Tuesday, December 6, 2016

தமிழகம் கண்ட பெண் ஆளுமை


தமிழகம் கண்ட பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கண் மூடி மண்ணில் தஞ்சம் புகுந்த நாள் இன்று. வேறுபாடுகள் ஒதுக்கி மாநிலம் முழுவதும் நாடு முழுவதும் துக்கம். என் மனதும் ஒருவித கனமாக ஒருவித சோகமாக உணர்கிறது. பதின்ம வயதில் நான் அடியெடுத்து வைத்த காலமும்   ஜெயலலிதா அவர்கள்  தன்னுடைய அரசியல் வாழ்வில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தக் காலமும் ஏறக்குறைய ஒன்று. இரட்டை இலையென்றும் இரட்டைப் புறாவென்றும் தேர்தல் சந்தித்த நாட்கள் அவை. புரிந்தும் புரியாத வயதில் நாளிதழ்களை வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவேன். இரட்டைப் புறாக்கள் காணாமல் போய் இரட்டை இலை நன்கு துளிர்த்தது.


பின்னர் பலவிதமான அரசியல் பிரச்சினைகள்- மாநிலம் அறியும், நாடறியும். ஒவ்வொரு நிகழ்விலும் என் மனதில் என்னுடையது என்ற கருத்துகள் தோன்றும். உடன்பாடாகவோ, வியப்பாகவோ, சினமாகவோ பல தரப்பட்ட கருத்துகள். வெளிப்படுத்த அதிக வாய்ப்பில்லாமலோ தேவை இல்லாமலோ அவையும் கடந்து போயின. கல்லூரியில் சேர்ந்த பின்னர் இன்னும் ஆழமாகப் பார்க்கவும் சிலருடன் விவாதிக்கவும்கூட முடிந்தது. சில நேரங்களில் ஆகா! இப்படி ஒரு தலைவியா என்றும் சில நேரங்களில் ஏன் இப்படி என்றும் தோன்றும். அரசியல் செயல்பாடுகளில் விருப்பு வெறுப்புகள் உடன்பாடுகள் முரண்பாடுகள்  இருந்தாலும் ஒரு பெண்ணாக ஒரு மனிதராக அவர் ஏற்படுத்தியத்  தாக்கங்கள் உண்டு. அவரின் மொழித்திறனையும் அறிவாற்றலையும் வியந்திருக்கிறேன். சில தலைவர்கள் பற்றி வாசித்து அறிந்திருக்கிறேன், சிலரைக் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு வாழ்வும் அரசியலும் கொஞ்சம்  புரிய ஆரம்பித்து யோசிக்க ஆரம்பித்து வாழ்வில் அடியெடுத்த நாட்களில் இருந்து பார்த்த ஆளுமையாக ஜெயலலிதா இருந்திருக்கிறார் என்று உணர்கிறேன். அவரின் அரசியல் வாழ்வை, பொது வாழ்வை சக பயணியாகப் பார்த்து வியந்தும் விமர்சித்தும் வந்துள்ளேன் என்பதை உணர்கிறேன்.

ஆணாதிக்கச் சமுதாயம் ஏறி மிதித்த வேளையில் துவண்டு காணாமல் போயிருக்கலாம். அதைத்தானே சமூகம் எதிர்பார்த்திருக்கும்? வரலாறு மாறியிருக்கும். ஆனால் ஜெயலலிதா மீண்டும் எழுந்து வந்தார், தேவையான கவசங்களுடன். அவரிடம் ஒரு வெறி இருந்திருக்க வேண்டும்..வெற்றி பெற்றுக் காட்டுகிறேன் என்று, ஒரு தடம் பதித்துக் காட்டுகிறேன் என்று. செய்துவிட்டார் என்றுதான் எண்ணுகிறேன். சில அடிகள் அதிகமாகவே சென்றுவிட்டார் என்றே  தோன்றுகிறது. அனைத்துமே சரியாகச் செய்தாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் தலைவராக அதிலும் ஒரு பெண்ணாக  எவ்வளவு போராடியிருக்க வேண்டும் என்று புரிகிறது. ஒரு பெண்ணாக அந்த ஆளுமைக்குத் தலை வணங்குகிறேன். தனக்கான அங்கீகாரத்தை தனக்கான இடத்தைப் பிடிக்கக் குடும்பத்தையும் பணியையும் இழுத்துக்கொண்டு போராடும் பெண்கள் அனைவருக்கும் புரியும்.

