ஐங்குறுநூறு 36 - கயல் போன்ற கண்கள்



மறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.









 ஐங்குறுநூறு 36 - பாடியவர் ஓரம்போகியார்
தலைவி தோழிக்குச் சொல்வதாக (தலைவனுக்குக் கேட்கும்படியாக) அமைந்த 'தோழிக்குரைத்த பத்து' மருதம் திணை பாடல்களில் ஒன்று.


அம்ம வாழி தோழி ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயல் எனக் கருதிய உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.



இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இங்கே  Carp like eyes  சொடுக்கவும்.

எளிய உரை: கேளடி  தோழி! நம் ஊரைச் சேர்ந்த தலைவன் நம்மை மறந்து வாழ்வானாயின் நாமும் அவனை மறந்திருக்க முடியும். ஆனால், கயல்மீனைப் போன்ற மையிட்ட கண்கள் பசலை கொண்டு ஒளிகுன்றாமல் இருக்கவேண்டுமே.

விளக்கம்: தலைவியை நீங்கி பரத்தையரிடம் சென்ற தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வர அனுமதிகேட்டு ஆள் அனுப்புகிறான். தலைவியின் மனமறிந்த தோழி அனுமதி மறுத்துவிடுகிறாள். தலைவியை மறந்து தலைவன் இருக்கிறான் என்று தோழி சாடினாள் போலும். அதனால் தலைவி தோழியிடம், தலைவன் அப்படி இருப்பானேயானால் என்னாலும் மறந்து இருக்க முடியும் என்று சொல்கிறாள். ஆனால், பசலை கொண்டு ஒளிகுன்றும் இந்த கண்கள் காட்டிக்கொடுத்து விடுமே என்று கூறுகிறாள். தம்மை மறப்பவரை மறப்பது எளிதுதான். ஆனால் தலைவனின் புறத்தொழுக்கத்தால் வருந்தி வெளிறி ஒளி மங்கும் கண்கள் ஊராருக்குக் காட்டிக் கொடுத்துவிடுமே என்று அஞ்சுகிறாள்.   மன்னே என்னும் சொல் கழிவிரக்கத்தின் பொருட்டு வந்த சொல்.  ஊரன் என்ற தலைவனைக் குறிக்கும் சொல்லால்  தலைவன் அதே ஊரைச் சேர்ந்தவன் என்று புலப்படுகிறது. ஒரே ஊரில் அவன் பரத்தையரிடம் தங்கியிருந்தால் ஊருக்குத் தெரியுமே என்று அஞ்சினாளோ?
பசலை கொண்டு தன கண்கள் மஞ்சள் பூத்து ஒளிகுன்றுவதைக் கூறி வேறு வழியில்லை என்று வாயில் நேர்ந்தாள் போலும். இன்று போல் சங்க காலத்திலும் ஊராரின் பேச்சுக்குப் பயந்து வாழ்ந்திருந்தது தெரிகிறது.

சொற்பொருள்: அம்ம வாழி தோழி - வாழ்க தோழி கேட்பாயாக, ஊரன் - நம் ஊரைச் சேர்ந்த தலைவன், நம் மறந்து - நம்மை மறந்து, அமைகுவன் ஆயின் - இருப்பானேயானால், நாம் மறந்து உள்ளாது - நாமும் மறந்து நினையாது, அமைதலும் அமைகுவோம் - இருக்கவும் செய்வோம், மன்னே - அசைச் சொல்,  கயல் - கெண்டை மீன், எனக் கருதிய - உவமை, உண்கண் - மையிட்ட கண், பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே  - பசலையால் வாடாமல் இருந்தால் முடியுமே

என் பாடல்:
கேளடி தோழிநீ வாழ்க! நம் ஊரன் 
எனைமறந்து வாழ்ந்தால் எனக்கும் இயலும் 
கயல்மீனைப் போன்ற மையிட்ட கண்கள் 
வருந்திஒளி மங்காது இருக்குமா சொல்

20 கருத்துகள்:

  1. பள்ளிபருவத்தில் இது போன்று படித்ததை இப்போது மீண்டும் படிக்கிறேன் நல்ல வேளை விளக்கவுரை போட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. அந்த காலத்திலும் ,ஒழுக்கம் பெண்களுக்கு மட்டும்தான் போலிருக்கிறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சகோ..அப்படிச் சொல்ல முடியாது. தலைவன் ஒழுக்கமுடன் இருக்க வேண்டும் என்று இருந்ததாலேயே தலைவி அவன் தவறும்பொழுது ஊராரிடம் முறையிடுவதும், மீண்டும் சேராமல் இருப்பதும் பல பாடல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலில் இத்தலைவி ஏற்றுக்கொண்டிருக்கிறாள்.

      நீக்கு
  3. படிக்குற காலத்துலயே செய்யுளுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். விளக்கவுரை இருந்ததால் மீ எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  4. அருமை! மீண்டும் தொடர்வதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மையல் கொண்ட கயல் கண்கள்
    அயல் கண்கள் என்றானதும்
    புயல் வந்து சேராதோ
    பூவை நெஞ்சில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புயலை அமர்த்தி
      வாயில் நேர்ந்தாள்
      அயல்கண் அகற்றிப்பின்
      செயல் புயலாக அஞ்சி
      குளத்துக் கயல்கண்கூட
      பார்க்கத் துணியான்
      தையல் வலிமை பெரிதே
      :)

      நன்றி ஐயா

      நீக்கு
  6. நல்லதொரு பாடலும் சிறப்பான விளக்கமும். நன்றி கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  7. அருமை...
    விளக்கமாய் ஒரு பாடல் அறிமுகம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...