Sunday, December 7, 2014

அசால்ட்டு...ஆபத்து...இழப்பு

நவம்பர் 27 அன்று என்று என் கணவரின் நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு. நண்பர் மனைவியின் தாயார் மட்டும் வந்திருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து விழா சிறப்பாக நடந்தது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கலவை சாதம், இனிப்பு என்று பிரித்துக்கொண்டு செய்தோம். அதற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக புதன் மாலை ஐந்தரை மணியளவில் காரை வெளியே எடுத்தேன்.
வீட்டில் இருந்து பின்னோக்கிச் சென்றதால் தெருவைப் பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்ற  நான் அதிர்ந்தேன். ப்ரேக்கிட்டு, "அந்த வீட்டில் தெரிவது நெருப்பா?" என்று கணவரிடம் கேட்டேன். அவர் பார்த்து ஆம், என்றவுடன் பதறி 911 என்ற எண்ணுக்கு அழைத்தேன்.
அவசர உதவிக்கு இந்த எண்ணைத் தான் அழைக்க வேண்டும். இந்த தெருவில் ஒரு வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது என்று சொன்னதும், மறுமுனையில் வீட்டின் எண் கேட்டார் ஒரு பெண்மணி. நான் குடிவந்து பத்து நாட்கள் ஆன நிலையில் எனக்குத் தெரியவில்லை, என் வீட்டு எண்ணைச் சொல்லி, எதிர்வீடுதான் என்றேன். அதற்குள் என் கணவர் இறங்கி வீட்டினுள் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்க்கப்  பின்பக்கம் ஓடினார். யாரும் இல்லை என்று வந்து சொல்லிவிட்டு மறுபுறம் சென்றார்.

இந்த சில நொடிகளில் நெருப்பு வேகமாகப் பரவுவதைப் பார்த்தேன். அந்த வீட்டின் முன் இருந்த காரிலும் தீப்பற்றிக் கொண்டது. வீட்டிற்குள் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்து, எங்கள் காரை வீட்டிலிருந்து சற்றுத் தள்ளிச்  சென்று நிறுத்திவிட்டு காத்திருந்தேன். அந்த வழியே வந்த இரு கார்களையும் மறித்துப் போகவேண்டாம் என்று சொன்னேன். தீப்பிடித்த கார் வெடித்துச் சிதறுமோ என்ற பயம் எனக்கு. (இதைச் சொன்னபொழுது பின்னர் என் கணவர் என்னைக் கேலி செய்தார், படத்தில் தான் அப்படி வெடிக்கும் என்று). தீயணைப்பு வண்டிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல்  போராடியே நெருப்பை அணைக்க முடிந்தது. காரிலிருந்து பெட்ரோல் வழிந்து கொண்டே இருந்ததால் அதை அணைப்பது மிகவும் கடினமாக இருந்தது. வீட்டின் மேற்கூரைக்கு மேலே தீ கொழுந்து விட்டு எரிந்தது. பயந்த என் மகன்களை தீயணைப்பு வீரர்களைப் பார்க்கச் சொன்னேன். பெரியவனைச்  சற்று அருகில் அழைத்துச் சென்று காட்டினார் என் கணவர்.
பின்னர் புகை அதிகமாக இருந்ததால் காரில் அமர வைத்துவிட்டேன். நெருப்பின் அருகிலும் வீட்டிற்குள்ளும் சென்று தீயணைப்பு வீரர்கள் போராடியது அவர்கள் மேல் மதிப்பைப் பலமடங்கு அதிகரித்துவிட்டது. உண்மையான ஹீரோக்கள் அவர்கள்!
எப்படியோ, அந்த குடும்பம் பிழைத்தது. நான் காரைத் தள்ளி ஓட்டிச் சென்றநேரத்தில் என் கணவர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்துள்ளார். தெருவில்  தள்ளி நின்று அழுது கொண்டிருந்திருக்கின்றனர். வீட்டின் தலைவர் கராஜில் சமையல் செய்திருக்கிறார், தீப்பற்றிப்  பரவியவுடன் குழந்தைகளுடன் வெளியே ஓடிவிட்டனர், அலைபேசியையும் எடுக்காமல். எவ்வளவு பெரிய இழப்பு!! வீட்டைச் சூடு படுத்துவதற்கு உதவும் எரிவாயு இணைப்பும் பெரிய எரிவாயு டேங்கும் கராஜில் தான் இருக்கிறது!! அங்கு சமைக்கலாமா? அதுவும் குளிருக்காக காராஜ் கதவுகள் மூடி இருக்கும்பொழுது!!!
 வீடு முழுவதும் எரிந்து போய்விட்டது. பத்து வயதிலும் ஆறு வயதிலும் இரு பெண்கள். அவர்களுக்காக உடைகளும் ஷூக்களும் பலரும் கொடுத்துள்ளனர், பள்ளியிலும் மின்னஞ்சல் அனுப்பிக்  கேட்டுள்ளனர்.. இந்த வகையில் பள்ளியில் அக்குழந்தைகளுக்கு நல்ல உதவி செய்கின்றனர். கவுன்செலிங் உண்டு. இழப்பிலும் ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பது வரை மகிழ்ச்சி.
இன்சூரன்ஸ் வந்து பார்வையிட்டு கேள்விகளால் துளைத்துச் சென்றபின்னர், இப்பொழுது சுத்தம் செய்து மீண்டும் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமாம். அப்படியே ஓடி விடமுடியாதாம். மீண்டும் கட்டியே ஆகவேண்டும். சமையல் செய்ததால் ஏற்பட்ட நெருப்பு என்பதால் அவர்களுக்குச் சற்றுக் குறையும் என்றாலும் இன்சூரன்ஸ் கொடுத்துவிடுவார்களாம்.
இந்த சோகத்திற்கு இடையிலும் அவ்வீட்டின் தலைவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டார், பிள்ளைகள் பயந்திருப்பார்கள், எல்லோருக்கும் மன பாதிப்பு என்று. பரவாயில்லை, வருத்தப்படாதீர்கள், எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். சரியான நேரத்தில் பார்த்து அவசர உதவி அழைத்ததற்கு எனக்குப்  பல நன்றிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் என்ன செய்தேன்? சரியான நேரத்தில் வெளியே போகவைத்த கடவுளுக்கு நன்றி!
அனைவரும் கவனமுடன் இருப்போம், ஆபத்தில் பதறாமல் என்ன செய்ய வேண்டும் என்பதைப் கற்றுக் கொள்வோம். அவர்கள் பதறாமல் இருந்திருந்தால் எனக்கு முன்னரே போன் செய்திருக்க முடியும், முன்னால் நின்றிருந்த காரையாவது அப்புறப்படுத்தி இருக்க முடியும். சொல்வது எளிது என்றாலும், அனைவரும் அறிந்து கொள்ளட்டுமே என்று பகிர்கிறேன். கவனமும் ஆபத்தில் சற்று அமைதியாக யோசிப்பதும் முக்கியம்.
எரிந்து போன வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் மனம் ஏதோ செய்கிறது! அக்குழந்தைகள் கண்முன் வருகின்றனர். கிறிஸ்துமஸிற்கு அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று என் பிள்ளைகள் சொன்னது எனக்கு மகிழ்ச்சி!

