சமூகம் விலக்கும் தன்னலம்

தன்னலமே பிரதானமாய் சமூக சிந்தனை அற்று வாழ்வது மிகவும் இழிவானது. பல நிகழ்வுகளில் பல இடங்களில் பல விதமாய்ப் பார்த்திருக்கிறேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியின் பகிர்வுதான் இப்பதிவு. என் தந்தையின் முகநூல் பதிவு ஒன்று என்னை எழுதத் தூண்டிய பா இப்பதிவில்..
சிவப்பில் இருப்பது என் தந்தையின் வரிகள்.



திருந்தவே மாட்டார்கள்.....எத்தனை மகான்கள் தோன்றினாலும் இவர்கள் இப்படித்தானிருப்பார்கள்.!
தனிமனித ஒழுக்கமும் அறநெறிச்சார்பும் பிற சீரிய குணநலன்களும் குடும்பத்தில் குழந்தைகளுக்கு விதைக்கப்படவேண்டும். தாய் இதில் முக்கிய பங்காற்றவேண்டும். தந்தை முன்மாதிரியாக விளங்கி குழந்தைகளை நெறிப்படுத்தவேண்டும். ஆசிரியர்களும் சமுதாயமும் நற்பண்புகளுக்குத் துணைநின்று மெருகூட்டவேண்டும். நன்னெறி கற்றலும் கற்பிப்போரை மதிக்கும் பண்பை வளர்த்தலும் குடும்பங்களில் விதைக்கப்படுதல் மிக அவசியம்.
உங்கள் கவனத்திற்கு ஒரு நிகழ்வைச் சொல்ல விரும்புகிறேன். வங்கி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட கவுண்டர்முன் வரிசையில் நின்றேன். எனக்கு முன் நின்றவர் அவருடைய வேலையை முடித்தார். அடுத்து நான் செல்லவேண்டும். ஆனால் திடீரென என்னைவிட முதியவர் ஒருவர் வரிசையைத்தாண்டி எனக்கு முன் சென்றார். வயதானவர் ஏதோ நிதானமின்றி முன் சென்றுவிட்டாரென எண்ணி, ஒரு புன்முறுவலால் அதை அவருக்கு உணர்த்தி அமைதி காத்தேன். அவர் வேலை முடித்து நகர்ந்ததும் 20-30 வயதில் இரண்டு படித்த இளம்பெண்கள் வரிசையின் பின்புறமிருந்து வந்து என்னை முந்திச்செல்ல முயன்றனர். வரிசையில் வரலாமே!, அடுத்தது நானல்லவா? என்றேன். அதற்கு அவர்கள் உங்களுக்கு முன் சென்றவர் வரிசைப்படியா சென்றார்? என்றனர். ஒருவர் தவறு செய்தால் நீங்களும் அதைச்செய்ய வேண்டுமா? என்றேன் நான். அப்படித்தான் என்றுகூறி எனக்குமுன் பாய்ந்துசென்று தங்கள் வேலையை முடித்தார்கள். கவுண்டரிலிருந்த பெண்மணியும் வரிசைபற்றிக் கவலைப்படவில்லை. தரங்கெட்டோருடன் தர்க்கம்செய்து என்னைத்தாழ்த்திட நான் விரும்பவில்லை.
கல்வியறிவுடைய இளம்பெண்கள்.,
வரிசையில் வரவேண்டும் என்ற ஒழுக்கமில்லை.,
சுட்டிக்காட்டிய பின்னரும் நல்லதை ஏற்றுத்திருந்துகிற மனோபாவமுமில்லை. சுயக்கட்டுப்பாடோ பணிவோ இல்லாத பெண்கள்.,
இவர்களும் தாய்மார்கள் தான்.,
இவர்களின் வளர்ப்புமுறையில், கல்விமுறையில் நிச்சயம் தவறு உள்ளது.,

இவர்கள் வளர்க்கப்போகும் குழந்தைகளை எப்படி வளர்ப்பார்கள் என்பதும் தெளிவு.
பிற மனிதர்களை மதிக்கவும் தன்னைப்போல நேசிக்கவும் எப்போது கற்பார்கள்?
தம் எண்ணங்களும் செயல்களுமே தம் வாழ்க்கையைத் தீர்மானிக்க வல்லவை என்பதை எப்போது உணர்வர்?
தன்காரியவாதிகளான தற்குறிச்சுயநலமிகள் எப்போது திருந்தப்போகிறார்கள்?


