்றும் மட்டும் மருத்துவரைப் பார்க்க முடியாமல் போகட்டும் பார்த்துவிடுகிறேன் என்று மனதில் பொருமிக்கொண்டே சென்றேன். அலுவலகம் சேரும்பொழுது 8.50. எப்பொழுதும் பணியிலிருக்கும் ஒரு பெண் இருந்தார். எப்பொழுதும் போல சம்பிரதாயங்களுக்குப் பிறகு மருத்துவரைப் பார்த்தோம். அப்பாடா, விட்டுவிட்டார்கள்! 

மருத்துவர் பரிசோதித்துவிட்டு எக்ஸ்-ரே எடுத்து விடலாம் என்றார். வேறோர் இடத்திற்குச் சென்று எடுக்கவேண்டும். எடுத்துவிட்டு வீட்டுக்குப் போய்விடுங்கள், மாலைக்குள் அழைப்போம் என்றார்கள். அரைமணி நேரப் பயணத்தில் இருக்கும் இடம் சென்று எக்ஸ்-ரே எடுத்துத் திரும்பினோம். மதியம் இரண்டு மணிக்கு அழைத்து எலும்பு முறிவில்லை, காலைத் தூக்கி வைத்து ஓய்வெடுக்கட்டும், ஓரிரு நாட்களில் பள்ளிக்குச் செல்லட்டும் என்றார். அந்த வாரம் முழுவதும் நான் அனுப்பவில்லை. புண் ஆறியது, இரத்தக்கட்டு குறைந்தது. ஆனால் வீக்கம் இன்னும் இருந்தது.. அடுத்தவாரம் திங்கள் கிழமை பள்ளிக்கு அனுப்பிவிட்டேன். பாதியில் பள்ளியிலிருந்து அழைத்து வலிக்கிறதாம் என்றார்கள். சென்று பார்த்து, மெதுவாகச் சரியாகும், என்று தேற்றி, உணவு இடைவேளையில் உடன் இருந்துவிட்டு வந்துவிட்டேன்.

பிள்ளைக்கு வலிக்கிறதே என்று மனதில் கலக்கம் வேறு. செவ்வாய், புதனும் ஓட வியாழன் அன்று காலை ஒன்பதே கால் மணிக்கே அழைத்து வலி இருக்கிறது, உடனே வாருங்கள் என்றார்கள். அரக்கப்பரக்கச் சென்றேன். மருத்துவமனைக்கு அழைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் திரும்பி அழைப்பேன் என்றார்கள். அதற்குள் பள்ளி சென்று மகனுக்கு வலி மருந்து கொடுத்து வகுப்பில் விட்டுவிட்டு, பள்ளியிலேயேக் காத்திருந்தேன், மருத்துவரிடம் இருந்து அழைப்பார்கள் என்று. வரவில்லை..மூன்று முறை அழைத்தேன். மூன்று முறையும் அதே பதில், அழைப்பார்கள் என்று. மணி ஒன்றாகிவிட்டது. மீண்டும் அழைத்தேன். மீண்டும் வேறு யாரோ எடுத்து என்ன விசயம் என்று முதலில் இருந்து ஆரம்பிக்க, "நான்காம் முறையாக அழைக்கிறேன். ஒரு தகவலும் கொடுக்க முடியாது. என்ட்ரி லாக்கைப் பாருங்கள்" என்று கோபமாகச் சொல்லிவிட்டேன். மன்னிப்பு கேட்டு மீண்டும் அதையே தான் சொன்னார். இதோ அழைக்கச் சொல்கிறேன் என்று.

இதற்குள் நானாக எலும்பு மருத்துவர்கள் எண்களைத் தேடி அழைத்துக் கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து மகனை அழைத்துக்கொண்டு வீடு வந்துவிட்டேன்.காலையும் மதியமும் உணவருந்தாத அசதி, மன வருத்தம் இரண்டும். ஒரு வழியாக ஒரு எலும்பு மருந்துவரிடம் வெள்ளி காலைக்கு முன்பதிவு கிடைத்தது. பதிவு செய்துவிட்டு ஓய்ந்தேன். மாலை நிதானமாக மகனின் மருத்துவர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு. இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டுச் சரியாகவில்லை என்றால் எலும்பு மருத்துவரைப் பாருங்கள் என்று. நன்றி சொல்லி வைத்துவிட்டேன்.

