மூளையின் கதை - பாகம் 3




உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? மனித மூளையின் ஒரு பகுதியான  ஹிப்போகாம்பஸ்  லண்டன் டாக்ஸி ஓட்டுனர்களுக்குப்  பெரிதாக இருக்கிறதாம். அது எப்படி சாத்தியம்?

மனித மூளையில் உள்ள பத்தாயிரம் கோடி நரம்பணுக்கள் தொடர்ந்து தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. நாம் சுவாசிப்பதும், உணர்வதும், பார்ப்பதும், கேட்பதும் என்று உடம்பில் இருந்து மூளைக்கும் மூளைக்குள்ளும் மூளையிலிருந்து உடல் பாகங்களுக்கும் என்று இந்த சைகைகள் தொடர்ந்து பரிமாறப் படுகின்றன. இந்த ஒரு வரியை எழுதுவதற்குள் எனக்குள்ளும் வாசிப்பதற்குள் உங்களுக்குள்ளும் நூற்றுக்கணக்கான சைகைகள் அனுப்பப்பட்ட போதிலும் அவற்றின் அதீத வேகத்தால் தொய்வில்லாமல் புரிந்துகொள்ள நம்மால் முடிகிறது.  

முந்தையப் பதிவுகளைப் படிக்க,
மூளையின் கதை - பாகம் 1
மூளையின் கதை - பாகம் 2

நரம்பணுக்களில் உள்ள நரம்பிழைகள் (axons) மற்றும்  ஒருங்குமுனைப்புகள் (dendrites) நம் உடலின் தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.

படம் 2
மேலுள்ள படம் 2 இல் 1 எனக் குறிக்கப்பட்டுள்ளவை ஒருங்குமுனைப்புகள் எனப்படும். இவை மற்ற நரம்பணுக்களின் ஒருங்குமுனைப்புகளோடு இணையும் வகையில் கிளைவிடாமல் இருக்கும் அல்லது மற்ற நரம்பணுக்களில் இருந்து வரும் மின்னலைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் கிளைவிட்டும் இருக்கும்.  2 எனக் குறிக்கப்பட்டுள்ளது நரம்பிழை ஆகும். நம் உணர்வுகளை நரம்பணுக்கள் மின்னலைகளாக அனுப்புகின்றன. நரம்பிழை ஒரு நரம்பணுவில் இருந்து அடுத்ததற்கு இந்த மின்னலையைக் கடத்தும். ஒருங்குமுனைப்புகள் மற்ற நரம்பணுவிலிருந்து வரும் மின்னலையை பெற்றுக் கொள்ளும். ஒரு நரம்பணுவிற்கு ஒரே ஒரு நரம்பிழை மட்டுமே இருக்கும். ஆனால் ஒருங்குமுனைப்புகள் பல இருக்கும். நரம்பிழைகளை மூடியிருக்கும் நரம்பறைகள் (myelin) மின்னலைகள் விரைவாகச் செல்லத் துணை செய்கின்றன.  நரம்பிழை நரம்பணுவின் மூலத்திலிருந்து தள்ளி நீண்டு செல்லும் தன்மையுடையது. இதற்கு மாறாக ஒருங்குமுனைப்புகள் மூலத்தின் அருகிலேயே கிளை விட்டிருக்கும். இக்கிளைகள் மற்ற நரம்பணுக்களில் இருந்து வரும் தகவல் மின்னலைகளைக் கவர்ந்து கொள்ளும். இப்படி ஒரே நரம்பணு நூற்றுக்கணக்கான நரம்பணுக்களுடன் தொடர்பு கொள்ளும். சில சைகைகள் நரம்பணுவைத் தகவல் அனுப்பச்  சொல்லியும் சில நிறுத்தச் சொல்லியும் வரும். நிறுத்தச் சொல்லி சைகை வந்திருந்தால் இந்த தகவல் மின்னலை நிறுத்தப்படும். 
மேலும் நரம்பணுக்களில்  நரம்பணு அலைபரப்பி (neuro transmitter)யாக சில மின் வேதிப் பொருட்களும் சுரக்கும். நரம்பணுக்கள் தொடர்பில்லாத இடங்களில், ஒருங்குமுனைப்புகள் கிளைவிடாமல் முடியும் இடங்களில், இவை தகவல்  சைகைகளை எடுத்துச் செல்லும். மின்னலை வாயிலாகஅனுப்பப்படும் சைகைகள் விரைவாக இருந்தாலும் நரம்பணு அலைபரப்பிகளால்அனுப்பப்படும் சைகைகள் பல திசைகளிலும் செல்லக் கூடியது.

