Thursday, January 5, 2017

ஆஅஓஒ


முட்டுவேனா தாக்குவேனா
அறியேன்
துன்பம் பெருக
ஆஅஓஒ எனக் கூவுவேனா
உண்மை உணராது
பிதற்றும் ஊரை நினைத்து


ஒரு பெண் இரவுப்பணி முடிந்து வரும்பொழுது பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டாள். இரவில் எதற்குப் போக வேண்டும்? தனியாக எதற்குப் போகவேண்டும்?

இன்னொரு பெண் பகலில் ஆண் நண்பருடன் செல்லும்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டாள். ஆண் நண்பருடன் எதற்குச் செல்ல வேண்டும்? அங்கும் இங்கும் ஏன் செல்லவேண்டும்?

இந்த உடை சரியில்லை. அந்த உடையும்  சரியில்லை. உடம்பு தெரியும்படி எதற்கு உடையணிய வேண்டும்? ஓ அப்படியா?

மார்பகம் வற்றித்  தோல் சுருங்கி நரம்பு கோலமிடும் தோல் போர்த்தி ஒரு பாட்டி, நூறு வயசு வாழனும், அவள் ஆத்தா வாழ்த்தியிருப்பா. பாவம் நூறை நெருங்குகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்படுவாள் என்று அறிந்திருக்க மாட்டாள்.

பருவம் வந்தாச்சா? பயந்து வீட்டில் ஒடுங்கு. சரி.
இல்லை, இல்லை,ஐந்து வயசாச்சா பெண்ணுக்கு? விலங்கு போடு.

அதுவும் கடந்து 4 மாத குழந்தையையும்...பிறந்த பிஞ்சும்..

ஆக, எங்கு பிரச்சனை? யார் பிரச்சனை? என்ன தீர்வு?

எதையும் யோசிக்க நாங்கள் தயாரில்லை என்று சொல்லும் சமூகம்.

சரி, இரவிலும், விளக்கு வைத்தப்பின்னும், அதிகாலையிலும் எங்கும் போகவில்லை. ஆண் நண்பருடன் போகவில்லை. 

கணவர் அருகில் அமர்ந்திருக்க மதியவேளையில் காரோட்டிச் சென்று கொண்டிருந்த பெண் முந்திச் சென்று  விட்டாள் என்ற காரணத்திற்காக அருகே தொடர்ந்து வந்து காரை உரசியும் முறைத்தும் திட்டிக்கொண்டும் தொடர்ந்து வருகிறான் ஒருவன். இதற்கு என்ன சொல்லும் சமூகம்? கணவருடன் போகவேண்டாமென்றா? காரோட்ட வேண்டாம் என்றா? வெளியிலேயே போக வேண்டாம் என்றா? திரையிட்டு வீட்டிற்குள் ஒளிந்து வாழ் என்றா?
 கேட்டுக்கேட்டுப் புளித்து விட்டது.

தன்னில் ஒரு பாதிக்குப் பாதுகாப்பில்லை என்றால் தான் நாணிக் குறுக வேண்டும் சமூகம். தன் பங்களிப்பு என்ன என்று சிந்திக்க வேண்டும். சரியா தவறா என்று யோசிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு...

 எழுதி எழுதி எதைக் கிழிப்பது? வாசித்துவிட்டு உள்வாங்காமல் நகரும் சமூகத்தில்.


இச்சையே...சை

28 comments:

 1. கவிதையும், கதையும் அருமை....

  ReplyDelete
 2. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன இலாபம்? இவ்வரிகள் தான் மனதுள் ஒடுகின்றன.

  ReplyDelete
 3. வெட்கித் தலைகுணிகின்றேன் நானும் இந்த சமூக அங்கத்தினர் என்பதால்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பெண்களைக் குறை கூறவில்லையே சகோ.. புரிந்து கொள்பவர்களில் ஒருவராகத் தானே இருக்கின்றீர்கள்.

