மதுர மதுரை


மதுரை! இனிய நினைவுகளுடன் உணர்வில் கலந்த மதுரமான ஊர். மதுரை பற்றிய நினைவுகள் என் சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்தவை. கொடைக்கானலில் இருந்து விடுமுறைக்கு பெரியம்மா வீட்டிற்கு வரும் மகிழ்ச்சி இன்னும் மனதில். அப்பொழுது பெரியம்மா வீட்டில் மின்விசிறிக்கு அடியில் படுத்துக்கொண்டு, அதன் நடுவே இருக்கும் கலைநயம் பொருந்திய கோப்பையைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன், கழண்டு மேலே விழுந்துவிடுமோ என்று!

என்னையும் என் தங்கையையும் கவர்ந்த இன்னொரு விசயம் தெருக்குழாய். தேவை இல்லையென்றாலும் அங்கு சென்று நீர் எடுத்துவர அவ்வளவு ஆசையாக இருக்கும். எங்களுக்காகவே சிறு குடம் வாங்கிக் கொடுத்தார்கள். அதை இடுப்பில் தூக்கிக் கொண்டு நாங்கள் செய்த அலப்பறை!! :) அரை லிட்டர் தான் பிடிக்கும்.காலையும் மாலையும் நீர் எடுத்து வந்தேத் தீருவோம் என்று இருக்கும் பாத்திரங்களை எல்லாம் நிரப்புவோம்.

பிறகு, மல்லிகைப் பூ! உதிரிப் பூக்களை வாங்கிக் கட்டி ஆசையுடன் வைத்துவிடுவார் பெரியம்மா. நானும் பூ கட்டவேண்டும் என்று கற்றுக்கொண்டு முயற்சித்தால், மூன்றாவதைக் கட்டும் பொழுது முதலில் கட்டியது கீழே விழும். அழுது, பிறகு ஊசி நூலில் கோர்க்கச் சொல்லிக் கொடுத்தார்கள்.
மதியம் வரும் பனிக்கூழ் வண்டி...சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று வாங்கிய குச்சி ஐஸ் கையெல்லாம் வழியும். இப்படி விடுமுறைக்கு வந்து மகிழ்ந்த மதுரைக்குப் புலம்பெயர்ந்த பொழுது வருத்தமாகத் தான் இருந்தது, தாத்தா, அம்மாச்சியை, படித்த பள்ளியை, ..கொடைக்கானலை விட்டுவருகிறோம் என்று. மதுரையில் அப்பொழுது எனக்கும் என் தங்கைகளுக்கும் கல்சுரல் ஷாக் தான். இளையவள், அப்பொழுது நான்கு வயது,  வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாள். என்னவென்று கேட்டபொழுது இங்கு பெட் ரூமே இல்லையே என்றாள். கொடைக்கானலில் மரத்திலான தரை இருக்கும். பிறகு பள்ளிக்குத் தேர்வெழுதி சேர்ந்தோம். பல நாட்கள் அழுதிருக்கிறேன், பள்ளியில் தமிழில் பேசுகிறார்கள் என்று!! (உண்மையா, நானே தான்!! :) ) ஆங்கில மீடியம், ஆனால் தமிழில் பேசுகிறார்கள், பள்ளிச் சீருடையில் ஷூ இல்லை, அதிக மாணவிகள், மாணவர்கள் இல்லை :), என்று குறைகளின் பட்டியல் அதிகம் இருந்தது.
ஆனால் மெதுவாக மதுரை மனதோடு நெருக்கமானது. கொடைக்கானல் காரவுங்க வீடு என்று பெயர் பெற்று மதுரையில் ஐக்கியமானோம். நகரப் பேருந்தில் செல்வதென்றால் அப்படியொரு மகிழ்ச்சி வரும். தனியாக விடவே மாட்டார்கள். பள்ளிக்குப் பள்ளிப் பேருந்துதான். கல்லூரி சென்ற பிறகு தான் தனியாக நகரப் பேருந்தில் சென்றேன். வெற்றிக் களிப்பில் சென்ற என்னை வாசலில் காத்திருந்து வரவேற்றார் அம்மா!
பிறகு மதுரையைவிட்டுப்  பெங்களூருவிற்கு வேலைக்குச் சென்றாகிவிட்டது. முதன்முதலாக விடுதியில்!! மாதம் ஒரு முறை அதுவும் வார இறுதிக்கு மட்டும் என்று மதுரை விஜயம். புகைவண்டியில்  திண்டுக்கல் அருகிலேயே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். திருமணத்திற்குப் பிறகு அதுவும் குறைந்தது. முதல் பிரசவத்திற்கு, விசேசங்களுக்கு என்று மட்டுமே மதுரை என்று மாறிப்போனது.
இத்தனைக்குப் பிறகும் மனதோடு, உணர்வோடு ஒன்றாகிப் போனது மதுரை. பள்ளி, கல்லூரி நினைவுகள், நண்பர்கள் என்று இனிய நினைவுகள் அதிகம். எப்பொழுது மதுரை சென்றாலும் பார்க்க வந்துவிடும் அன்பு உள்ளங்கள் மேலும் அதிகம். எந்தக் கவலையும் இல்லாமல், அன்பை மட்டுமே சுவாசித்து மகிழ்ந்து மனதை நிறைக்கும் மதுரைப் பயணங்கள். மதுரை எப்பொழுதும் மதுரமான மதுரை தான், மனதிற்கு மகிழ்ச்சிதான்!
அதிலும் என் நூல் வெளியீடு மதுரையில் நடந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. மதுரை சென்றாலே, "இது எங்க ஏரியா" என்ற ஒரு சுகமான உணர்வு தலை தூக்கும். இப்பொழுது அந்த மதுரை இன்னும் தள்ளிச் சென்றது போல் இருக்கிறது. அப்பா சென்னைக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள். இனி மதுரைக்குச் செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது.
மனதில் என்றும் பசுமையாய் இனிமையாய் மதுரை இருக்கும்..என்றாவது மதுரையில் குடியேற மாட்டோமா என்ற ஆசையும் உண்டு.