நரம்பணுக்கள் தொடர்பு கொள்ளும் இடங்கள் சிநாப்ஸ் (synapse) எனப்படும். இது நரம்பிழை, ஒருங்கு முனைப்புகள், மற்றும் நரம்பணுக்களிடையே உள்ள இடைவெளி மூன்றும் சேர்ந்ததாகும். சிநாப்ஸ் மின்னலைகலாகவோ அலைபரப்பிகளாகவோ தகவல் சைகைகளைக் கடத்தும்.

உணர்வு நரம்பணுக்கள் (sensory neurons) உடலின் வெளிப்புறத்திலிருந்து மைய நரம்பு மண்டலத்திற்குத் தகவல் எடுத்துச் செல்லும். இவை சுற்றுப்புறத்தை அறிந்து அதற்குத் தகுந்தவாறு நரம்பணு அலைபரப்பிகளை அனுப்பும். 
இயக்க நரம்பணுக்கள் (motor neurons) மைய நரம்பு மண்டலத்திலிருந்து கை மற்றும் கால்களுக்குச் சைகைகள் எடுத்துச் செல்லும். 
இடை நரம்பணுக்கள் (inter neurons) மூளை மற்றும் தண்டுவடத்தை இணைக்கும் பாலமாக செயல்படும்.


நரம்பணுக்களை இணைத்துப் பார்க்கிறார்


நினைவுகள் சில துக்கமும் சில  மகிழ்ச்சியும்  ஏற்படுத்துபவையாக இருக்கும். ஏனென்றால் ஒரு அனுபவம் முதலில் ஏற்படும் பொழுது எந்த நரம்பணுக்கள் சைகைகளை அனுப்பினவோ அவையே மீண்டும் அனுப்புகின்றன. நரம்பணுக்கள் நரம்பணு அலைபரப்பி வழியாக ஒரு சைகையை அனுப்புகின்றன. இவை மீண்டும் மீண்டும் அனுப்பப்படும்பொழுது நரம்பணு முனைகள் அழுத்தமான ஆழமான தொடர்புகளை ஏற்படுத்துகின்றன. இப்படித் தொடர்ந்து அனுப்பப்படும் சைகைகள் நினைவுகளை ஏற்படுத்துகின்றன.

நீண்ட கால நினைவுகளையும் (long term memories) நினைவு வரைபடங்களையும் (memory maps) ஏற்படுத்தும் மூளையின் பகுதியான ஹிப்போகாம்பஸ் (hippocampus) பயன்பாட்டிற்குத் தகுந்தவாறு வளரும் தன்மையுடையது. ஒரு ஆராய்ச்சியில் மருத்துவ மாணவர்களின் மூளையில் இப்பகுதி பரீட்சைக்குப் படிக்கும் காலத்தில் பெரிதாக இருந்ததைக் கண்டுபிடித்தனராம்.

லண்டன் டாக்ஸி ஓட்டுனர்கள் நகரின் அனைத்து இடங்களையும் மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டுமாம். அவர்களின் மூளையின் ஹிப்போகாம்பஸின் ஒரு பகுதி  பெரிதாக இருக்கிறதாம். இந்த இணைப்பைப் பார்க்கவும்.

டிடி அண்ணா, விஜூ அண்ணா இவர்களின் மூளையில் ஹிப்போகாம்பஸ் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)

மூளையின் கதை தொடரும் ...

26 கருத்துகள்:

  1. ஆமாம் இந்த மறதி பற்றி ஏதேனும் விளக்கமாக... அடுத்த பகிர்வில்...?

    ஹிப்போகாம்பஸ் இணைப்பிற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறதி பற்றிக் கொஞ்சம் இருந்தது, ஆனால் மேலும் படிக்க வேண்டும் என்று இருக்கிறேன் . கண்டிப்பாகப் பதிவிடுவேன்
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  2. பல பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  3. பொக்கிஷம் போல பயனுள்ள தகவல்கள்..

    அழகு நடையில் சொல்லிச் செல்லும் விதம் அருமை.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  4. நல்ல தகவல்கள்! மூளை பற்றி தமிழில் தெரிந்து கொள்ளும் போது ஆங்கிலத்தில் படித்தவை இன்னும் நன்றாகப் பதிகின்றது...