பலரும் ஆணவத்தைச் சாடுகின்றனர். நானும் சாடியிருக்கிறேன். ஆனால் என் மனதில் வேறொன்றும் தோன்றாமல் இல்லை. எவ்வளவு அக்கிரமங்களையும் சோதனைகளையும் தாங்கித்  தன்னை தானிருந்த இடத்திற்குக் கொண்டு சென்றாரோ என்று! இரும்பு மனுஷி என்று அனைவரும் சொல்கிறோம், அந்த இரும்பு கவசத்திற்குள் ஒரு மென்மையான இதயம், அன்பிற்கும் அங்கீகாரத்திற்கும்  ஏங்கிய சாதாரண மனித இதயம் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இரும்புக்  கவசமின்றி அவர் இத்தனை ஆண்டுகள் அரசியல் தலைவராக இருந்திருக்கவும் முடியாது.

ஒரு நான்கு பேர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு பெண் கொஞ்சம் முன்னேறினால் தாங்குகிறதா இச்சமூகம்? தொலைத்துவிடத் தானே பார்க்கிறது? அறிவால் திறமையால் மோத முடியாவிட்டால் சமூகத்திற்கு இருக்கவே இருக்கிறது பாலினத்தாக்குதல். செயலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை..சொல்லாக..வாழ்வைக்கேள்வி கேட்கும் முறையாக, நடத்தையை, ஒழுக்கத்தை விமர்சிக்கும் முறையாக ஒரு பெண்ணை இச்சமூகம் முடக்கத்தானே பார்க்கிறது? எந்த மோதலில் தைரியமாக நிற்கும் பெண்ணாக இருந்தாலும் கடைசித் தாக்குதலில் பதறி நிலைகுலைந்து ஓடிவிடத் தானே பார்ப்பாள்?

ஆனால் எந்த வித அஸ்திரத்திலும் அசராமல் முன்செல்ல வேண்டும் என்றால் ஒரு ஆணவம் தேவையாகத் தானிருக்கிறது. ஒரு தைரியம் தேவையாகத் தானிருக்கிறது. அப்படித் தனக்கான கவசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகள் அரசியல் வாழ்வில் சிம்மமாய் சிம்ம சொப்பனமாய் கடிவாளம் பிடித்து இருந்திருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய வெற்றி. சில பல விசயங்களில் உடன்பாடு இல்லையென்றாலும் சில பல விசயங்களில் பாராட்டித் தான் ஆகவேண்டும். வியந்து தான் ஆகவேண்டும்.

தனக்கென ஒரு இடம் உருவாக்கி சாதித்துச் சென்ற பெண் ஆளுமை அவர். குறை நிறைகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த ஆளுமை துயில் கொண்டுவிட்டது. தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வெற்றிடம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா அவர்களால் ஒரு நேர்மறைத் தாக்கம் உணர்ந்தவர்களும் குறை நிறைகளில் பாடம் கற்றவர்களும் வந்து நிரப்புவர் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

"மனைவியாக வாய்க்கவில்லை, அம்மாவாக இருப்பேன்" என்று ஒரு பேட்டியில் சொன்னதை நிறைவேற்றிச் சென்றிருக்கிறார். அம்மா..அம்மா..அம்மா மாநிலம் முழுவதும் அம்மாவாகக் கண்மூடிவிட்டார். வாழ்வில் அமைதி கொண்டிருந்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

RIP Ms.Jayalalitha.

13 comments:

 1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 2. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 3. திருமதி இந்திரா காந்திக்குப் பின் நம் காலத்தில் மறுபடியும் ஒரு இரும்புப்பெண்மணி.

  ReplyDelete
 4. அவர்களது ஆன்மா இறைநிழலில் சாந்தியடையட்டும்..

  ReplyDelete
 5. ஆழ்ந்த இரங்கல்கள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

  ReplyDelete
 6. ஆழ்ந்த இரங்கல்கள். சினிமா, அரசியல் இருதுறைகளிலும் உச்சம் தொட்டவர். தாய்குலங்களின் உள்ளம் தொட்டவர். சரியோ தவறோ தனது முடிவில் மாறாதவர். பன்முக திறமை கொண்ட தலைவர் நமது சமகாலத்தில் வாழ்ந்தவர் தற்போது இல்லை என்பது நிச்சயம் மிகப்பெரிய வெற்றிடமே. அவரது ஆன்மா சாந்தியடைட்டும்.

  ReplyDelete
 7. எனக்கும் இதே உணர்வு தான்மா

  ReplyDelete
 8. எனது தலைமையிலான அரசு என்று சொல்லிக்கொள்ள தங்கத்தாய் இல்லை,இந்த உணர்வோட்டத்தில் தான் கொஞ்சம் இறுமாப்பு இருக்கும்.அந்த இறுக்கமும் ஆணாதிக்க வர்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது என்பது எனக்கு நான் எனக்குத் தந்து கொள்ளும் சமாதானம்.என்ன ஒரு அவமானத்துக்குள்ளாக்கப்பட்ட்டார் அவர்.

  ReplyDelete
 9. சரியாக சொல்லி இருக்கிறீர்கள் எதிரிகளையும் வியக்க வைக்கும் ஆளுமை ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் இல்லை

  ReplyDelete
 10. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...