49 comments:

 1. அனைவரும் கவனமுடன் இருப்போம், ஆபத்தில் பதறாமல் என்ன செய்ய வேண்டும் என்பதைப் கற்றுக் கொள்வோம்

  ReplyDelete
 2. நல்லவேளை! சமயத்தில் உதவினீர்கள்.

  அதற்காகவே நன்றி சொல்லிக் கொள்கின்றேன். பண்டிகை சமயத்தில் பரிசு வாங்கிக் கொடுப்பது இன்னும் நல்லதே.

  பாவம்... அந்தப்பிள்ளைகள்.:(

  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்து(க்)கள் உங்கள் குடும்பத்தினருக்கும், எதிர்வீட்டினருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அம்மா,,பண்டிகை நேரத்தில் வீட்டையும் உடைமைகளையும் இழந்து நிற்கின்றனர்..

   உங்கள் வாழ்த்திற்கு நன்றியம்மா.

   Delete
 3. வணக்கம் தோழி !

  இப் பகிர்வினைக் காணும் போது மனதிற்குள் ஏதேதோ செய்கின்றது
  இறைவன் அருளால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இக் குடும்பம்
  காப்பற்றப் பட்டுள்ளது இதற்கு நீங்களும் உதவிய விதம் பாராட்டத் தக்க
  செயல் !துன்பம் வரும் போதும் இது போன்ற இன்னல்கள் வரும் போதும்
  மனதை ஒருநிலைப் படுத்தி செயல் படுத்தல் மிக மிக அவசியம் என்ற
  குறிப்பை உணர்த்திய பகிர்வுக்கு மிக்க நன்றி .தங்களின் குழந்தைகளின்
  உதவும் மனப் பாங்கிற்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
  தோழி .

