Friday, July 3, 2015

முகமதைக் காட்டு

தோழியே வா! இளமதியே வா! நலம் பெற்று ஒளிவீச வா!இனிமையாய்ப்  பாக்கள் இணையத்தில் ஆக்குவாள்
கனிவுடன் வாழ்த்துக்கள் காகிதத்தில்  செய்வாள்
சினேகமாய் நட்பில்  சிறகு  விரிப்பாள்
அனேகத் தினங்கள் அவளில்லைத்  தெம்பாய்

இளமதி எங்கென  இங்குபலர் தேட
வளர்மதி நானென  வந்திடு மீண்டும்
முகில்திரை நீக்கி  முகமதைக் காட்டு
முகிழ்த்து ஒளிர்ந்திடு  முத்தெனப்   பாடவே


அன்புத் தோழி இளமதி வலைத்தளம் வராமல் இருப்பதால் ஒளி குன்றியது போன்றே உணர்கிறேன். இன்னும் பல நண்பர்களும் அவரைத் தேடி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கின்றனர்.

கண்மூடி வேண்டுகிறேன்  அருள்வாய்! வாடும் 
  காரிகையென் காரிருளைக் களைவாய்! மேனி 
மண்மூடிப் போகுமுன்னே மங்கை  என்னை 
  மாண்போடு பணியாற்ற வன்மை ஈவாய்! 
விண்ணாடிப் போகையிலும் என்றன் மூச்சு
  வியன்தமிழைப் பாடுகின்ற வண்ணம் செய்வாய்! 
என்னெஞ்சம் என்னவென்றே அறிவாய் கண்ணா! 
  எனக்கிந்த வரம்தந்து காப்பாய் மன்னா!
...

கண்மூடி வேண்டுகிறேன் என்று வேண்டும் தோழியின் இருள் களைந்து வலையுலகம் வர வேண்டும் என்று அனைவரும் வேண்டுவோம்.

பி.கு.
இதை எழுதி கிட்டத்தட்ட  மூன்று வாரங்கள் வரைவில் வைத்திருந்தேன்..இன்று கஸ்தூரி அண்ணாவின் பதிவைப் படித்தவுடன் வெளியிட்டுவிடலாம் என்று தோன்றியது.

21 comments:

 1. நானும் வேண்டுகின்றேன்..

  அவருக்காகத் தேடியதில் நானடைந்த நல்லதொரு விஷயத்தை பகிர்ந்து கொள்ளக் காத்திருக்கின்றேன்!..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.
   அதை அறிந்துகொள்ள நானும் காத்திருக்கிறேன்.

   Delete
 2. எனது பிரார்த்தனைகளும்...

  ReplyDelete
  Replies
  1. நமது பிரார்த்தனைகள் அவரை விரைவில் நலமுடம் வரச் செய்யும் என்று நம்புவோம்.
   நன்றி அண்ணா

   Delete
 3. வளஞ்சேரும் தமிழ்பாயும் வற்றா ஆறு!
    வனப்புள்ள உயிர்சிற்பம் வடித்த சிற்பி!
  களமாடித் துன்பம்‘உள் கழன்ற போதும்
    காயங்கள் வெளிக்காட்டாக் கவிதை வானம்!
  உளம்கொத்தும் சொல்மீன்கள் துள்ளி நெஞ்சில்
    உணர்வூட்டும் குளத்திற்குச் சொந்தக் கார
  இளமதியார் வலைத்தளத்தில் இருகண் வைத்தே
    இருக்கின்ற இதயத்துள் எனதும் ஒன்றே!

  தங்களின் உணர்வினோடு ஒன்றினேன்.

  சகோதரி வரவிற்காக நானும் காத்திருக்கிறேன்.

  நன்றி.

  த ம 1

  ReplyDelete
  Replies
  1. //களமாடித் துன்பம்‘உள் கழன்ற போதும்
     காயங்கள் வெளிக்காட்டாக் கவிதை வானம்!// எவ்வளவு உண்மை!! அழகியப் பா அண்ணா.
   உணர்வோடு ஒன்றிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

   Delete
 4. உங்கள் பாவினை இருவருமே படித்தோம் ..
  எப்படி பேசினாங்க தெரியுமா என்றார் மைதிலி..
  மீண்டு வரட்டும் சகோ நிலா
  அப்புறம்
  கவிதை ரொம்ப நல்லா இருக்கு ...

  ReplyDelete
  Replies
  1. இரண்டு பேரும் படித்தது மகிழ்ச்சி அண்ணா. ஆமாம், இளமதி விரைவில் நலமுடன் வரட்டும்.
   மனம் நிறைந்த நன்றி அண்ணா

   Delete
 5. வணக்கம்
  சகோதரி
  தங்களின் அறைகூவல் கண்டு மகிழ்கிறேன்... மிக விரைவில் வருவார்கள்.. காத்திருங்கள்... ..த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்.
   ஆமாம், கண்டிப்பாக வருவார்கள். அதற்காகப் பலரும் காத்திருக்கிறோம்.
   நன்றி சகோ

   Delete
 6. விரைவில் நலம்பெற்று வருவாரெனக் காத்திருக்கும் நட்புகளில் நானும் ஒருத்தி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி இமா, நான் அறிவேன்.
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 7. எனது பிரார்த்தனைகளும்....

  ReplyDelete
 8. இருள் களைந்து வலையுலகம் வர வேண்டும் என்று அனைவரும் வேண்டுவோம்.

  ReplyDelete
 9. வருவார். எதிர்பார்ப்புகள் என்றும் பொய்த்துபோவதில்லை.
  புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
  http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா, நம்புவோம். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
   உங்கள் தளம் கண்டிப்பாக வருகிறேன், சில நாட்கள் வராததற்கு மன்னிக்கவும்.

   Delete
 10. நிலவெங்கே என்றென்றன் நெஞ்சென்றும் நோக
  நிலைமாறி வரவேண்டும் இருள்நீங்க வானில்
  சிலகாலம் கழியட்டும் சீர்பெற்று நன்றாய்ச்
  சிறகோடு வரவெண்ணச் சுமையோடோ நின்றாள்?
  பலமில்லை எனக்கிந்த பளுதாங்க லாகா!
  பதைப்போடு நானொன்றும் புரியாது நிற்பேன்!
  வலம்மீண்டும் இளமதியார் வரவேண்டும் என்றே
  வரம்கேட்பேன் தமிழேநீ தரவேண்டும் என்றே!

  மிக்க நன்றிம்மா அருமையான கவியெழுதி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியமைக்கு. நெகிழ்ந்தது நெஞ்சம் நம்பிக்கையோடு காத்திருப்போம். நிச்சயம் வருவார். அவரை எண்ணி அனைவரும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்மா. வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. இளமதி நலம் பெற்று வருவார் என்றே பிரார்த்தித்துக் காத்திருப்போம்.
   இனிய பாவிற்கு நன்றி இனியா

   Delete
 11. எப்படி இதை தவறவிட்டோம் சகோதரி..இளமதி அவர்கள் மீண்டு வரவேண்டும்....எங்களது பிரார்த்தனைகளும் ! நாம் எல்லோரும் நேர்மறையாகச் சிந்தித்தாலே அந்த சக்தி அவர்களை மீட்டெடுக்கும்.....பிரார்த்திப்போம்..அனைவரும்...

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...