இணையக்கல்வி - பகுதி 1

புத்தகம், குறிப்பேடு என்று இல்லாமல் இணையவழிக் கல்வி என்பது சரியா தவறா? அதுதான் எதிர்காலமா? எல்லாம் டெக்னாலஜிமயம் தான். அதற்காகப் பிள்ளைகளுக்கு அனைத்தையும் சிறுவயதிலேயே கொடுக்கவேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுவதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.


பசங்களுக்கு ஸ்க்ரீன் டைம் (கார்ட்டூன், வீடியோ கேம்ஸ் எல்லாம் உட்பட) ஒரு அளவுகோல் வைத்துத்தான் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதைத் தான் இத்தனை வருடங்கள் பின்பற்றி வந்திருக்கிறேன். என் மூத்த மகனுக்கு 10 வயது, இளையவனுக்கு 6. இதற்காக நானும் தொலைக்காட்சி பார்ப்பதில்லை, எப்பொழுதாவதுதான், அனேகமாக பசங்க வீட்டில் இல்லாதபோது. படங்கள் பார்க்க வேண்டும் என்றால் நானும் கணவரும் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படங்களைத் தேர்வு செய்து பார்ப்போம். இதனால் நாங்கள் பார்க்கும் படங்கள் குறைவு. வரலாறு, அறிவியல், விளையாட்டு, வாழ்க்கை வரலாறு, இயற்கை சம்பந்தமான ஆவணப்படங்கள் பார்ப்போம். பிபிசியின் டாப் கியர், ஐஸ் ரோடு ட்ரக்கர்ஸ், ஜாபர்டி போன்றவை பிடித்த நிகழ்ச்சிகள். வீடியோ கேம்ஸ் தேர்வு செய்துதான் கொடுப்போம். சுடுதல், வெட்டுதல், குத்துதல் என்று வன்முறை அதிகம் இருக்கும் விளையாட்டுகள் அனுமதிப்பதில்லை.

ஸ்க்ரீன் டைம் வரையறை இருப்பதால் பிள்ளைகளுடன் அதிகம் நேரம் செலவழிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக  அமெரிக்காவில்.பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது எனக்குப் பிடித்த விசயமும் கூட. அதனால் கைவினை, கலை என்று ஏதாவது செய்வேன். புத்தகம்வாசிப்போம், வெளியே விளையாட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்வோம். வீட்டில் செய்யக்கூடிய அறிவியல் செய்முறைகள் செய்வோம். பிள்ளைகள் வளர வளர இது மிகவும் சவாலானது. முட்டிமோதி எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் பள்ளி பிரச்சினையாகத் தோன்றுகிறது.

பாடநூல்கள் பள்ளியிலேயே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆன்லைன் போர்டல் (இணைய வாசல்) உண்டு. பயனர் என் கடவுச் சொல் கொடுத்திருக்கிறார்கள். உள்நுழைந்து ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள பக்கங்களுக்குச் செல்லலாம். அங்கு பாடம் சம்பந்தப்பட்டகாணொளிகள், இணையஇணைப்புகள், விளையாட்டுகள் எல்லாம் இருக்கும். உதாரணத்திற்கு சில இணைப்புகள் கொடுக்கிறேன்.
கணிதவிளையாட்டுகள்
சமூக அறிவியல்
உணவு சங்கிலி படிப்பதற்கு ஒரு தளம்.
இளையவன் ஒரு தளத்தில் தினமும் பதினைந்து நிமிடம் புத்தகங்கள் வாசித்து பின்னர் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க வேண்டும். அவனுடைய ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்தையும் பார்க்கமுடியும்.
இதுபோலஇன்னும்பல. பள்ளியிலும் ஏதேனும் காணொளி பார்த்துப்படிக்கின்றனர். ஓரிரு பக்கங்கள் எழுத வேண்டியதும் இருக்கத்தான் செய்கிறது.

ஆக, படியுங்கள்  என்று சொன்னால் இருவரும்  கணினியில்  அமர வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பல தளங்களைப் பார்த்துப் படித்து, கண்டு மகிழ்ந்து....இருக்கும் ஒரு கணினியில் இருவருக்கும் நேரம் பகிர்ந்து கொடுத்து வீட்டுப்பாடம் செய்யவைத்து, சரியாக சப்மிட் செய்துவிட்டார்களா என்று பார்க்க வேண்டும்..ஒருமுறை 'சப்மிட்' சொடுக்கிவிட்டு முடிவடையக் காத்திருக்காமல் இளையவன் எழுந்து சென்றுவிட்டான், அப்பொழுது பார்த்து இணையம் ஓரிரு வினாடிகள் துண்டிக்கப் பட்டிருக்கிறது. மறுநாள் எனக்கு ஒரு மின்னஞ்சல்ம் 'உங்கள் பிள்ளை வீட்டுப்பாடம் செய்யவில்லை', என்று!!! அவனை மீண்டும் செய்யச் சொன்னால் அழுகிறான், நேற்று சப்மிட் செய்தேன் என்று!! அதனால் அருகிலேயே அமர்ந்து சரியாக சப்மிட் ஆகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுதெல்லாம்.
முடித்தவுடன் எங்களுக்கு உரிய விடியோ டைம் கொடுக்கிறாயா என்று வேறு கேட்கிறார்கள்!!!
என் நிலைமை எப்படி!?  (என் மனது ப்ளாக் ப்ளாக் என்று வேறு கூச்சலிடுகிறது :))