தன்வீடு தான்தான் தனக்கு எனக்கருதி
தன்னலம் போற்றுதல் தீழ்ப்பென்பேன் - தன்னால்
அறியாத மாக்கள் அறிவுறுத்தல் தள்ளி
அறிகொல்லல் இங்கே அழிபு



(தீழ்ப்பு - கீழ்மை, அறிகொல்லல் - அறிவுரை இகழ்ந்து கூறல், அழிபு - அழிவு)

35 கருத்துகள்:

  1. இப்படிப்பட்ட நிகழ்வுகளை நானும் சந்தித்திருக்கின்றேன்..

    >>> தரங்கெட்டோருடன் தர்க்கம் செய்து என்னைத் தாழ்த்திட நான் விரும்ப வில்லை.<<<

    என்று தங்கள் தந்தை சொல்வதைப் போல ஒதுங்கிச் செல்வதே உத்தமம்..

    இதற்கெல்லாம் - இந்த மாதிரியான ஒழுங்கீனத்திற்கெல்லாம் வேறொன்றைக் காரணமாக குறிக்கின்றனர் - ஆன்றோர்கள்..

    அதனை - இங்கே வெளியிடத் தயங்குகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.
      ஆமாம், என் தந்தையும் குறிப்பிட்டிருந்தார், நானும் அதை இங்கு தவிர்த்துவிட்டேன்.

      நீக்கு
    2. அன்றய சமூகத்திற்கு அது சரி
      ஆனால் இன்று தொண்ணூறு சதவிகிதம் அப்படிதான்.
      எனவே சமூகத்தை அப்படியே குறை சொல்ல முடியாது
      கல்வி வாசிப்பு என விரியவேண்டும் அவ்வளவே

      நீக்கு
    3. செல்வராஜ் ஐயா சொல்வது போல் இது போன்ற நிகழ்வு எனக்கும் நேர்ந்திருக்கிறது,, இவர்களுடன் வாதிடுவதால் தாழ்வு நமக்குத்தான்...

      நீக்கு
    4. உண்மைதான் குமார் சகோ. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு
    5. இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தபொழுது எனக்கும் அப்படித்தான் தோன்றியது கஸ்தூரி அண்ணா. பெரும்பான்மை இப்படிச் செய்கிறார்கள், கல்வியும் பயன்தர வில்லையே என்று தோன்றியது. ஆனால் கல்வி என்று பொதுவாக அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுவது அல்ல, உண்மையான கல்வியே பலன் தரும். சரியான கல்வியும் பரந்த அறிவும் தான் மாற்றம் கொண்டு வர முடியும்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
  2. வருத்தம்தான் கிரேஸ்,
    ஒருமுறை திருச்சி கே.கே நகர் அருகே நான் பயணம் செய்த பேருந்தில் இருந்து ஒரு சிறுமி விழுந்துவிட்டாள்.
    நிறுத்தம் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்.
    அவள் வீடு அருகே என்பதால் அவளுக்குத் தண்ணீர் கொடுத்து வீட்டில் விட்டுவிட்டு வந்தார் நடத்துனர்.

    நிகழ்வின் பரபரப்பில் அத்துணைபேரும் பேருந்தை விட்டு இறங்க இரண்டு கல்லூரி பெண்கள் அப்பாடா என்ற கிடைத்த இடத்தில் உரிமையோடு உட்கார்ந்தார்கள்.
    அதுதான் நினைவு வந்ததது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சூழ்நிலையிலும் அப்படிச் செய்தவர்களை என்னவென்று சொல்வது.. :-(
      இப்படிப் பல அனுபவங்கள் உண்டு அண்ணா. நீங்கள் சொல்வதுபோல கல்வி நல்ல மாற்றம் கொண்டுவரும் என்று நம்புவோம்.
      கருத்திற்கு நன்றி அண்ணா

      நீக்கு
  3. வணக்கம்.

    தாங்கள் இப்படித் தமிழெழுதுவதன் காரணம் தற்போது விளங்கிற்று. :)

    வெண்பா தந்தையாருடையதென்றால் மிக அருமை.

    தரங்கெட்டோரிடம் தர்க்கித்தல் எனக்காண எனக்குத் தோன்றுவது,

    “சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்.“

    என்பதுதான்.

    பெரியோரும் அறிவுடையோரும் சொல்லுதல் கேட்டு அதன் வழி நிற்பவர் சான்றோராக எண்ணத் தக்கவர்.