32 கருத்துகள்:

  1. அடுத்த பதிவர் சந்திப்பு மீண்டும் மதுரையில் வைத்து விடுவோமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! உடன் வந்து அருமையாய் யோசனையும் சொல்லிவிட்டீர்களே அண்ணா :) வைத்தால் மகிழ்ச்சிதான்..ஆனால் நான் அங்கு இருந்து கொஞ்சம் வேலையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    2. தனபாலன் அடுத்த பதிவர் சந்திப்பு நடந்தால் போட்டி விழா விருதுகள் அறிமுகம் பேச்சு என்று இல்லாமல் சும்மா அரட்டை அரட்டை விருந்து விளையாட்டு என்றுதான் இருக்க வேண்டும்

      நீக்கு
  2. ///இது எங்க ஏரியா" என்ற ஒரு சுகமான உணர்வு தலை தூக்கும். இப்பொழுது அந்த மதுரை இன்னும் தள்ளிச் சென்றது போல் இருக்கிறது. அப்பா சென்னைக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள். ///

    எனது பெற்றோர்களும் சகோதரர்களும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். இப்போது மதுரை என் பெயரில் மட்டும்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. மதுரை மல்லிகை, மதுரையின் கொத்து புரோட்டா, பெரியார் பஸ்டாண்டில் விற்கும் ப்ருட்மிக்சர் எனப்படும் பழஸ் சாறு. மதுரைப் பெண்களின் கள்ளம்கபடம் மற்ற காதல் பார்வைகள்....ஹும்ம்ம்ம்ம் என்னனென்னவோ நினைவுகள் பல மதுரையை சுற்றி வருகின்றன..

    பதிலளிநீக்கு
  4. அருமை தோழி...எனக்கும் முன்னோர்களின் பூர்வீகம் மதுரை என்றாலும் மதுரைக்கும் எனக்குமான உறவு மாட்டுதாவணியோடு முடிந்து போகிறது. மதுரை என்றதும் எனக்கு நினைவில் வருவது அவர்கலின் பேச்சு வழக்கு தான்....எதிலும் புதுமை என்பதே மதுரை...ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சகோ? ஹ்ம்ம் பல காரணங்களுக்காய் புலம்பெயரும் நாம்!
      கருத்திற்கு நன்றி சகோ

      நீக்கு
  5. அருமையான நினைவலைகள் தான் சகோ,

    எனக்கும் மதுரைப் பிடிக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடம் என்பதால், மற்றபடி ஒரே ஒரு முறை மதுரைச் சென்றுள்ளேன்.

