விடுதலைப் பயணம் Freedom March

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 
5. செங்குருதி ஞாயிறு


Image:thanks Google

         மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள்  வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!
         செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 1937இலிருந்து 1957வரை, இருபது வருடங்களாக பாராளுமன்றத்திலும் செனட்டிலும் கறுப்பினத்தவருக்கு உதவக் கூடியச் சட்டங்களுக்கு எதிராக வாக்களித்தவர். மெக்சிகன் அமெரிக்கன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அனுபவம் ஜான்சனை மிகவே பாதித்து அவர் மனதை மாற்றியிருந்தது என்று ஜான்சனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றில் ராபர்ட் கேரோ கூறுகிறார். வாழ்க்கை குறிக்கோளோடு கருணையும் சேர்ந்துகொள்ள ஜான்சன் சமக் குடியுரிமை நோக்கி செயல்படத் துவங்கினார் என்கிறார் ராபர்ட். கருணையில்லா குறிக்கோள் கொடுங்கோலாக மாறும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய உண்மை இல்லையே?

Image:thanks Google

         மார்ச் 15 அன்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார் ஜான்சன். "சில நேரங்களில் விதியும் வரலாறும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்தித்து மனிதனின் ஓயாத விடுதலைப் போராட்டத்தில் திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்தும். அதுமாதிரிதான் கடந்த வாரம் செல்மாவில் நடந்திருக்கிறது" என்றார். ஜான்சனின் நீதித்துறை செல்மா நிகழ்விற்கு இருதினங்களுக்கு முன்னர் ஒரு சட்ட முன்வரைவு தயார் செய்திருந்தனர். "நாடு பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் விண்மீன்களைத் தொட்டாலும் சமக் குடியுரிமை இல்லாமல் ஒரு பகுதி மக்கள் தவிப்பார்களேயானால் தோல்வியடைந்த நாடாகவே இருப்போம்" என்றார் ஜான்சன். ஆப்பிரிக்க அமெரிக்கரின் சமக்குடியுரிமை போராட்ட்டம் அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே உரியது என்று கூறிய அவர்  நாம் வெற்றி பெறுவோம் ("We shall Overcome") என்று கூறி உரையை முடித்தார். வெள்ளையின அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வரிகளைக் கூறியது இதுவே முதல் முறை!
         தொலைக்காட்சியில் ஜான்சனின் உரையைப் பார்த்துக் கொண்டிருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் கண்ணீர் விட்டழுதார். கடந்த வாரத்தின் நிகழ்வுகள் அவர் மனதில் ஓடி வேதனையை உண்டாக்கிய அதே நேரத்தில் அதிபரின் சமக்குடியுரிமை ஆதரவு உரை நெகிழ்ச்சியாய் வெற்றியை முன்னறிவித்தது.
         கிங் அவர்களின் நினைவு சற்றுப் பின்னோக்கிச் சென்றது. கவர்னர் வாலேஸ் நான் கவர்னராய் இருக்கும் மாநிலத்தில் நீக்ரோக்களை ஊர்வலம் செல்ல விட மாட்டேன் என்று சொன்னதால் ஏதோ அசம்பாவிதம் ஏற்படும் என்று பயந்த கிங் அவர்கள் செல்மாவிலிருந்து போராட்டக் களத்தை மாற்றலாமா என்றுகூட யோசித்திருந்தார்.1 ஆனால் ஜேம்ஸ் பெவல் மற்றும் ஓசியா வில்லியம்ஸ் ஊர்வலத்தைத் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்றனர். மார்ச் 6ஆம் தேதி இரவு நடந்த அவசரக் கூட்டம் கூட்டி ஊர்வலத்தைத் தள்ளி வைக்க யோசித்து முழு ஆதரவு இல்லாததால் பெரும் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார் கிங். மார்ச் 7 அன்று காலை ஊர்வலத்தை நிறுத்துமாறு ஆண்ட்ரூ யங் என்பவரை அவசரமாக செல்மாவிற்கு அனுப்பினார்.
          விமானம் மூலம் மான்ட்கொமெரி அடைந்த ஆண்ட்ரூ யங், காரில் செல்மா நோக்கி பதட்டத்துடன் விரைந்தார். எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் ஒரு முனையில் படைவீரர்கள் குவிந்திருந்ததைப் பார்த்துவிட்டு  பிரவுன் சேப்பல் அடைந்த ஆண்ட்ரூ, அங்கு குழுமியிருந்த மக்களைக் கண்டு துணுக்குற்றார்.ஓசியாவில்லியம்ஸைத் தனியாக அழைத்து ஊர்வலத்தை கிங் அவர்களின் உத்தரவுபடி நிறுத்தவில்லையா என்று கேட்டார். ஆனால் கிங் அவர்கள் மனதை மாற்றிக்கொண்டதாகவும் பெவல் அவர்களிடம் பேசுமாறும் ஓசியா சொன்னதைக் கேட்டுத் திகைத்தார். குழப்பத்தைத் தீர்க்க அட்லாண்டாவில் இருந்த கிங் அவர்களைத் தொடர்பு கொண்டார். ஆனால் அதற்குள் திரண்டிருந்த மக்களையும் செய்தியாளர்களையும் பார்த்த யங் ஊர்வலம் செல்லுவதே சரியாக இருக்கும் என்று கிங் அவர்களிடம் சொன்னார். கிங் அரைமனதாக ஒப்புக்கொண்டிருந்தார். அதன் பின் நடந்தது தான் மிகக் கொடுரமான தாக்குதல் ஆயிற்றே!
         மார்ச் 9ஆம் நாள் மீண்டும் ஒரு ஊர்வலத்தை வழிநடத்திய கிங் அவர்கள் எட்மன்ட் பெட்டஸ் பாலத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். அதிபர் ஜான்சன் கிங் அவர்களிடம் தான் சமக் குடியுரிமைக்கு ஆதரவு அளிப்பதாகவும் சற்றுக் காத்திருக்குமாறும் கூறியிருந்தார்.
         நினைவலைகளில் இருந்து மீண்ட கிங் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்தார். மார்ச் 21ஆம் நாள்ஏறக்குறைய 3000 பேர் பிரவுன் சேப்பலில் திரண்டனர். மாண்ட்கோமரியை நோக்கி ஊர்வலம்! வரலாற்றை மாற்றியமைக்கப் போகும் ஊர்வலம்! அதிபர் ஜான்சனின் உத்தரவின் பேரில் அமெரிக்கப் படையினர் பாதுகாப்போடு மக்கள் ஊர்வலத்தில்கலந்து கொண்டனர். என்ன ஒரு திருப்பம்! காலமும் விலையும் அதிகம் என்றாலும் அநீதி அடங்கியே ஆகவேண்டும் அல்லவா?

