ஐங்குறுநூறு 35 - நார் உரி ஆம்பல் மென்கால்


 தவறொன்றும் நிகழாதது போல வாயில் வேண்டி தூது வருபவரைக் கண்டால் சினம் வருகிறது தோழி. என்னைப் பார்த்தாலே புரியவில்லையா? அவர் செயலால் நான் முன்பிருந்த களையிழந்து வாடி நிற்பது?

 ஐங்குறுநூறு 35 - பாடியவர் ஓரம்போகியார்
தலைவி தோழிக்குச் சொல்வதாக (தலைவனுக்குக் கேட்கும்படியாக) அமைந்த 'தோழிக்குரைத்த பத்து' மருதம் திணை பாடல்களில் ஒன்று.



அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே 
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே


இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு இங்கே Water Lily's peeled bright stem  சொடுக்கவும்.

எளிய உரை: கேளடி  தோழி! நம்மூர்ப் பொய்கையில் பூக்கும் ஆம்பலின் நார் உரித்தத் தண்டினை விட ஒளிவீசக் கூடியதாயிருந்த என் மேனி அழகு இப்பொழுது பசலை கொண்டு நிறமிழந்து மங்கிவிட்டதே.

விளக்கம்: தலைவியை நீங்கி பரத்தையரிடம் சென்ற தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வர அனுமதிகேட்டு ஆள் அனுப்புகிறான். வாயில் வேண்டி வந்தவர் காதில் கேட்குமாறு சினத்துடன்  வாயில் மறுத்துத் தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல். அன்பற்ற தலைவனின்  புறத்தொழுக்கத்தால் தன் மேனியழகு ஒளியிழந்து மங்கிவிட்டது என்று சாடுகிறாள்.  இவரின் அன்பற்ற புறத்தொழுக்கத்தால் தன் மேனியின் அழகு ஒளியிழந்து இருக்கிறேனே என்று வருத்தத்துடனும் ஒன்றும் நடவாதது போல வாயில் கேட்டு  வருவதால் சினத்துடனும்  கூறுகிறாள். 
மன்னே என்னும் சொல் கழிவிரக்கத்தின் பொருட்டு வந்த சொல். மாமை என்ற சொல் நோயின்றி உடல் நலமும் அழகும் கொண்ட புறஅழகைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
" பெண்பா லவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாணும் திண்பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல்" சீவக சிந்தாமணி 1961.
"மணிமிடை பொன்னின் மாமை என் அணிநலன் சிதைக்குமார் பசலை" நற்றிணை 304. பசலை மாமை அழகைக் கெடுப்பது பற்றிய மற்றுமொரு பாடல்.

சொற்பொருள்: அம்ம வாழி - தோழி கேட்பாயாக, நம்மூர்ப் பொய்கை - இயற்கையான நீர்நிலை, ஆம்பல் நார் உரி மென்கால்  - ஆம்பலின் நார் உரிக்கப்பட்ட மெல்லிய தண்டு, நிறத்தினும் நிழற்றுதல் - நிறத்தை விட ஒளிவீசுவதாயிருந்த, மன் - கழிவிரக்கப் பொருள், இனி - இப்பொழுது, பசந்தன்று - ஒளியிழந்தது, என் மாமைக் கவினே - என் மேனி அழகே

என் பாடல்:
கேளடி தோழி! நம்மூர்ப் பொய்கை
ஆம்பல்  நார்உரி மென்தண்டின் நிறத்தினும் 
ஒளிமிகுந்த  என்மேனி அழகு 
இப்பொழுது ஒளியிழந்து கொண்டதே பசலை

14 கருத்துகள்:

  1. அருமை. தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. தொடர்க.

    பதிலளிநீக்கு
  2. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, எப்பொழுதும் போல் திருக்குறள் :) கலக்குங்க.
      நன்றி அண்ணா.

      நீக்கு
  3. இரசித்தேன் சகோ வாழ்த்துகள் தொடரட்டும்
    த,ம,வேலை செய்யவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.
      அப்படியா..இப்பொழுது வேலை செய்கிறது சகோ. பரவாயில்லை :)

      நீக்கு
  4. அருமை! சகோ/க்ரேஸ் வெகுநாட்களுக்குப் பிறகு!! வாசிக்கின்றோம்...

    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைப்பளு இருந்தாலும் இணையம் வரும்பொழுது கண்டிப்பாக என் தளமும் வந்து வாசித்துக் கருத்திட்டு ஊக்கமளிக்கும் துளசி அண்ணாவிற்கும் கீதாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...