   Delete
 4. கொடுமையான நிகழ்வுகள். Pink படம் இதைத்தான் சாட்டையால் அடிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எத்தனை படம் வந்தாலும் நேர்மறை மாற்றம் மட்டும் காணவில்லையே ஸ்ரீராம்..அதுதான் வருத்தம்

   Delete
 5. ஒட்டுமொத்தமாய் இந்த சமூகமும் திருந்தவேண்டும்.. பெண்பிள்ளைகளை மதிக்க ஆண்பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கற்றுத்தரவேண்டும். அதற்கு முன்மாதிரிகளாக பெற்றோர் நடந்துகொள்ளவேண்டும்...சகமனுஷிகளாக என்றைக்கு பெண்களை மதிக்கும் நாள் வருகிறதோ அதுவரை ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்பதுதான் ஒரே வழி...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதுதான் தான் சரி கீதமஞ்சரி..வீட்டில் இருந்துதான் துவங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும்.

   Delete
 6. வேதனையான் நிகழ்வுகள்! சமூகத்தின் அவல நிலை..ஆண் குழந்தைகளின் வளர்ப்பு ..என்று என்னென்னவோ..

  இறுதிவரியை ஆமோதிக்கிறோம்...

  ReplyDelete
 7. இதற்குப் பல காரணங்கள் உள்ளன . எந்த ஒரு தனிக் காரணமும் இந்த அவலத்திற்குப் பொறுப்பாகாது

  ReplyDelete
  Replies
  1. காரணம் எதுவாயினும் களையப்பட வேண்டிய அவலம்

   Delete

 8. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

  ReplyDelete
 9. உள்வாங்காமல் நகரும் சமூகம்....முற்றிலும் உண்மை.

  ReplyDelete
 10. வேதனை....
  எழுதி எழுதி எதைக் கிழித்தாலும் சமூகம் இன்னும் வாயடைத்துப் போய்த்தான் இருக்கிறது....

  ReplyDelete
 11. நம்ம தலைப்பு மாதிரி இருக்கே என்று வந்தால், கிழி கிழி என்று கிழித்து விட்டீர்கள்...

  ReplyDelete
 12. போன வருடங்களில் பள்ளிக்கு போய் மதிய உணவுக்கு வீடு வந்த பிள்ளையை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதும் ஆடைக்குறைப்பாலோ? காலையில் பள்ளிக்கு போன பிள்ளையை மறித்து தாய்க்கான தண்டனையாக வக்கிரத்தனம் செய்ததற்கும் காரணம் ஏதோ?

  இவங்களுக்கு எல்லாம் ஒரு காரணம் தேவை, சோளக்கொல்லை பொம்மைக்கு சேலையை போர்த்தி வைச்சாலும்....? அதை விட கேவலம்.. ஆண் செய்யும் தப்புக்கெல்லாம் அந்த வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்து பேசுவதும் திட்டுவதும் எழுதுவதும்.

  ReplyDelete
  Replies
  1. அதுதான் நிஷா..கேவலம். //சோளக்கொல்லை பொம்மைக்கு சேலையை போர்த்தி வைச்சாலும்....// அதே தான்.
   //ஆண் செய்யும் தப்புக்கெல்லாம் அந்த வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்து பேசுவதும் திட்டுவதும் எழுதுவதும்// ஆமாம், இதுவேறு. ஆக மொத்தம் பெண்களைத் தாக்குவதில் வள்ளல் தான் சமூகம். சரியான புரிதலும் உணர்தலும் வரவேண்டும்.

   Delete
 13. ,கொடுமை தான்மா.....வழி தான் தெரியல

  ReplyDelete
 14. வேதனை தரும் நிகழ்வுகள். என்று திருந்தப் போகிறார்கள்......

  ReplyDelete
 15. we need to inculcate new insights and inputs into the society

  ReplyDelete
 16. சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டும்.
  பெண்ணை நிர்பந்திக்கிற முட்டாள் தனத்தைவிட்டு
  ஆண்களை,அதிகாரப் பார்வையை மாற்றச்
  செய்ய வேண்டும்.பெண்ணால் எதையும் எதிர்
  கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்க பெரியாரைப் படிக்கச் சொல்ல வேண்டும்

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...