    டிடி அண்ணா, விஜூ அண்ணா இவர்களின் மூளையில் ஹிப்போகாம்பஸ் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)// அதைச் சொல்லுங்க...இதில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்...உங்கள் மூளையைப் பற்றியும்தானே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் ஹஹஹஹஹ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நன்றி அண்ணா.

      ஹாஹா எனக்கு அவ்ளோ இல்லை, மறதி அதிகமாகுது. :)

      நீக்கு
    2. ஆசானே.

      பேனாவைச் சட்டைப்பையில் சொருகிவிட்டு, பார்க்குமிடமெங்கும் தேடுபவன்நான்.

      என்னைப்போய் இப்படி.......... :(

      ஹ ஹ ஹா

      நன்றி.

      நீக்கு
  5. நல்ல கட்டுரை.

    பயனுள்ள கட்டுரை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மூளை பற்றி "தலைமைச் செயலகம்" என்ற தலைப்பில் அறிஞர் சுஜாத்தா எழுதிய நினைவு. அதைவிடத் தங்கள் பதிவு சிறப்பாக அமைகிறது. தங்கள் பதிவுத் தொடர் முடிவுக்கு வந்ததும் அவற்றை எனது தளத்தில் அறிமுகம் செய்யக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன்..மிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக ஐயா, மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  7. மிகவும் பயனுள்ள தகவல்கள்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு...
    கடைசியாச் சொன்னது உண்மைதான்... டிடி அண்ணாவுக்கு மூளை அதிகம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ..
      ஆமாம் :) திருக்குறள், பாடல்கள், தொழில்நுட்பம் என்று சேமித்து வைத்திருக்கிறார்.

      நீக்கு
  9. மிகவும் பயனுள்ள தொடர். முந்தைய பதிவுகளையும் படித்து வந்தேன். த.ம வாக்கும் இட்டே வந்தேன். அனைவரையும் சென்று அடைய வேண்டிய தகவல்கள். பிரமிக்க வைக்கும் விவரங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவுகளையும் படித்துக் கருத்திட்டதற்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. செம்ம கிரேஸ் ...அறிவியல் பதிவு, சங்க இலக்கிய பதிவு என தேடி தேடி போடுவதினால் உங்களுக்கும் ஹிப்போகாம்பஸ் பெரிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் தோழி!

    அட.. எத்தனை விடங்கள்! ஆச்சரியப் படுத்துகிறீர்கள்!..

    மூளை என்ற ஒன்றிருந்து அதன் இயக்கம் சீராக இருந்தாற்தானே
    எனக்கும் ஏதும் புரிவதற்கு...:-)

    உண்மையில் அசந்து போனேன் தோழி! அருமையான பகிர்வு!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி!

      இளமதி இங்கு உதித்தது கண்டு
      இவள்மனம் துள்ளுது இன்று

      மிக்க மகிழ்ச்சி தோழி. :-)
      நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி? உடல் நலன் சீர்பெற்று விடும் தோழி.

      அன்பான கருத்திற்கு நன்றி பல அன்புத்தோழி

      நீக்கு
  12. பயன் மிகு பதிவு! வயதாகி விட்டது மனதில் மறதிதான் அதிகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.
      இப்பொழுதும் பதிவுகள் எழுதுவதுடன், எங்களையும் ஊக்கப் படுத்துகிறீர்களே, பெரிய விசயம் ஐயா.

      நீக்கு
    2. வணக்கம்.

      மூளையைப் பற்றியபதிவின் மூலையின் என்பெயர்..!!

      அப்படியெல்லாம் என்னைப் பற்றி உங்களின் மூளையில் ஏதாவது சித்திரம் பதிவாகி இருந்தால் மறந்துவிடுங்கள். :)
      இது போன்ற சுவையான நடையுடன் கூடிய அறிவியற்பதிவுகள் வரவேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன்.

      அசத்துகிறீர்கள்.

      நன்றி.

      நீக்கு
    3. வணக்கம் அண்ணா.
      அப்படி மறப்பது கஷ்டம் அண்ணா :-)

      என்னால் முடிந்த அளவு பதிவிடுகிறேன் அண்ணா. உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் பெரிதும் உதவுகிறது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...