  ReplyDelete
 4. சரியான நேரத்தில் பார்த்து உங்களை வெளியேறச் செய்து, தக்க உதவிகள் செய்ய வைத்த கடவுளுக்கு நன்றி. எனக்கென்ன என்று இருக்காமல், அந்த குடும்பத்திற்கு உதவிய உங்கள் சமூக சேவை எண்ணத்திற்கு பாராட்டுக்கள்.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. அதேதான் ஐயா, சரியாக அந்த நேரம் நான் வெளியே சென்றேன்...அதுவும் முதல்நாள் தான் என் ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பித்திருந்தேன்.
   நன்றி ஐயா

   Delete
 5. மிகவும் நல்ல செயல் மா...யாருக்கென்ன வந்தது என போகாமல் சிறிய காட்சியின் தீவிரம் உணர்ந்து செயல் பட்டுள்ளீர்கள் வாழ்த்துகள்...நீகளும் கவனமாக இருங்கள்மா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா. ஆமாம், சிறு விளக்குப் போலவே முதலில் தெரிந்தது. என் ஓட்டுனர் உரிமத்தை முதல் நாள் தான் புதுப்பித்திருந்தேன். அதுவும் நல்லதாய்ப் போயிற்று.

   Delete
  2. ஆமாம், அதற்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் இருக்கிறோம். மரத்தினாலான வீடுகள்.

   Delete
 6. காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
  ஞாலத்தின் மானப் பெரிது
  என்பார் வள்ளுவர், மிகப் பெரிய உதவியினைச்
  செய்துள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே!
   நான் செய்தது பெரிய உதவி இல்லை, சரியான நேரத்திற்கு என்னை கடவுள்தான் வெளியே போகச் செய்திருக்கிறார்.

   Delete
 7. உங்கள் உதவிக்கு எத்தனை தடவை பாராட்டினாலும் தகும்... வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..

   நான் இல்லாவிட்டால் வேறொருவர் அழைத்திருப்பார்கள்..இன்னும் சிறிது நேரம் கடந்திருக்கும்..

   Delete
 8. சகோ,
  அதிர்ச்சியான நிகழ்வுதான் உங்கள் மூலமாக விபத்தின் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது.
  நிச்சயம் அவர்களது மனதில் மறக்க இயலாத இடம் உங்களுக்கு இருக்கும்.
  உற்றுழி உதவி ....மற்றவரை உறவாக்கும்.
  பகிர்விற்கு நன்றி சகோ!
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..
   உண்மைதான்,,இந்த நிகழ்வினால் மூன்று நண்பர்கள் கிடைத்தனர்..

   Delete
 9. தக்க சமயத்தில் உதவி செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
  கவனமாய் இருந்து இருந்தால் விபத்தை தடுத்து இருக்கலாம், உயிர் இழப்பு இல்லாதவரை மகிழ்ச்சி ,இறைவனுக்கு நன்றி.

  ReplyDelete
 10. உங்களின் உதவும் குணம் சமயோஜிதமாக வெளிப்பட்டதே நல்லதுப்பா... குழந்தைகளின் மன நிலையை கவனித்துக்கொள்ளுங்கப்பா...

  ReplyDelete
 11. கிறிஸ்துமஸ் சமயத்தில் அவர்களுக்கு
  எந்த வகையிலாவது உதவ வேண்டும் - என,
  தங்கள் பிள்ளைகள் மனதில் நினைத்ததும் -
  அதை தங்களிடம் கூறியதும் - உன்னதம்!..

  தெய்வம் என்றும் துணை இருக்கும்..
  வளர்க.. வாழ்க!..

  ReplyDelete
 12. தகுந்த நேரத்தில் தாங்கள் அவ்விடத்தில் சென்றதே உண்மையில் இறை அருளே!
  உங்களைத் தெரிந்தே அங்கு அதே நேரத்தில் பயணிக்க வைத்த இறை அருளையும்
  உங்கள் சயயோசித ஆற்றலையும் கண்டு வியக்கின்றேன்!

  காலத்திற்கு மறக்கமாட்டார்கள் தங்கள் உதவியை அவர்கள்!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 13. மிகவும் சமயோசிதமாக யோசித்து செயல்பட்டிருக்கிறீர்கள் கிரேஸ். அவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்து மறுபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப என் பிரார்த்தனைகள். தீயணைப்பு வீரர்களின் பணி மகத்தானது. நீங்கள் சொல்வது போல் உண்மையில் அவர்கள்தாம் ஹீரோக்கள். இந்த உங்களுடைய பதிவு பலருக்கும் ஒரு கவனப் பதிவாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 14. ஒரு சிறிய கவனச்சிதறல் பெரும் இழப்பையே ஏற்படுத்தி விடுகிறது! தக்க சமயத்தில் உதவி செய்து நம் இந்திய பண்பாட்டை காப்பாற்றி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. சரியான தருணத்தில் சரியான உதவி செய்திருக்கிறீர்கள் \\கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே\\ என்பார்கள் இதற்க்கு பலன் இறைவனிடமிருந்தே தங்களுக்கு கிடைக்கும் தாங்களும் இடம் பெற்றிருக்கும் எனது புதிய பதிவு காண வருக..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ
   கண்டிப்பாகப் பார்க்கிறேன்

   Delete
 16. வளைகாப்பு நல்ல படியாய் முடிந்ததா டியர்:)

  நல்ல வேளை நீங்க பார்த்தீங்க! இல்லேன்னா என்ன ஆகிறது!
  ஹானி, ஆல்வின் ரெண்டுபேரும் உங்க வளர்பென்று நிரூபிக்கிறார்கள்!!