    அவர்களிடம் இந்த அறிவுரையும் எடுத்துச் சொல்லலும் பயன்படும்.

    அதனால் அவர்களிடம் இருந்து இனிமையான பயன்களை இந்தச் சமுதாயம் அடையும்.

    அதே நேரம், திருவள்ளுவர், கீழ்மக்கள் என்று ஒரு பிரிவைச் சொல்கிறார்.

    அவர்களுக்கு இந்த அறிவுரைச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.

    அப்படிச் சொல்வதெல்லாம் விழலுக்கு இறைத்த நீரே என்கிறார் அவர்.

    ‘மயிலே .........மயிலே என்றால் இறகு போடுமா?’ என்று நாம் சொல்வதில்லையா?

    அது போலத்தான்,

    கீழ்மக்களிடம் நல்ல நடத்தையைச் சொல்லால், அறிவுரைகளால் கொண்டுவந்துவிட முடியாது.

    கரும்பு போல அவர்களைச் சக்கையாகப் பிழிந்தால்தான் அவர்களிடமிருந்து இந்தச் சமூகம் பயன்பெற இனிய செயல்கள் கிடைக்கும் என்பார் அவர்.

    ஆம்.

    “கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்“

    தங்களின் தந்தையாருக்கு என் வணக்கங்கள்.


    தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      ஹாஹா ஆமாம் அண்ணா, தந்தையிடம் இருந்து வந்ததுதான் என் தமிழ் ஆங்கிலமும் கூட..நான் எழுதுவதில் குறை இருந்தால் நன்றாகக் குட்டுவார்கள், அவர்கள் பாராட்டிவிட்டால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. :-)
      தரங்கெட்டவரிடம் தர்க்கித்தல் பற்றி சொல்லியிருப்பது அருமை .
      //பெரியோரும் அறிவுடையோரும் சொல்லுதல் கேட்டு அதன் வழி நிற்பவர் சான்றோராக எண்ணத் தக்கவர்.


      அவர்களிடம் இந்த அறிவுரையும் எடுத்துச் சொல்லலும் பயன்படும்.

      அதனால் அவர்களிடம் இருந்து இனிமையான பயன்களை இந்தச் சமுதாயம் அடையும்.// உண்மைதான் அண்ணா.

      //“கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்“// அருமை அண்ணா..இப்படித்தான் செய்ய வேண்டும்போல..


      வெண்பா என்னுடையது அண்ணா. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

      அப்பாவிடம் உங்கள் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். முதலில் அவரின் நிலைத்தகவலைச் சுட்டு நான் இங்கு பதிந்ததைச் சொல்ல வேண்டும். :-)

      நீக்கு
  4. இன்றைய உலகம் இப்படிதான் மாறி இருக்கிறது..... வேறு என்ன சொல்ல.....

    பதிலளிநீக்கு
  5. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. இதை படிக்கும் போது, எனது முந்தைய பதிவிலிருந்து...

    இரு நண்பர்கள் புகை வண்டி முன் பதிவிற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நண்பர் தன் மகனோடு வந்திருந்தார். இரு நண்பர்களும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டே வரிசையில் நகர்ந்தனர். அதில் ஒரு நண்பர், மகனோடு வந்த நண்பரின் முன் பதிவு சீட்டைப் பார்த்து, "என்ன நண்பா, உன் மகன் குள்ளமாக சின்ன பையன் போலத் தானே இருக்கிறான். அவனுக்கு ஏன் முழு டிக்கெட் வாங்க வேண்டும். வயதை குறைத்து எழுதி அரை டிக்கெட் வாங்கலாம், பணமும் மிச்சமாகும்" என்றார்.

    அதற்கு அந்த நண்பர், "நண்பா! எனக்கும் அது தெரியாதது அல்ல. ஆனால் எப்போதுமே நான் அவ்வாறு செய்ததில்லை. செய்யவும் மாட்டேன். என் மகன் ரொம்பா விவரமானவன். முன் பதிவு சீட்டில் உள்ள விவரங்களை எல்லாம் கேட்பான். இது என்ன நம்பர்? இது எதுக்கு? WL என்றால் என்ன? RAC என்றால் என்ன?... இப்படி. அவனுக்கு தன் வயது குறைவாக எழுதியதைப் பார்த்து, நீங்கள் சொன்ன விசயங்களை தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் அவனை இது பாதிக்கும். நல்ல வேளை, என் மகன் தூரத்தில் உள்ளதால், நீங்கள் கூறியதை அவன் கேட்கவில்லை. நன்றி நண்பா!" என்று கூறி தன் மகனை அழைத்துச் சென்றார். அந்த மகன் தான் பிற்காலத்தில் சிறந்த நீதிபதியாக இருந்தார் என்பது வரலாறு...

