ஐங்குறுநூறு 203 - தேன்கலந்த பாலினும்

அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..


ஐங்குறுநூறு 203
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு 

உவலை கூவல் கீழ 
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே

பாடியவர் கபிலர், 'அன்னாய் வாழிப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப்  பாடல்களுள் ஒன்று. தலைவி தன் செவிலிதாய்க்குக் கேட்கும்படியாக அவள் கவனித்துக் கொண்டிருந்த பொழுது, தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ள பாடல். தோழியை அன்புடன் 'அம்மா' என்ற பொருளில் 'அன்னாய்' என்று அழைப்பது வழக்கில் இருந்தது.

இனிய இப்பாடலை ஆங்கிலத்திலும் படித்து மகிழ, என் மொழிபெயர்ப்பை இந்த இணைப்பில் பார்க்கவும் - Sweeter than muddied water.

எளிய உரை: வாழ்க அன்னையே, கேட்பாயாக! நம் தோட்டத்துத் தேன் கலந்த பாலைவிடவும் இனியது அவருடைய நாட்டில் காய்ந்த சருகுகளின் கீழ் மான் குடித்தப் பின்னர் எஞ்சியிருக்கும் கலங்கிய நீர்.

விளக்கம்: தலைவனுடன் உடன்போக்குச் சென்று மீண்டு வந்திருக்கிறாள் தலைவி. அவளிடம் தோழி, தலைவன் நாட்டில் நீர் நன்றாக இருக்காதே..நீ எப்படிக் குடித்தாய்? என்பதாகக் கேட்கிறாள். அதற்குத் தலைவி தோழியிடம் செவிலித்தாய் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்றும் அறிந்து, அவளும் கேட்கட்டும் என்று சொன்னது. தேன் கலந்த பால் மிகவும் இனிமையான சுவையுடையது. அதனை விடவும் தலைவன் நாட்டில் குழிகளில் தேங்கிய, மானும் குடித்து எஞ்சியிருக்கும்  கலங்கிய நீர் இனிமையானது என்று தலைவி சொல்கிறாள். தலைவன் மீது தலைவி கொண்டிருந்த காதலின் ஆழம் புலனாகிறது. தலைவன் அருகிருந்தால் சேற்று நீரும் சுவையாகும், அவன் இல்லாதபோது தேன்கலந்த பாலும் இனிக்காது என்று சொல்கிறாள் போலும். தோழிக்குத் தெரியும் என்றாலும் அருகில் இருந்த செவிலித்தாய் கேட்கட்டும் என்றே இந்த உரையாடலைத் துவக்கியிருக்கிறாள். கேட்கும் செவிலித்தாய் மகிழ்வதோடு அதனை நற்றாய்க்கும், அதாவது தலைவியைப் பெற்ற அன்னைக்கும் சொல்வாள். தங்கள் மகள் தலைவனை மணம்செய்து மகிழ்வாயிருப்பாளா என்பதே அவர்களுக்குத் தெரியவேண்டியது. தலைவி தன் தலைவனின் ஊரை விட்டுக்கொடுக்காமல் பேசும் பண்பும் அறியலாகிறது. குறைகளையே கண்டு பெரிதாக்கி திருமணப் பந்தத்தை சிக்கலாக்கும் இன்றைய தலைமுறையின் இருபாலாருக்கும் அறிவுரை சொல்வதாகவும் அமைந்துள்ளதோ?
மற்ற சங்கத்தமிழ் பாடல்களைப் போன்றே இப்பாடலிலும் இயற்கை அழகாகப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது..

சொற்பொருள்: அன்னாய் வாழி - வாழ்க அன்னையே, வேண்டு அன்னை - கேட்பாயாக, நம் படப்பை - நம் தோட்டத்து, தேன் மயங்கு பாலினும் - தேன்கலந்தபாலைவிட, இனிய -இனியது, அவர்நாட்டு -அவருடையநாட்டின், உவலை - சருகு, கூவல் - நீர்குழி, கீழ - கீழே, மான் உண்டு எஞ்சிய - மான் குடித்தபின்னர் எஞ்சியிருக்கும், கழிலி நீரே - கலங்கிய நீரே

என் பாடல்:

கேளடி தோழி, நீ வாழ்க! நம் தோட்டத்துத் 
தேன்கலந்த பாலினும் இனியது அவர்நாட்டு
குழிகளில் சருகுகளின் கீழே மான்
குடித்து எஞ்சிய கலங்கல்  நீரே



25 கருத்துகள்:

  1. இனிய1கவிதையின்2இனிய3மொழிபெயர்ப்பு!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு. உங்கள் மூலம் நாங்களும் தமிழ்த்தேன் பருக ஒரு வாய்ப்பு....

    பதிலளிநீக்கு
  3. நன்றி.நன்று.மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  4. தொலைவிலிருந்து சிலரிடம் தொலைந்த தமிழ். காதில் தேனாய் இனிக்கிறது

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வழக்கமான தேன்மதுரத் தமிழ்ப் பதிவு!!! அருமையான விளக்கம். இப்படித்தான் நாங்களும் இலக்கியம் தெரிந்து கொள்கிறோம்...விஜு அவர்களின் மூலம், தங்களின் மூலம் என்று...சிறப்பு. தங்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் புலமை கண்டு வியக்கிறோம் சகோ/கிரேஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றிகள் அண்ணா/கீதா. ஆங்கிலப் பதிவின் கருத்துகளை உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன்.
      மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  6. நெடுநாள் கழித்து இலக்கியம் கண்டோம். தமிழில் புலமையுள்ளவர்கள் ஆங்கிலத்திலும் அதே அளவு புலமையுடன் இருப்பது பாராட்டிற்குரியதே. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பக்தி இலக்கியங்கள் படித்துவருகிறேன். அது நிறைவு பெற்றதும் சங்க இலக்கியம் என் இலக்கு. ஆர்வத்தைத் தூண்டுவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.
      உங்களைக் கண்டு வியக்கிறேன் ஐயா. கள ஆராயச்சிகளுக்கிடையிலும் இலக்கியம் வாசிப்பது மகிழ்வையும் உந்துதலையும் தருகிறது. மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா.

      நீக்கு
  7. எங்களுக்கும் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுமாறு உள்ளது...உங்களின் அருமையான விளக்கம்....

    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...