முன்பு எக்ஸ்-ரே எடுத்த இடத்திற்குச் சென்று எக்ஸ்-ரே வேண்டும் என்று கேட்டு சிடியில் வாங்கிகொண்டேன்.  இன்று எலும்பு மருத்துவரிடம் சென்று கால் காண்பித்தால் முன் கால் எலும்பில் (tibia)  ஒரு கோடு தெரிகிறது என்று மீண்டும் எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்தார். எலும்பில் ஒரு கோடு தெரிகிறது, முறிவில்லை, ஆனால் எலும்பில் அடிபட்டிருக்கிறது என்றார். bone bruise. முதன்முறை கேள்விப் படுகிறேன். காலை அசைக்காமல் வைக்க வெல்க்ரோ ஓட்டும் ஒருகாஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு வாரங்கள் போட்டுக் கொண்டிருந்து விட்டு, மீண்டும் செல்ல வேண்டும்.

இந்த நேரங்களில் இந்தியாவில் இருந்திருந்தால் எளிதாக மருத்துவரைப் பார்த்திருக்க முடியும், திருப்தி இல்லையென்றால் வேறொரு மருத்துவரையும் பார்த்திருக்கமுடியும் என்று பலமுறை எண்ணம் எழுந்தது.

பிள்ளைக்கு எவ்வளவு வலித்திருக்கும்! உடனே சென்றாலும் சரியாகப் பார்க்கவில்லையே என்று வருத்தமும் கோபமும் வருகிறது. நன்றாகச் சரியாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு...



25 கருத்துகள்:

  1. இங்குள்ள மருத்துவ சிஸ்டம் பல சமயங்களில் நம்க்கு வெறுப்பை தருகின்றது என்பது உண்மையே நல்ல டாக்டர் நமக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. இப்போது குழந்தை குணமாகி இருப்பான் என நினைக்கிறேன் மேலும் முழுவதும் குணமாகி நல்ல நிலையை பழையபடி அடைய பிரார்ட்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினைந்தாம் தேதி வரை knee immobilizer அணியவேண்டும். மீண்டும் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும். பிரார்த்தனைக்கு மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  3. There's no exception to eceptional circumstances, I guess.

    பதிலளிநீக்கு
  4. அடடா! அங்கே மெடிகல்ஸ் இலவசமா கிரேஸ்? இங்கே இப்படி எல்லாம் நடக்காதுப்பா. நர்மல அடி எனில் பேமிலி டாக்டரிடமும் ஹெவியா அடி பட்டால் அம்புலன்சுக்கும் அழைத்து விடுவார்கள். இன்சுரன்ஸ் இருப்பதால் மெடிகல்ஸ் செலவுகள் பத்து வீதம் மட்டும் தான் நாங்க கட்டணும். பேமிலி டாக்டரிடம் போனால் அதாவது அவங்க பிறந்ததிலிருந்தே கவனிக்கும் சில்ரன் டாக்டர்.. அவரே மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமே அதை கவனிப்பார். ஸ்கான், எக்ஸ்ரே, ஸ்பெஸலிஸ்ட் என சடசடவென காரியம் நடக்கும்.

    பாருங்கள் பிள்ளைக்கு அடிபட்ட வலையை விட சரியான கவனிப்பில்லையே என்பதும் அதற்கான அலைச்சலுமே அவனுக்கு அதிகமாக வலிக்க வைத்திருக்கும்,

    சரி இப்போதேனும் சரியான் ட்ரீட்மெண்ட் கொடுத்திருந்தால் காலை அசைக்க விடாம பத்திரமா இருக்க சொல்லுங்க. சின்ன வயது என்பதால் எலும்பு பிரச்சனைகள் சட்னு சரியாகிரும்.

    பிசியோதெரபில்லாம் அங்கே கொடுக்க மாட்டார்களா? அப்படி செய்தாலும் சரி வரும்.

    அமெரிக்காவோ இந்தியாவோ பத்திரமா இருந்துக்கோங்கப்பா. பிள்ளைக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம் பா. உங்க மன நிலையும் உடல் நிலையும் கவனிச்சிக்கோங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலவசம் இல்லைப்பா. நல்லா கனமாத் தீட்டிவிடுகிறார்கள். இன்சுரன்ஸ் இருக்கிறது, ஆனால் ஒரு குறிப்பிட்டத் தொகை வரை நாம் தான் கட்டவேண்டும்.
      பொதுவாக இங்கும் உடனே அழைத்துவிடுவார்கள். அன்று என்னவோ அழைக்கவில்லை, முதலுதவியும் செய்யவில்லை. நேரம்!!
      உணமி நிஷா, சரியான வைத்தியம் இல்லையே என்ற ஏக்கமும் கோபமும் தான் அதிகம். அசைக்காமல் இருக்கத்தான் knee immobilizer போட்டிருக்கிறான். அதையும் தூங்கும்போது கழட்டிவிடலாம். ஆமாம் நிஷா, சிறுவயது என்பதால் நன்றாக சரியாகிவிடும்.
      உங்கள் அன்பான விசாரிப்புக்கும் செபத்திற்கும் மனமார்ந்த நந்தி நிஷா.