    நண்பர்களே... நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. இன்றைய காலத்தில் நாம் அவர்களுக்கு கற்றுத் தருகிறோமோ இல்லையோ, அவர்களிடமிருந்து நாம் தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இந்தப் பதிவை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..வருகிறேன்.
      இங்கு பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா.
      மகனுடன் சென்ற மனிதரைப் போல அனுபவம் ஒரு சுற்றுலாத் தளத்தில் எங்களுக்கும் உண்டு. எப்பொழுதும் சரியாக டிக்கெட் வாங்கிவிடுவோம்.
      உண்மைதான் அண்ணா, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விரிவான கருத்திற்கு நன்றி அண்ணா.

      நீக்கு
    2. வயதை குறைத்துக் கூறச் சொன்னவர் மகன் தான் குமாரசாமி யோ!!!!

      நீக்கு
  7. சுயநலமிகள் மிகுந்த நாடாகிவிட்டது நம் நாடு
    என்ன செய்வது இவர்களுடன் வாதிட்டால்
    வேதனைதான் மிஞ்சும் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  8. எங்கும் இவை போன்ற நிகழ்வுகளைக் காணமுடிகிறது. நம் பொறுமைக்கும் நிதானத்திற்கும் சோதனை எனக்கொள்வோம். ஏனென்றால் அவர்கள் திருந்த வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் தரும் நிலைமை..
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  9. சிந்திக்க வைக்கும் நல்லதொரு பகிர்வுங்க தோழி.
    சகோ தனபாலன் பகிர்வும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. சுயநல உலகமாகி விட்டது. அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனம் என்றும் நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. இப்போது தன்னலம் அதிகமாகிவிட்டது! வரிசை முறையை யாரும் கடைபிடிக்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர். எங்கள் ஊர் வங்கியிலும் வரிசையில் நாங்கள் காத்திருக்க சில புள்ளிகள் நேரே உள்ளே சென்று காரியத்தை முடித்துக் கொள்கின்றனர். அதிகாரிகளும் அனுமதிக்கின்றனர். அவர்களால் இவர்களுக்கு நல்ல வரவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ, எங்கும் பார்க்கலாம். அதச் சொல்லுங்க..'வரவு' தான் பல விசயங்களை நடத்துகின்றது ..
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

      நீக்கு
  12. என்னம்மா தேனு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கும் இப்படி நடக்கிறதா என்று. பொதுவாக இப்படி எல்லாம் நடப்பது குறைவு என்றே நினைத்தேன். ஆரம்பத்தில் அப்படி இருந்த நம்மவர்கள் இப்போதெல்லாம்.திருந்த இடமிருந் தாலும், பல வழிகளிலும் திருந்தி யுள்ளார்கள். இதனைக் கேட்க மனம் வருந்துகிறது. அதுவும் இளைய சமுதாயம். நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா இனியா? மிகச் சாதாரணமாக இப்படித்தான் நடக்கிறது என்பது வேதனை. இளைய சமுதாயம் இப்படிச் செய்வது இன்னும் வேதனை...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

      நீக்கு
  13. என்ன பண்ண .. உலகம் இப்படி ஆகி போச்சு :(

    பதிலளிநீக்கு
  14. இந்த பொண்ணுங்ககிட்ட போய் இந்த பதிவை வாசித்துக் காட்டினால் கூட அவர்களுக்கு வெட்கமே வராது! வேற வேலை இல்ல என just லைக் தட் கடந்து போய்விடுவார்கள்:( இவர்கள் போன்றவர்களால் அந்த இடமே மன அமைதியை குலைப்பதாய் மாறிபோகும். இப்படி பட்டவர்களால் நானும் இதுபோல மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன் டியர்! வெண்பா சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப சொன்னீங்களே..அது ரொம்ப சரி டியர். எல்லோரும் அனுபவித்திருக்கிறோம் போல...
      நன்றி டியர்

      நீக்கு
  15. தன்னலம் நிறைந்த சமூகத்தில் பொதுநலம் நாடுபவர்கள் முட்டாளாகிறார்கள் மா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...