Image:thanks Google

         செல்மாவிலிருந்து மாண்ட்கோமரிக்கு 54 கி.மீ. தூரம். ஏழு கி.மீ. நடந்து வழியில் ஒரு இடத்தில் ஓய்வெடுத்தனர். 300 பேர் மட்டும் ஊர்வலம் செல்லக் கேட்டுக் கொள்ளப்பட்டதால் மற்றவர் செல்மாவிற்குத் திரும்பிச் சென்றனர். பாதுகாப்பு கருதியே இந்த ஏற்பாடு. மார்ச் 25ஆம் நாள் மாண்ட்கோமரியைஅடைந்தனர். ஆகா!! என்ன ஒரு உணர்ச்சி! சுமார் ஐம்பதாயிரம் மக்கள் கவர்னர் மாளிகையின் முன் திரண்டிருந்தனர். கவர்னர் வாலேஸ் திரைச் சீலை வழியாகப் பார்த்துக் கொண்டிருக்க கிங் அவர்கள் உற்சாகமாய் உரையாற்றினார்.
         நிற வேற்றுமைக்கு சாவு வந்துவிட்டது. குண்டுவெடிப்புகளும் அடிதடியும் கொலைகளும் எங்களை நிறுத்தாது. வெள்ளையினத்தவரைத் தோற்கடிப்பது அல்ல, அவர்களின் நட்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். சுமூகமான சமூகமே நாங்கள் விளைவது என்றார் கிங். உடலில் சோர்ந்திருந்த மக்கள் உணர்ச்சியில் மிகுந்திருந்தனர். இதோ, பல தடைகளைத் தாண்டி கவர்னர் மாளிகை வந்துவிட்டோம். எங்கள் சம உரிமையைத் தடுப்பது எதுவுமில்லை என்ற உணர்ச்சி!