      நீக்கு
  5. தங்கள் மகனுக்கு விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். பாவம் குழந்தை. ஆம் இங்கு எளிதுதான். மருத்துவரைப் பார்ப்பது.

    பதிலளிநீக்கு
  6. கவலை வேண்டாம் சகோதரி... அனைத்தும் விரைவில் சரியாகிவிடும்...

    பதிலளிநீக்கு
  7. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பிள்ளைக்கு உடலில் வலி என்றால்
    பெற்றோருக்கு மனதில் அல்லவா கடும் வலி ஏற்படும்
    தங்களின் அன்பு மகன் விரைவில் முழு நலம் பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  9. கிரேஸ் இங்கு நீங்கதான் ஒரு மிஸ்ரேக் விட்டிட்டீங்க, இப்படிப் பிரச்சனைக்கு அப்பொயிண்ட்மெண்ட் எடுத்து டொக்டரிடம் போகாமல் ஸ்ரெயிட்டா எமேஜென்சிக்கே போயிருக்கோணும், உடனேயே எக்ஸ்றே எடுத்திருப்பினம். பமிலி டொக்டர் அது செய்ய மாட்டார் ஆனா அவர் எக்ஸ்றே எடுக்க அனுப்பியிருக்கோணும். இப்படியான பிரச்சனைக்கு முதலில் செய்ய வேண்டியது எக்ஸ்றே எடுப்பது பின்புதான் எல்லாம், ஆனா எதுக்கு அந்த டொக்டர் இவ்வளவு சாதாரணமாக விட்டாரோ.

    எனிவே பத்திரமா பாருங்கோ மகனை... குழந்தைகளுக்கு விரைவில் குணமாகிடும், கவலை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, டாக்டர் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காவிட்டால் எமெர்ஜென்சி போயிருப்பேன். பார்த்தும் எக்ஸ்-ரே எடுத்தும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டாரே. இரத்தக்கட்டு பெரிதாக இருப்பதால் தான் வீக்கம், சரியாகி விடும் என்று வேறு சொன்னார். மனம் ஒப்பவில்லை என்றாலும் என்ன செய்வது.. மேலும், மூன்றாம் தேதி கூட நான் ஆர்த்தோவிடம் பதிவு செய்தபின்னர், மகனும் மருத்துவர் அலுவலகத்தில் இருந்து அழைத்து சொன்ன விஷயம், "இன்னும் ஒரு வாரம் பாருங்கள். சரியாகாவிட்டால் அதற்கடுத்த வாரம் ஆர்த்தோ பார்க்கலாம்" என்பதே.

      நன்றி அதிரா.

      நீக்கு
  10. Sister....no matter waht its is...swelling not going away after 3 hours, reach out to emergency....always find out neareast best hospital near your place...I live in PA when my son injured in sports camp, the nurse asked me to goto physician or urgent care...We took him to emergency, found that 'Growth plate' injury....called the ortho from emergency to fix the procedure next day in the same hospital....Always alert when medical issues...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நன்றி சகோ. உடனே மருத்துவமனை சென்று வந்ததால் ஏற்பட்ட குழப்பமே. காயமும் இரத்தக்கட்டும் வேறு இருந்ததால் அதனால் தான் வீக்கம் என்று. ஆனாலும் பிறகு எக்ஸ்-ரே எடுத்தபின்னும் ஒன்றும் இல்லையென்று சொல்லிவிட்டார்களே..
      Hope your son recovered completely. Yes, Should be more alert. Thank you.

      நீக்கு
  11. ஆம், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவேண்டுமென்றால் அது இந்தியாவில்தான் முடியும். அமெரிக்காவில் அது சாத்தியம் இல்லை. இங்கே மருத்துவர்கள், இன்சுரன்ஸ் கம்பெனிகளுக்கு அடிமைகளாகச் செயல்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள்மீது எந்தப் பழியும் வந்துவிடாதபடி காத்துக்கொள்வதே இங்குள்ள மருத்துவர்களின் முதல் காரியமாக இருக்கிறது. எனவே எவ்வளவு முடிமோ அவ்வளவு தாமதம் செய்துதான் நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அதற்குள் நோயும் அதிகமாகிவிடும், வருமானமும் அதிகம் கிடைக்கும் என்பது இதில் புதைந்துகிடைக்கும் உண்மை.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ம்ம்ம் கடினம் ஐயா..வருத்தம் தான். இந்தியாவிலும் பெரிய மருத்துவமனைகளில் இப்படி நடக்கிறது. ஆனால் ஏதாவது ஒரு மருத்துவரைப் பார்த்துவிட வழியும் இருக்கிறது.

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  12. ரொம்ப கடினமான நேரம் ல...

    தம்பிக்கு சீக்கிரம் குணம் ஆகிவிடும்...கவனமா பார்த்துகோங்க..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...