---------------- தொடரும்

27 கருத்துகள்:

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. கவலை வேண்டாம் எல்லாம் சரியாயிடும் அவர்கள் தாங்களே இயங்கட்டும்மா நீங்கள் எட்ட இருந்து கவனித்துக் கொள்ளுங்கள் இந்த சம்பவம் இன்னும் கவனமாக அவர்களை இயங்கச் செய்யும். ஸ்பூன் பீடிங் வேண்டாம் இது நல்லதல்ல என்று சொல்வார்கள் நானும் அப்படித் தான் எண்ணுகிறேன். ஒரு கணினி இருப்பது ம் நேரத்தை பகிர்ந்து கொள்வதும் நல்ல விடயமே. குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதுடன். தேவை இல்லாமல் நேரத்தை அதில் செலவு செய்யமாட்டார்கள் அல்லவா அது நல்ல விடயமே. ஆளுக்கு ஒவ்வொன்று என்றால் அதிலேயே நாட்களை கழித்து விடுவார்கள். அம்மாவிற்கு எப்போதும் கவலை இருக்கத் தான் செய்யும். அது தானே அம்மா இல்லம்மா தேனு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி, பார்த்துக் கொண்டு இருப்பேனே தவிர ஸ்பூன் பீடிங் செய்ய மாட்டேன். வீட்டுப்பாடம் செய்ய வைத்து என்று நான் எழுதியிருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கும். பதில் எழுத உதவி கேட்டால் கூட கேள்வி கேட்டே பதிலை வரவழைத்து விடுவேன் :))
      நீங்கள் சொல்வது உண்மைதான் தோழி. மிக்க நன்றி.

      நீக்கு
  3. கல்வி முறை மாறியுள்ள இந்நேரத்தில் மிகவும் தேவையான பதிவு கிரேஸ்!

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஹாஹா
      புதுவித சிரமத்திற்கு அடுத்தப் பதிவையும் பாருங்கள் அண்ணா..

      நீக்கு
  5. இனி வீட்டிற்கு ஒரு கணினியெல்லாம் பத்தாது போல !
    அறைக்கு ஒன்று இல்லையில்லை
    சுவற்றுக்கு ஒன்று வாங்கணுமோ ?
    இதை நம்மூரு அரசியல்வாதிகள் அறிந்தால்
    அடுத்த தேர்தலில் ஆளுக்கொரு கணினி என்று அள்ளிவிடுவார்கள்.
    வாக்குபெட்டியை காணவில்லையே சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ,,ஆளுக்கு ஒன்று வைத்திருக்கிறார்கள் பலர்.
      கருத்திற்கு நன்றி.
      வாக்குப்பெட்டி இருக்கிறதே, சகோ.

      நீக்கு
  6. ஆசிரியர்கள் என்போர் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள், அதேநேரம்
    பெற்றோர்கள் என்போர் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்று நான் சொன்னதன் பொருள் சரியானதுதான் என்று உன் அனுபவமும் சொல்கிறது கிரேஸ்.
    குழந்தைகள் எதைப் பார்க்க, படிக்க வேண்டும் என்று இருவருக்குமே தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்காக நீ ஒதுக்கும் நேரம் அவர்களை உன் விருப்பப்படி வளர்க்க உதவும் என்பது உளவியல் மற்றும் சமூக அறிவு. இன்னும் உன் படைப்பாற்றலைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்து. கதை கவிதை எழுதுவது மட்டும்தான் படைப்பாற்றல் என்று நினைக்க வேண்டாம். அவர்களோடு நாமும் சேர்ந்து கற்றுக்கொள்ளும் புதிய அனுபவம் உனக்குக் கிடைக்கும். தேடு.. கதைகளாக, படங்களாக, புதிர்களாக, வினா-விடைகளாக விளையாட்டாக கற்பிக்க நீ முயற்சிசெய்தால் அவர்கள் விரும்பும் இனிய கல்வியை அவர்களின் ஆசிரியரை விடவும் உன்னால் கற்பிக்க முடியும். முயற்சி செய். அதையே அவ்வப்போது வலைப்பக்கத்தில் எழுது. அதுவே பெரிய பயனுடைய படைப்பாக வரும் பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, ஆராய்ந்து அனுபவித்து நீங்கள் சொல்லியது உண்மையாகத் தானே இருக்கும். ஆமாம் அண்ணா, நீங்கள் சொல்வதுபோல் தான் செய்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகள் வளர வளர அவர்கள் ஆர்வத்துகேற்ற கற்றல் விளையாட்டுகளைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலாக இருக்கிறது..என்னாலான முயற்சி செய்கிறேன் அண்ணா. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  7. நீங்கள் செய்து வந்தது மிகவும் சரியே சகோதரி. இங்கும் நாங்கள் அப்படித்தான். இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். மட்டுமல்ல இறைவன் அருளால் நாங்கள் சொல்வதை குழந்தைகள் கேட்டு நல்லபடியாக வருகின்றார்கள்.

