ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்


முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 

ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி  சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும்  எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.



         கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாகச் செல்வோம். அறிவிப்போம் நம் ஒற்றுமையை, அடைவோம் நம் உரிமையை என்று பொங்கி எழுந்தனர். கவர்னர் ஜார்ஜ் வாலேஸ் (George Wallace) 1அப்போது அலபாமா மாநிலத்தின் கவர்னராக இருந்தார்.

Image:thanks Google

         ஜார்ஜ் வாலேஸ் 1958இல் கவர்னராகப் போட்டியிட்டுத் தோற்றவர். பின்னர் 1962இல் நிறப் பிரிவினை ஆதரவளிக்கும் தளத்தில் கேகே கிளானால் (முதல் பதிவான செல்மாவில் இக்குழுவைப் பற்றி அறியலாம்) ஆதரிக்கப்பட்டு மீண்டும் போட்டியிட்டார். அப்படியா இருந்தனர் மக்கள் என்று வேதனைப் படும்விதத்தில் நிறப்பிரிவினை ஆதரவு ஜார்ஜைக் கவர்னராக அமரச் செய்தது. தங்கு தடையின்றி நிறவேற்றுமைக் கொடுமைகள் அரங்கேறின! 1964இல் வாலேஸ் சமக்குடியுரிமை போராட்டத்தின் எதிர்ப்பின் அடையாளமாகவே மாறிப்போயிருந்தார். சமக்குடியுரிமைக்கு ஆதரவு தந்த பெடரல் அரசின் எதிர்ப்பாளராகவும் இருந்தார். ஒரு மாநிலக் கவர்னராக வாலேஸ் ஆற்றியக் கொடுமைகள் மிகக் கொடூரமானவை. நல்ல வேளை, அமெரிக்க அதிபராகப் போட்டியிட்டுத் தோற்றார், இல்லாவிட்டால் வரலாறு மாறியிருக்கலாம்.

