உடல் - உட்புறம் பார்ப்போமா

என் மூத்த மகனுக்கு, தற்பொழுது பத்து வயது, உடற்கூறு அமைப்பில் (Anatomy) ஆர்வம் உன்டு. தி ஹுமன் என்சைக்ளோபீடியா (The Human Encyclopedia) என்ற நூலை கடந்த வருடம் வாசித்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

Bodies the Exhibit என்ற உடல் உறுப்புகளின் காட்சியகம் புதிதாக வந்திருக்கிறது என்று அறிந்தோம்.
சரி, பிள்ளைகளை அழைத்துச் சென்று காண்பிப்போம் என்று முடிவுசெய்து இன்று சென்றோம். எனக்கும் என் கணவருக்கும் அருங்காட்சியகங்கள் சென்று பார்ப்பது பிடிக்கும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் :)

இந்த உடல் உறுப்புகள் அருங்காட்சியகத்தில் உண்மையான உடல்களை பிளாஸ்டினேசன் (plastination) என்ற முறையில் பதப்படுத்தி, வேறு வேறு கோணங்களில், குறுக்கு வெட்டு செய்து உள்ளே இருக்கும் தசைகளையும், நரம்புகளையும், இரத்த நாளங்களையும், உறுப்புகளையும் பார்க்குமாறு வைத்துள்ளனர். இந்த பிளாஸ்டினேசன் முறையை 1977இல் Dr.குந்தர் வான் ஹேஜென்ஸ் (Dr,Gunther Von Hagens) என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.


முதலில், உடலின் திசு (tissue), வேதியியல் முறையில் பார்மால்டிஹைடு (formaldehyde) கொண்டு பதப்படுத்தப்பட்டு அழுகுவது தடுக்கப்படுகிறது. அடுத்து, உடலை அறுத்து லிக்விட் அசிடோனில் (liquid acetone) மூழ்கவைத்து உறையும் நிலையில் வைக்கப்படும். அப்பொழுது ஒவ்வொரு அணுவிலும் உள்ள நீரை அசிடோன் மாற்றி நிரப்பிவிடும்.அடுத்து உடல்  லிக்விட் சிலிகோனில் (liquid silicone) வெற்றிட அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும். இம்முறையில், அசிடோன் திசுவில் இருந்து வெளியே வடிந்துவிடும். இதனால் உடலில் நீரற்ற நிலை உருவாக்கப்படும். அசிடோன் வெளியேறும்பொழுது பிளாஸ்டிக் பாலிமர் (plastic polymer) அணுக்களின் உட்செலுத்தப்படும். இந்த பிளாஸ்டிக் காற்று, சூடு, அல்லது புற ஊதாக் கதிர்களால் பதப்படுத்தப்பட்டிருக்கும்.

(ஷ்ஷ் அப்பாஆஆஆ ,...கண்ணக் கட்டுதே..ஆங்கில வழியில் படித்ததால் அறிவியல் சொற்களைத்  தமிழில் சொல்லக் கடினமாக இருக்கிறது... :( )


மிகவும் வியக்க வைத்த விசயம் என்னவென்றால், இரத்த நாளங்களை மட்டும் மனித வடிவில் படுத்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒருவர் படுத்திருந்தார்!!! இது எப்படி செய்தார்கள் என்று வியந்து சுற்றிமுற்றி பார்த்தால், சுவற்றில் ஒரு பலகை. அதில், கரோசன் காஸ்டிங் (corrosion casting)  முறையில் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதில், இரத்த நாளங்களில் ஒருவித நிற பாலிமர் ஏற்றுவார்களாம். அது இறுகியவுடன் வேதியியல் முறைப்படி மற்ற உடற்பாகங்கள் அகற்றப்படுமாம். (வீட்டிற்கு வந்தவுடன், corrosion casting என்று கூகிளில் தேடித் படித்துவிட்டு இப்பதிவை எழுதுகிறேன்.) இந்த முறையில் இரத்த நாளங்கள் மட்டும் தனியாக விடப்படுகின்றன. நார் நாராய் ஒரு உடல்!!