    நீங்கள் சொல்ல வ;ருவது புரிகின்றது. அதாவது அவர்கள் இன்னும் கூடுதல் நேரம் கணினியில் இருக்க நேரிடுகின்றதே என்று. ம்ம்ம் இனி எதிர்காலத்தில் இணையவழிக் கல்விதான் வரும் போன்று தோன்றுகின்றது. இங்கு இந்தியாவில் கூட ஒரு சில பெரிய பள்ளிகள் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் இன்னும் அரசுப் பள்ளிகள் கணினிக்குக் கூட வரவில்லை. ஆனால் நல்ல முறையில் சொல்லித் தரும் ஆசிரியர்களும் இல்லை. மாணவர்களுகும் மொபைல் ஃபோன், கணினியில் வேண்டாதது என்று போகின்றது. அப்படிப் பார்க்கும் போது நீங்கள் சொல்லுவது பரவாயில்லை போன்றுய்தான் தோன்றுகின்றது.

    ஒன்று அவர்களது வீடியோ நேரத்தைக் குறைத்துவிடுங்கள் அவர்களிடம் சொல்லிப் பாருங்கள். இல்லையென்றால் அமெரிக்காவில் விளையாட்டுகள் ஏதாவதில் சேர்த்து விடலாமே. அங்கு இங்கு விட சற்று ஒழுங்காக நடப்பதால். எங்களைப் பொருத்தவரை இங்கு இருக்கும் நிலைமையை விட உங்களது தேவலாம் போலத்தான் தோன்றுகின்றது. நீங்களும் சிறந்த பெற்றோராக இருப்பதால்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இப்படிச் செய்து இன்று குழந்தைகள் நல்ல முறையில் இருப்பது மிக்க மகிழ்ச்சி சகோ. ஆமாம் , அதிக நேரம் கணினியில், கண்ணிற்கும் நல்லதல்ல. சில நேரங்களில் காணொளி போட்டுச் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றால் அதை நானே செய்துவிடுவேனே என்றும் தோன்றுகிறது.
      சேர்த்துவிட்டிருக்கிறோம் அண்ணா, அது தவிர நாங்களும் வெளியே விளையாட அழைத்துச் சென்று விடுவோம், பத்து மைல் போவதாக இருந்தாலும் :))
      ஆழ்ந்த கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அண்ணா .

      நீக்கு
  8. நம்பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பும் கல்விமுறையும் என்று வரும் என்றுதான் தோன்றுகிறது.
    அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    தொடருங்கள்.

    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி யோசிக்கப் பல விசயங்கள் இருக்கின்றன அண்ணா. வேணாமோ என்று தோன்றுவதற்கும் சில விசயங்கள் உண்டு.. :)
      நன்றி அண்ணா

      நீக்கு
  9. தமிழக மாணவர்களுக்கு இப்படி ஓர் வாய்ப்பு எப்பொழுது கிட்டுமோ
    தொடருங்கள் சகோதரியாரே
    காத்தருக்கிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு

  10. குழந்தைகளுக்கு புத்தகம், குறிப்பேடு இல்லாமல் கம்ப்யூட்டர் வழி கல்வி என்பது குறித்த தங்களது வித்தியாசமான தொடருக்கு வாழ்த்துக்கள். அங்கே (அமெரிக்காவில்) கல்விமுறையின் இன்றைய நவீன யுத்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    சரியா தவறா? அதுதான் எதிர்காலமா? என்பதெல்லாம் இப்போது கணிக்க முடியாது. என்னதான் இருந்தாலும் வாய்விட்டுச் சொல்லி, கையால் எழுதி, மனத்தில் இருத்தி சிறு குழந்தைகள் படிக்கும் முறைதான் சிறந்தது என்று நினைக்கிறேன்.

    நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் சுவாரஸ்யமாக உள்ளன. நன்றி.