ஆப்பிரிக்க மாணவர்களைக் அலபாமா கல்லூரிக்குள் விடாமல் தடுக்கும் வாலேஸ்

         செல்மாவிலிருந்து மான்ட்கொமெரிக்கு ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் ஊர்வலம் செல்ல மார்டின் லூதர் கிங்கின் தலைமையில் திட்டமிடுகிறார்கள் என்று அறிந்த வாலேஸ், "நான் கவர்னராய் இருக்கும்வரை என் மாநிலத்தில் நிக்ரோக் கூட்டத்தை நெடுஞ்சாலையில் நடக்கவிடமாட்டேன்" என்று கர்ஜித்தார்.
         சரி, நாம் வாலேசை ஓய்வெடுக்கவிட்டுப் போராட்டக் களமான செல்மா செல்வோம்!செல்மாவில்முக்கியமான ஒருவரைப் பற்றி அறிந்துகொண்டபின் தொடர்வோம். அவர் தான் ஜான் லூயிஸ் (John Lewis)2.
         1955இல் ரேடியோவில் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் இயேசுவின் சீடர் பவுலின் குரலாய் வெள்ளைக் கிறித்தவர்களைச் சாடியதைக் கேட்டார். கிங் அவர்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் போலப் பாதிரியாராக விரும்பினார் லூயிஸ். அவ்வருடம் பேருந்தில் இடம் கொடுக்க மறுத்துக் கைது செய்யப்பட்ட ரோசா பார்க்ஸ் என்ற பெண்மணிக்கு ஆதரவாக எழுந்தப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். அகிம்சை வழியில் போராடுவதைப் பாதிரியாருக்குப் படித்தக் கல்லூரியில் கற்றுக்கொண்ட லூயிஸ் உணவகங்கள் பேருந்து நிறுத்தங்களில் நிற வேறுபாடு இன்றி ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இயேசு, காந்தி, தோரியோ, கிங் அவர்களின் அடிகோள்களைப் பின்பற்றிய லூயிஸ் பெரிதும் துன்புறுத்தப்பட்டார். போக்கிரிகள் லூயிஸின் கழுத்தில் பலமுறை சிகரெட்டால் சுட்டனர். ப்ரீடம் ரைடராகப் பேருந்தில் சென்றபொழுது கொல்லப்பட முயற்சி செய்யப்பட்டுப் பிழைத்தவர். சமஉரிமைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்  மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதில் முனைப்புடன் செயல்பட்டவர். அதனால் பலமுறை (நாற்பதுக்கும் மேல்) சிறை சென்றவர். ஆனால் ஒவ்வொரு முறை சிறை சென்று வருவதையும் தன்  கடமை போல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தப் போராட்டத்திற்குத் தயாராகிவிடுவார்.
          சிறை சென்று வருவதைப் பற்றிய அவருடைய எண்ணம்  இப்படியிருந்தது."அமெரிகஸ், ஹேடிஸ்பர்க், செல்மா சிறைகளிலிருந்து, முக்கியமாகச் செல்மாவின் சிறையிலிருந்து வெளிவருவது என்பது எனக்கு என் வாழ்வின் முக்கியமான மற்றும் சுவாரசியமான தருணங்கள். சிறையிலிருந்து வெளிவந்த உடன் அருகிருக்கும் ப்ரீடம் ஹௌசிற்குச் சென்று நன்றாக ஒரு குளியல் போட்டுவிட்டு, சுத்தமான ஜீன்ஸ் மற்றும் சட்டையுடன் டியூ ட்ராப் இன் போன்ற சிறிய ரோட்டோரக் கடைக்குச் சென்று ஹாம்பர்கரும் அதோடு தண்ணியோ சோடாவோ வாங்கிக்கொண்டு ஜுக் பாக்சை (தானியங்கும் இசைபெட்டி)  நோக்கிக் செல்வேன். கையில் ஒரே ஒரு குவார்ட்டர் நாணயத்தை (நாலணா போன்றது)  வைத்துக் கொண்டு மிகவும் நிதானமாக அதிலிருக்கும் ஒவ்வொரு பாடலையும் பார்ப்பேன். ஏனென்றால் ஒரு பாடல் தேர்வு செய்வது மிகப்பெரிய விசயம், சரியானதாக இருக்க வேண்டும். மார்வின் கேய், கர்டிஸ் மே பீல்ட் அல்லது அரேதா பாடலுக்கு என் நாணயத்தைப் போட்டுவிட்டுப் பாடலை ரசித்துக்கொண்டே உண்பேன். அதுபோன்ற இனிமையை வேறெங்கும் அனுபவித்தேனா என்று தெரியவில்லை" என்கிறார் ஜான் லூயிஸ்.
         செல்மாவின் மூலை முடுக்கெல்லாம் அறிந்திருந்தார் ஜான் லூயிஸ். மாணவர் அகிம்சைப் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினை (Student Nonviolent Coordinating Committee, SNCC) உருவாக்க உதவி, அதில் பெரும்பங்காற்றியவர் ஜான் லூயிஸ்.
 
காங்கிரஸ்மேன் ஜான் லூயிஸ் Image:thx Google
         ஜான் லூயிஸ் மற்றும் சதர்ன் கிறிஸ்டியன் லூதரன் சர்ச்சைச் சேர்ந்த ஓசியா வில்லியம்ஸ் (Hosea Williams) இருவரின் தலைமையில் மான்ட்கொமெரி நோக்கிய ஊர்வலம் மார்ச் 7, 1965 அன்று செல்மாவிலிருந்துப் புறப்பட்டது. அப்பொழுது இருபத்தைந்து வயதான லூயிஸ் மழை கோட், பூட்ஸ், மற்றும் ஒரு பையில் பல்துலக்கும் பிரஷ் மற்றும் சில பழங்களை வைத்திருந்தார், "ஒருவேளை எனக்குச் சிறையில் பசித்தால்?" என்று.
          லூயிஸ் மற்றும் வில்லியம்ஸ் பிரவுன் சேப்பலிலிருந்து எட்மன்ட் பெட்டஸ் பாலத்தை (Edmund Pettus Bridge) நோக்கி மக்களை வழிநடத்திச் சென்றனர். அறுநூறு மக்கள் இரட்டை இரட்டையாக வரிசையாகச் சென்றனர். தன்னுடைய 'வாக்கிங் வித் வின்ட்' என்ற நினைவுக் குறிப்பில் ஜான் லூயிஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார், " நான் பல ஊர்வலங்களில் பங்கெடுத்திருந்தாலும் இந்த ஊர்வலம் தனித்தன்மை பெற்றிருந்தது. பாடல்களோ கோஷங்களோ எதுவும் இன்றி மிகவும் அமைதியான முறையில், ஒரு சவ ஊர்வலத்தைப் போன்று இருந்தது. புனிதமான ஒரு யாத்திரை போன்றும் எனக்குத் தோன்றியது. மகாத்மா காந்தியின் கடலை நோக்கிய நடைப்பயணம் எனக்கு நினைவுக்கு வந்தது. ஒரு அணிவகுப்பில் நடக்கும் பாதங்களை விட வலுவானது ஏதும் இல்லை கிங் அவர்கள் சொல்வார்கள். அதற்கேற்றார்ப் போல உறுதி கொண்ட மக்களின் நடை இருந்தது. காலடிகளைத்  தவிர வேறு ஒலி ஏதுமில்லை."