இது போலவே நரம்பு கூறும் தனியாக உள்ளது!

நன்கு கற்றுக் கொள்ளும்படியாக அமைத்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியமாகச் செயல்பட நாம் செய்யவேண்டியன, நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகள், ஏன் பாதிக்கப்பட்டன என்ற தகவல்களுடன் என்று அமைத்திருக்கின்றனர். தொடை எலும்பு உடைந்ததால் ஏற்பட்ட இரத்த அடைப்பு எப்படி ஒரு இரத்த நாளத்தை அடைத்து உயிரிழக்க வைத்தது என்று ஒரு உடலைக் கொண்டு காண்பித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட நுரையீரல் 

ஒவ்வொரு காட்சிப்பொருளிலும் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர். சிலவற்றுக்கு ஒலி பதிவு செய்து வைத்திருக்கின்றனர். நுழையும் பொழுதே நமக்கு ஒரு ரிமோட் கொடுத்து விடுவார்கள். உறுப்புகளுக்கு அருகே, காது படம் வரைந்து இரண்டு எண்கள்  குறிப்பிடப் பட்டிருந்தால், ஒலி வடிவத்தில் தகவல் இருக்கிறது என்று அர்த்தம். பெரியவர்களுக்கு சிவப்பு நிற எண்ணும் சிறுவர்களுக்கு வெள்ளை நிற எண்ணும் என்று சொல்லியிருந்தார்கள். எதைக் கேட்க வேண்டுமோ அந்த எண்ணை ரிமோட்டில் அழுத்தி ப்ளே பொத்தானை அழுத்திவிட்டு காதில் வைத்தால் கேட்கும். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற வகையில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

நம் உடலுக்குள் எப்படி தசைகள், எலும்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், உள் உறுப்புகள் அமைந்திருக்கின்றன என்று முப்பரிணாமத்தில் பார்க்க முடிந்தது. மருத்துவம் படிக்காமல், இரத்தம் பார்க்காமல்!!

வேண்டுமானால் பாருங்கள், இல்லையேல் தவிருங்கள் என்ற அறிவிப்புடன் ஒரு அறையில், கர்ப்பத்தில் உயிர் நீத்த சில வார சிசுக்களையும் வைத்திருந்தனர். ஏதோ திரவம் ஏற்றப்பட்டு அவற்றின் எலும்பு வளர்ச்சியும் காட்டப்பட்டிருந்தது. இந்த அறை மனதைப் பிசைந்தது.

மேலும் படிக்க விரும்பினால், கீழே சில இணைப்புகள் கொடுக்கிறேன். கூகிளிலிலும் Bodies the exhibits என்று தேடித் பாருங்கள்.

சில இணைப்புகள்:
http://www.premierexhibitions.com/exhibitions/4/48/bodies-exhibition/gallery-bodies-exhibition
http://thetartan.org/2007/11/19/scitech/bodies
http://www.premierexhibitions.com/exhibitions/4/4/bodies-exhibition

36 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி
    தாங்கள் இரசித்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நானும் பார்த்து வியந்து விட்டேன் தகவலுக்கு நன்றி த.ம.1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்..
      ஒவ்வொன்றையும் பார்க்கும் பொழுது எனக்கு ஒரே வியப்பு!! அதுதான்!
      நன்றி

      நீக்கு
  2. வியக்க வைக்கிறது...! (திகைக்கவும்)

    இணைப்புகளுக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. அவங்க எங்கேயோ போய்டாங்க...
    ஹும் ...
    ஜோரான பதிவு அவசியம் அவப்போது இந்த மாதிரியும் பதிவிடவும்
    நன்றி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..நம் நாட்டில் இன்னும் தேவையில்லாத விசயங்களைப் பேசிக்கொண்டு இருக்கிறோம்..கண்டிப்பாக அண்ணா..
      நன்றி

      நீக்கு
  4. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை வழங்கியதுடன் -
    இணைப்புகளையும் தந்திருப்பதற்கு பாராட்டுகள்!..