    மாட்டுத்தாவணி பெயர் கேட்டு சிரித்தது என்றும் நினைவில்,,,,

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.
      மதுரை பிடிக்கும் என்றறிந்து மகிழ்ச்சி.. ஆமாம் நானும் நிறைய பேர் சிரிக்கக் கேட்டிருக்கிறேன் .. :)

      நீக்கு
  6. என் உறவுகள் இன்னும் மதுரையில்! மதுரையைச் சுற்றிய கழுதை கூட ஊரை விட்டுப் போகாது என்பார்கள். மதுரையில் என் இளமைப்பருவமும் சுகமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்போ கொடுத்து வைத்தவர் நீங்கள்..
      பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. மலரும் நினைவுகள்! மனத்திற்கு சுகமே!

    பதிலளிநீக்கு
  8. மதுரையில் குடியேறும் ஆசை நிறைவேறட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
  9. அருமை! மிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!
    படிப்பு, வேலை, பின் திருமணம் என்று எங்கெங்கோ வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் அடி மனதில் இந்த மாதிரி மலரும் நினைவுகள் ஏக்கங்களாய் சுற்றிக்கொண்டே தானிருக்கின்றன!!

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான்மா ஊரோடு நாமும் ஒன்றியே போகின்றோம்....

    பதிலளிநீக்கு
  11. மதுரை 40 வருடங்களுக்கு முந்திய மதுரை என்னுள் கலந்திருந்தது. எல்லா கோவிலும், தியேட்டர்களும் தெரியும்.
    என் கணவரும் நானும் சுற்றிய இடங்கள் புத்தகக் கடையும்,சினிமா தியேட்டரும்,காலேஜ் ஹவுசும். இப்போ எல்லாம் மாறியாச்சு.
    ஆனாலும் மல்லி வாசம் மனதோடு. நன்றி க்ரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான நினைவுகள், இல்லையா வல்லிம்மா?
      இப்போ ரொம்பவே மாறியிருக்கும்..
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா

      நீக்கு
  12. மலரும் நினைவுகள் :) ஹ்ம்ம்... மதுரை - பெங்களூர் - அட்லாண்டா.. பயணம் போயிட்டே தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  13. அட !! நான் படித்த ஊரு....நான் பிறந்தது தேனீ....கல்லூரிப்படிப்பு மதுரை...எனக்கும் ரொம்ப பிடித்த ஊர் சகோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா அண்ணா :)
      ஒரே ஊர்க்காரங்க ஆயுட்டோம், மகிழ்ச்சி அண்ணா
      நன்றி

      நீக்கு
  14. மதுரையை பற்றி பதிவா அல்லது உங்களின் மலரும் நினைவா?
    கொஞ்சம் கன்பியுஸ் ஆயிட்டேன்...

    மதுரைக்கு எப்போ ப்ளைட் பிடிக்கப் போறீங்க அக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையுடன் இணைந்த என் மலரும் நினைவுகள் தான் பிரகாஷ்!
      ப்ளைட் எப்போ பிடிக்கப் போறேன்னு தெரிஞ்சாதான் துள்ளித் துள்ளி நிலைத்தகவல் வந்துடுமே :)

      நீக்கு
  15. மிகவும் நெருக்கமான சரமாக தொடுக்கப்பட்ட மணம் நிறைந்த குண்டு மல்லிகை, விடிய விடிய எந்நேரமாயினும் உணவகங்களில் சுடச் சுட கிடைக்கும் உணவு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை - விருதுநகர் சாலையில் இருக்கும் மகளிர் கல்லூரி, கிறிஸ்துமஸ் சமயத்தில் அனைத்து வீடுகளிலும் காணப்படும் வண்ண நட்சத்திரம், மரகத மீனாட்சி அம்மன், பரந்த மீனாட்சி அம்மன் கோயில், அன்னையின் அருள் என பல இனிமையான மதுரையின் நினைவுகள் மனதின் பொக்கிஷக் கிடங்குள் வெகு பத்திரமாய் உள்ளன.


    அனைத்து நினைவுகளையும் மீட்டெடுத்து மகிழ்வளித்தது தங்களது பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...