         "இன்னும் எத்துனைக் காலம் ஆகும்?
           இன்னும் எத்துனைக் காலம்? அதிகமில்லை, ஏனென்றால் பொய் நிரந்தரமற்றது.
           இன்னும் எத்துனைக் காலம்? அதிகமில்லை, ஏனென்றால் விதைத்ததை அறுப்பீர்கள்.
           இன்னும் எத்துனைக் காலம்? அதிகமில்லை, ஏனென்றால் அறம்சார் உலகின் வளைவு நீளமாயிருந்தாலும் நீதியின் பக்கமே அது சாயும்." - கிங்

             ஆமாம், நீதியின் பக்கம் சாயத்தான் செய்தது. அவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் 6ஆம் நாள்  சமக் குடியுரிமைச் சட்டம் அமலாக்கப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. ஓட்டுரிமை கொடுப்பதற்காக நடத்தப்பட்டத் தேர்வுகள் தடை செய்யப்பட்டன. ஓட்டுரிமை மட்டும் அல்ல, அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கவும் இந்த சட்டம் வழிசெய்தது. அடிமைத்தனத்தின் கடைசி சங்கிலி அறுபட்டது என்று தன் உரையில் குறிப்பிட்டார் அதிபர் ஜான்சன்.2


உசாத்துணை:
1. செல்மா ஊர்வலத்தைத் தூண்டிய வன்முறை 
2. அதிபர் லிண்டன் ஜான்சனின் சமக் குடியுரிமை அமலாக்க உரை
3. விடுதலைப் பயணம் காணொளி
4. The Bridge-Life and Rise of Obama by David Remnick

குடியுரிமைப் போராட்டத் தொடர் முற்றும். தொடரை வாசித்து ஊக்குவித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!

-கிரேஸ் 

19 கருத்துகள்:

  1. குடியுரிமைப் போராட்டத் தொடரை முற்றாக வாசிக்க வில்லை.. இடையிடையே தடங்கல்கள்..

    முற்றாகப் படிக்கத் தூண்டுகின்றது - நிறைவுப் பகுதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
      நேரம் கிடைக்கும் பொழுது மெதுவாக வாசியுங்கள் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, ஆனால் இன்றும் களையப் படவேண்டிய எச்சங்கள் இருக்கின்றனவே :-(

      நீக்கு
  3. ஆழமான நடை...மீண்டுமொருமுறை படித்து விரிவான பின்னூட்டமிடுகிறேன் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ.
      கண்டிப்பாகச் செய்யுங்கள், என் எழுத்தை மெருகேற்ற உதவும்.

      நீக்கு
  4. படிக்கப் படிக்க மனம் வியக்கிறது சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா.. கடல் போல் இருக்கிறது.. நேரம் கிடைக்கும்பொழுது சிறு பதிவுகளாக இட நினைத்திருக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  5. நல்லதொரு தொடர். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  6. பிரமிப்பான தகவல்கள் காணொளி அபூர்வமானதே...
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  7. நிறவெறி பற்றிய கொடுமையை விளக்கும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. நேற்றே வாசித்துவிட்டோம் கருத்து இட்டோம் அது போகவில்லை என்று நினைக்கின்றோம்.

    அருமையான தொடர். பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது. அழகாகத் தமிழாக்கம் செய்து தொகுத்துப் பகிர்வதற்கு மிக்க நன்றி சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ஆமாம் அண்ணா, அந்த கருத்துரை வரவில்லை.
      மீண்டும் வந்து கருத்திட்டத்தற்கு மிக்க நன்றி அண்ணா, கீதா

      நீக்கு
  9. எனது மகாமகப்பதிவுகள் காரணமாக தாமதமாகத் தான் பார்க்கமுடிந்தது. எடுத்துச்சென்றவிதம், பகிர்ந்த புகைப்படங்கள் என்ற நிலையில் தாங்கள் நல்ல பொருண்மையை எடுத்து அதிக செய்திகளைத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...