ஜான் லூயிஸ்


         எட்மன்ட் பாலத்தின் மேல்முகட்டைஅடைந்த லூயிசும் வில்லியம்சும் திடீரென்று நின்றனர். அவர்களுக்குப் பின்னால் மக்களும் - ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் அறுநூறு பேர்!


ஏன் நின்றனர்? தொடர்ந்து சென்றார்களா இல்லையா? அடுத்தப் பதிவில்..
(பதிவின் நீளம்  கருதி இங்கு நிறுத்தியிருக்கிறேன், அடுத்தப் பதிவு விரைவில்.)


உசாத்துணை:
1. ஜார்ஜ் வாலேஸ் 
2. ஜான் லூயிஸ் 
3. தி பிரிட்ஜ் எனும் டேவிட் ரெம்னிக் அவர்களின் நூலிலிருந்து. (The Bridge - The life and rise of Barack Obama by David Remnick)




14 கருத்துகள்:

  1. தம வாக்கிட்டு விட்டேன். தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. நீண்டதொரு சரித்திரம் தொடர்கிறேன் சகோ
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. நிரம்ப படிக்கின்றீர்கள் என புரிகின்றது!
    தேடல்களும் விமர்சனங்களும் அருமை கீரேஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நிஷா, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது அதிகம் இருக்கிறது , நேரம் தான்.. :-)))
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிஷா

      நீக்கு
  4. வாழ்த்துகள்
    ஒரு பெரும் நூலில் சிறு அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
    தொடர் முடிந்ததும் ஒரு மின்னூல் நிச்சயம் வரவேண்டும்..

    இல்லை வந்துவிடும் புதுகையில் இருந்து..
    மீண்டும் வாழ்த்துகள்
    சிறைக்கு ஆயத்தத்துடன் சென்ற ஜான் உண்மையில் ஒரு குறியீடாக இருக்கிறார்.
    நடக்கின்ற கால்கள் தான் பலமானவை எப்படி உணர்வேற்றியிருக்கிறார் ரெவ் மார்டின்..
    உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்தான்
    தம +
    ஜானின் நூல் தலைப்பு மனசை என்னென்னெவோ செய்கிறது
    வாகிங் வித் வின்ட்
    அறம் சார்ந்து நடந்தால் காற்றுடன்தான் நடக்கவேண்டுமோ
    பாசிடிவாக எடுத்துக்கொண்டால்
    இயற்கையும் கூட வரும் என்றும் எடுக்கலாம் ..
    நூலின் இந்த சாப்டருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அண்ணா, உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்!
      ஆமாம் அண்ணா, கிங் அவர்கள் போற்றுதலுக்கு உரியவரே! அவரோடு இணைந்து போராடிய பலரை அறியும்பொழுதும் மனம் சிலிர்க்கிறது. அதிலும் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும், ஒரு சில இடங்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறது என்பதும் பெரிய விசயமாகக் கருதுகிறேன் அண்ணா.
      மீண்டும் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

      நீக்கு
  5. அருமையான ஒரு சரித்திர நிகழ்வையும், சரித்திரத்தில் சரித்திரம் படைத்த மாந்தர்களைக் குறித்தும் சொல்லி வருகின்றீர்கள். அருமை..தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
  6. Just read this. Why don't you write this like a story so that it'll engage people into this.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for the nice thoughtful idea Aavee. Never considered this idea as I thought it would consume more time. Moreover am not so well versed in writing stories like you and few other friends. Anyways will have this in my mind and try. Thanks a lot once again :-)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...