    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல சரியா தவறா என்று கணிக்க முடியாதுதான். அதிக நேரம் கணினியில் அமர வைப்பது கொஞ்சம் உறுத்துகிறது..
      கருத்திற்கு நன்றி ஐயா

      நீக்கு
  11. அன்புள்ள சகோதரி,

    பிள்ளைகளுக்கு அக்கறையுடன் கல்விகற்பிக்க வேண்டுமென்ற அக்கறையைத் தாங்கள் இணையக்கல்வி எவ்வாறு இருக்கிறது என்பதையும்... பிள்ளைகளின் வளர்ச்சியில் காட்டுகின்ற ஈடுபாடும் அறியமுடிந்தது.

    அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
    பிரிவிலை எங்கும் பேத மில்லை -என்று புரட்சிக்கவி பாராதிதான் பாடியது நினைவிற்கு வந்தது.

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைப்போல எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

    வெளிநாட்டில் இணையக்கல்வி பற்றித் தொடருங்கள்... தொடர்கிறோம்.

    நன்றி.
    த.ம. 7.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      அருமையான பாடல் பகிர்விற்கு முதலில் நன்றி. உண்மைதான், மாற்றம் தான் மாறாதது.
      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
  12. இது தான் கோடுபோட்டு வாழ்றது போல :)

    பதிலளிநீக்கு
  13. மிகவும் தேவையான ஆய்வுப்பதிவு. பள்ளிகள் காலத்தின் வேகத்திற்கேற்ப பிள்ளைகளை ஈடுகொடுத்து ஓடச்சொல்கின்றன. நாம் என்னதான் நிதானப்படுத்தினாலும் பிள்ளைகளால் நிற்கமுடியாது. நாமும் சேர்ந்து ஓடத்தான் வேண்டும். இங்கு (ஆஸியில்) ஏழாம் வகுப்பிலேயே பல பள்ளிகளில் ஒவ்வொரு மாணவர்க்கும் சிறிய அளவிலான மடிக்கணினி கொடுத்துவிடுகிறார்கள். பள்ளி அனுமதிக்கும் தளங்களைத் தவிர வேறு சமூக தளங்களுக்குப் போகமுடியாது. அதனால் பெற்றோர் பயமின்றி இருக்கலாம். நோட்டுப்புத்தகங்களில் எழுதுவதும் குறைந்துபோய்விட்டது. எல்லாம் தட்டச்சு செய்துவிடுகிறார்கள். என்றாவது ஒருநாள் கையால் எழுதினால் மிகவும் மோசமாக உள்ளது. என்ன செய்வது? ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதமஞ்சரி.
      அங்குள்ள பள்ளி பற்றிய தகவல் பகிர்விற்கும் நன்றி.
      ஆமாம், கையெழுத்தா?!! என்று ஆகிவிட்டது நிலைமை ... :))

      நீக்கு
  14. //உங்கள் பிள்ளை வீட்டுப்பாடம் செய்யவில்லை', என்று!!! அவனை மீண்டும் செய்யச் சொன்னால் அழுகிறான், //
    அங்கும் வீட்டுப் பாடமா? இது நம் மெட்ரிக் கல்விமுறையைப் போல்தானே உள்ளது. என்ன டெக்நாலஜியை பயன்படுத்துகிறார்கள். எதைப் பயன்படுத்தினாலும் வீட்டுப் பாடம் வீட்டுப் பாடம்தானே மாணவர்கள் அதை விரும்புவது கடினமே. வீட்டுப் பாடம் தேவை இல்லை என்றல்லவா கல்வியாளர்கள் கூறுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி சகோ.
      பனிமழை இருந்த நாளில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதற்காக பின்னர் ஒரு நாள் பள்ளி வைப்பதற்குப் பதிலாக இப்படியான நேரங்களில் இணைய வகுப்புகள் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி ஒரு நாளின் வீட்டுப்பாடம் அது. செய்யாவிட்டால் அந்த நாளைக்கு அட்டேண்டேன்சில் ஆப்சென்ட் போட்டுவிடுவார்கள். அவ்வளவுதான். அவர்கள் செய்தி அனுப்பியது தகவலுக்குத் தான், பின்னர் யாரேனும் குறை சொல்லக் கூடாது என்று. வீட்டுப்பாடம் இருக்கும், அதை வற்புறுத்த மாட்டார்கள், ஆனால் அனைத்து வீட்டுப்பாடங்களும் செய்த பிள்ளைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறு பரிசு உண்டு.
      வீட்டுப்பாடம் அதிகம் இல்லாமல் பிள்ளைகள் புரிந்து கொள்ள உதவும் வகையில் கொஞ்சம் இருக்க வேண்டும் என்றே நானும் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...