  அப்புறம் Christmas purchase முடிந்ததா?:)

  ReplyDelete
  Replies
  1. வளைகாப்பு அமர்க்களமாய் நடந்தது டியர், அடுத்த வாரம் due

   நன்றி டியர்! இல்லை, இனிமேல்தான் பசங்களுக்குத் துணி எடுக்க வேண்டும். நான் அங்கிருந்தே கொண்டுவந்துவிட்டேன்.

   Delete
 17. கிரேஸ், எப்ப்டி இருக்கீங்க பிள்ளைங்க தம்பி(ஆத்துக்கார்) அனைவரும் நலமா?
  அப்பா எப்டி இருக்காங்க, அந்த வீட்டுக்காரங்களுக்கு நல்ல நேரம், அதுதான் உங்க
  கண்ணில் பட்டது (கடவுள்) எப்படிப்பட்ட ஒருத்தர்கிட்ட பொறுப்ப கொடுத்து இருக்கார்
  இல்ல ?அவருக்கு நாம நன்றி சொல்வோம். கீதமஞ்சரி அவுங்க தளத்தில் உங்களுடைய துளிர் விடும் விதகள் விமர்சனம் பார்த்தேன் நம்ம புள்ளேல்ல கருத்திட்டுத் திரும்பினேன் மீண்டும் பேசுவோம்.

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்கேன் மாலதி, நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க? கீதமஞ்சரி தளத்தில் உங்கள் கருத்துப்பதிவு பார்த்து மகிழ்ந்தேன், நன்றி. கண்டிப்பாகத் தொடர்பில் இருப்போம்

   Delete
 18. பதறாத காரியம் சிதறாது என்பார்கள். இருப்பினும் மனத்தில் திடமும் வேண்டும்.அப்போதைய உங்களின் மன நிலையும் செய்த காரியமும் மறக்கமுடியாதது.

  ReplyDelete
 19. காலத்தால் செய்த உதவி. பாராட்டுகள். வாழ்த்துகள்.
  அந்த குடும்பத்தினர் துயரத்திலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 20. சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு இருக்கீங்க, கிரேஸ்!

  உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது நல்ல விசயம்

  பொருள் சேதத்தை இண்சூரண்ஸ் கவர் பண்ணிடும் என்பது ரெண்டாவது நல்ல விசயம்.

  இருந்தாலும், வீடு காரெல்லாம் எரிந்துபோவது என்பது சோகமான விடயம். நம் எதிரிக்குக்கூட இதுபோல் ஒரு இழப்பு நடக்கக்கூடாது! Hope the family recovers from this "big loss"!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வருண், உடைமைகளை இழந்து தவிப்பது கொடுமையிலும் கொடுமை!! ஒவ்வொரு பொருளும் பார்த்து வாங்கி வீட்டை அமைத்திருப்பர்..நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு இருப்பதால் இன்னும் ஆழமாகப் புரிகிறது...yes, hope is what we have to have in these situations..
   நன்றி வருண்

   Delete
 21. ஒரு சின்ன கவனக் குறைவு எவ்வளவு பெரிய இழப்பிட்டை உண்டாக்கி உள்ளது :(. அந்த வீட்டை காணும் ரொம்ப கஷ்டமா இருக்கு. கடவுள் அவர்களுக்கு எல்லா தைரியத்தை தரட்டும்... //கிறிஸ்துமஸிற்கு அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று என் பிள்ளைகள் சொன்னது எனக்கு மகிழ்ச்சி!// -- தாயை போல பிள்ளை :)

  ReplyDelete
 22. சிறிய உதவியாயினும் உயிர்காத்த உதவி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா.
   கருத்துரைக்கும் நன்றி

   Delete
 23. சின்னதாய் ஒரு கவனக் குறைவு எத்தனை இழப்பினை உண்டாக்கி இருக்கிறது..... சரியான நேரத்தில் நீங்கள் 911 அழைத்தமையும் நன்று.

  அக்குடும்பத்தினரின் துன்பத்தில் அனைவரும் அவர்களுக்கு உதவுவது தெரிந்து மகிழ்ச்சி.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ,, ஆமாம் பலரும் உதவ முன்வருவது மகிழ்ச்சியே!

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...