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள பதிவு.
    நம்முடைய நாட்டிலும் இது போல வசதிகள் எப்பொழுது வரும் எனப் பெருமூச்சு வருகிறது.
    நன்றி !
    த ம5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, நம்மூர் குழந்தைகளும் இப்படி அறிந்து கொள்ள வேண்டுமே என்று பல முறை தோன்றும்..
      நன்றி அண்ணா

      நீக்கு
  6. பத்து வயதிலேயே பையனுக்கு அனாடமியில் ஆர்வம். ஒரு எதிர்கால டாக்டர் இங்கே தெரிகிறார். வாழ்த்துக்கள்.

    உடலை சிலிர்க்க வைக்கும் படங்களுடன் ஒரு அறிவியல் பதிவு. ரொம்பவும் பயமுறுத்தி விட்டீர்கள்.
    த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..நிறைய தெரிந்து வைத்திருக்கிறான்..ஆனால் டாக்டர் ஆட்டோமொபைல் பாக்டரி வைப்பேன் என்று சொல்வான் :)

      ஆமாம் ஐயா, அங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை..இணையத்தில் இருந்தும் யோசித்துக் கொண்டே ஒரு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்..அதற்குத்தான் இணைப்புகளும் கொடுத்தேன்..
      நன்றி ஐயா

      நீக்கு
  7. ஆத்தாடியோவ் என்னோட அறிவுக்கெல்லாம் 8 மா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் எட்டும் அண்ணா,,இந்த கிண்டல் தானே வேண்டாம் என்கிறது? :)

      நீக்கு
  8. பயனுள்ள பதிவு சகோதரியாரே
    இணைப்புகளுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. பசங்க கில்லி தான்:)) பெப்பி(நிறை) இதை பார்த்தாள் என்றால் மூணு நாளுக்கு தூங்க மாட்டாள். வளரும் டாக்டர் முளையிலேயே தெரிகிறார்:)) வாழ்த்துக்கள் டியர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ஆமாம் டியர்..ஆல்வின் நிறைய சந்தேகம் வேற கேட்டான் :)
      ஆனால் இருவருமே டாக்டர் ஆவேன் என்று சொல்ல மாட்டார்கள்..பெரியவன் ஆட்டோமொபில் பாக்டரி வைப்பானாம்..சின்னவன் டென்னிஸ் விளையாடுவானாம், அண்ணனுடைய பேகடரியிலும் வேலை பார்ப்பானாம்.. :))

      நீக்கு
    2. நிறை தான் டாக்டர் ஆகப் போகிறாள், டியர் :)

      நீக்கு
    3. ஆஹா! பெரியவன் தெளிவா இருக்கான்! இன்னவன் செம வெவரம் தான்:))) இருவருக்கும் என் வாழ்த்துகள்!

      நீக்கு
    4. 😊 வெவெரமா இருந்தாச் சரிதான்
      நன்றி டியர்

      நீக்கு
  10. எந்த ஒரு படிப்பினையும் புரிந்து படித்தால் எளிதாக இருக்கும் அவ்விதத்தில் இது போன்ற கண்காட்சிகள் குழந்தைகளின் படிப்பார்வத்தைத் தூண்டும்

    பதிலளிநீக்கு
  11. திகைக்க வைக்கும் செய்திகள் நிறைந்த அருமையான கட்டுரை...

    பதிலளிநீக்கு
  12. எவ்வளவு அருமையா விளக்கி இருக்கீங்க கிரேஸ். எனக்கு அங்கு செல்ல ஒரு வித அருவருப்பா தான் இருந்தது. ஆனா உங்க பதிவை பார்த்த பிறகு, போய் தான் பார்ப்போமே என்று தோணுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துருக்கணும் நீங்க..கண்டிப்பா போய்ப் பாருங்க ஸ்ரீனி .. அருவருப்பு வர மாதிரி ஒன்றும் இல்லை

      நீக்கு
  13. என்ன கிரேஸ் அஸிட்டோன் (CH3COCH3), formaldehyde (HC(O)H) னு ஆர்கானிக் கெமிஸ்ட்ரியெல்லாம் பேசுறீங்க! எல்லாரும் பயந்து ஓடிறப் போறாங்க. :)

    சிகரெட் குடிப்பது (புகைபிடித்தல்) கெடுதி, லங்ஃக் கேண்ஸர் வரும்னு எவ்வளவோ எடுத்துச் சொல்றாங்க. ஆனால் இன்று கல்லூரியில் படிக்கும் டீனேஜ் மாணவிகளில் 70 விழுக்காடுகளுக்கு மேல் புகை பிடிக்கிறாங்க, அல்கஹால் கன்ஸூம் பண்ணூறாங்க என்பது நிதர்சனம். இவர்கள் "அறியாமையால்" இப்படி செய்யவில்லை. அறிந்தே செய்கிறார்கள்!

    நல்ல பதிவு கிரேஸ்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பேர மட்டும்தான் சொன்னேன்,,நீங்க என்னடான கெமிக்கல் பேரெல்லாம் சொல்றீங்களே!! :)

      அதுதான் வருண்,,எனக்குப் புரியல..தெரிஞ்சுமா இந்தப் பயபுள்ளைக இப்டி செய்யுதுன்னு.. கேட்டா சுற்றுச் சூழல் மாசினாலும் கேன்சர் வரும்னு பதில் சொல்வாங்க...
      நன்றி வருண்!

      நீக்கு
  14. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இல்லம்மா மூன்று மாங்காய்.. நாங்களும் அறியத் தந்துவிடடாய் அலலவா? அருமையான பதிவு. இப்படித்தான் மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் சுவாரசியமாகச் சொல்வதுதான் வலைப்பக்கத்தின் உண்மையான பயன் என்று நினைக்கிறேன் அதில் இலக்கியமும் முக்கியம். இலக்கியம் மட்டுமல்லவே? என்ன எதையும் சுவையாகச் சொல்லத் தெரிந்து கொண்டால் அதுதானே நல்ல இலக்கியமாகும். வாழ்த்துகள் பா. த.ம+1

    பதிலளிநீக்கு
  15. குழந்தைகளுக்கு இவ்வாறு ஆர்வமாக இளம் வயதிலேயே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்குவது மிகவும் நல்லது. பள்ளி நாள்களில் என் மகன்களுக்கு ஆங்கில தி இந்து நாளிதழினை தமிழில் பொருள் சொல்லிக் கற்றுக்கொடுத்ததன் பயனாக கல்லூரி நாள்களில் அவர்கள் அவ்விதழை கையில் வைத்துக்கொண்டு தமிழில் படிக்கும் வகையில் உயர்த்தியதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன். நல்ல முயற்சி தொடருங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. வாய்ப்பிருப்பின் அண்மையில் வெளியான எனது பதிவைக் காணவாருங்கள். படியாக்கம் (க்ளோனிங்) என்பதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் எனது கட்டுரைக்குக் காரணம். http://drbjambulingam.blogspot.com/2015/01/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் செய்தது மிக நன்று ஐயா
      வாழ்த்திற்கு நன்றி..
      கண்டிப்பாகப் பார்க்கிறேன் ஐயா

      நீக்கு
  16. நல்ல ஒரு பதிவு எப்படி விட்டுப்போனது?!! தங்கள் மகன் ஆர்வமுடன் இருப்பதற்கு வாழ்த்துக்கள்! நல்ல ஒரு விடயம்! உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் வந்து விட்டால் (கேட்கணுமா...நீங்கள் இருக்கும் போது) அதை விட நல்ல விடயம் வேறு ஒன்றும் இல்லை! வாழ்த்துக்கள்! குழந்தைகளுக்கு!

    எங்கள் இருவரின் மகன் களும் மருத்துவ சம்பந்தம்தான்....கீதாவின் மகன் கால்நடை மருத்துவர், துளசியின் மகன் மருத்துவப் படிப்பு படிக்க முயற்சி.. எனவே இது போன்ற விடயங்கள் வீட்டில் பேசப்படுவதுண்டு.....அதனால் தங்கள் இந்தக் கட்டுரை கண்டு மகிழ்வு! தங்கள் வீட்டிலும் இருக்கிறதென்று....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...