Sunday, November 9, 2014

புதிய மரபுகள் - என் ஆனந்தம்

திரு.முத்துநிலவன் அவர்களின்  புதிய மரபுகள் வாசித்துவிட்டேன்.  நூலை வாசித்து நான் மகிழ்ந்தவற்றை ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் என் தளத்தில் வெளியிட இன்றுதான் நேரம் வாய்த்தது...


ஒவ்வொரு கவிதையும் முத்தாய் உருப்பெற்று நிலவாய் ஒளிர்கிறது!

புதுமை பற்றிய அருமையான அலசலோடு முன்னுரை அருமை. அதை எழுதிய திரு.கந்தர்வன் அவர்கள் சொல்வது போல முத்துநிலவன் என்ற ஆளுமையை இந்தத் தொகுப்பு முழுதும் பார்த்து ஆனந்திக்க உடனே நூலை வாசிக்கத் துவங்கினேன். இப்பொழுது புதிய மரபிற்குள் செல்வோம்...

18 வயதிலிருந்தே திரு.முத்துநிலவன் அவர்களின்  முத்தமிழின்  பேராற்றல் எத்திசையும் செல்ல ஆரம்பித்திருக்கிறது! நாம் பெற்ற பாக்கியம்! 'மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்' முன்பே எழுதியிருந்தாலும் வெளியிட விருப்பமில்லை என்று சொல்கிறார் 'புதிய மரபுகள்' ஆசிரியர். என்ன காரணமோ தெரியவில்லை, இருந்தாலும் இப்பொழுது வெளியிட வேண்டுமாறு அன்புடன் கேட்கிறேன். அதெப்படி அவர்  எழுதியதை யாரும் படிக்காமல் இருப்பது?.

"தமிழ், எந்தன் கருத்துமணம்
தாங்கிவரும் பூந்தென்றல்!
தமிழ், என்றன் சுடர்க்கருத்தைத்
தாங்கிவரும் தீப்பிழம்பு!" 


பூந்தென்றலாய் தீப்பிழம்பாய் இருவேறு இயல்பினதாய்த்  தமிழ் திரு.முத்துநிலவன் அவர்களின்  வார்த்தைகளில் இனிக்கிறதே! மிக அருமை!

"இமய முடிவுவரை வளர்ந்தும் 
இந்துமாக்கடலில் கிடக்கும் 
பொருளாதாரம்"

"கணினியை ஜெயித்து 
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை"

1985ல் எழுதி கல்கியில் வெளிவந்த கவிதை, இன்றைய நிலையை எண்ணி இன்று எழுதியதுபோல் இருப்பதில் ஆசிரியரைக்  கண்டு வியக்கவும் நாட்டைக் கண்டு வருந்தவும் செய்கிறது மனம். 'ஜெயஹே ஜெயஹே ஜெயஜெயஜெயஹே' முழுவதுமே இன்றைய நிலையைச் சொல்கிறதே! 1985ல் இப்படித்தான் இருந்ததா இல்லை ஆசிரியரின் தொலைநோக்குத் தீர்க்கதரிசனமா!!!

'எங்கே சார் இருக்குது' - எறும்பு கடித்த
மரத்தடி மாணவன் 
எழுந்து கேட்பான் 'புத்தகத்தப் பார்ரா'
போடுவார் ஆசிரியர்" - சிறையிலிருந்து சிறப்புடன் வந்த 'எங்க கிராமத்து ஞான பீடம்' சொல்கிறது புத்தகத்திற்கும் உண்மைநிலைக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை!

"சாகுலோட சங்கரனும்
ஜானும் போறான் பாருங்க - ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
சேர்ந்திருந்தா போறும்ங்க!" இப்படியே நடந்தால் போதுமே, வேறென்ன வேண்டும்.

"தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்" கிண்டல் அருமையாய் இருக்கிறது. இந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியை நாட்டின் வரலாற்றில் காட்டினால் நன்றாய் இருக்கும்.

"எப்போதோ பூக்கும்ஒரு அத்திக்காக 
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?" அதானே? மின்-நீரும் இன்று வற்றிக் கொண்டிருக்கிறதே - 'கோளாறு டிவி' தான்.


கருத்துச் சுதந்திரம் பற்றிய 'போர்க்குணத்துக்கு ஏது தடை?' மிக்க அருமை. 
"ஓயாது பீறிடும் ஓங்காரப் போர்க்குண 
உணர்ச்சியைத் தடுக்க முடியாது" மிகப் பிடித்தது. மேற்கோளுக்குப் பயன்படுத்திக் கொள்வேன் :)

'எந்தையும் தாயும் ' வேதனையான உண்மை! சிரித்த முகத்தையுடைய  திரு.முத்துநிலவன் அவர்களின்  சின உணர்ச்சி தெறிக்கிறது.


“’உடை’ யென்றா நான் சொல்வேன்? – அட
உயர்கவியே பதில்சொல்லு!”
கம்பனிடம் இராமன் கேட்கும் கேள்வி அருமையோ அருமை. திரு.முத்துநிலவன் அவர்களின்   எண்ணத்திறனை வியக்கிறேன்!

"என் நாட்டை பரதனிடம் - மகிழ்வாய்
எடுத்துக் கொடுத்தவன்நான்
என்கோயில் கட்டுதற்கா- ஒன்றை 
இடியென்று நான் சொல்வேன்?" இந்தியர் அனைவருக்கும் கேட்கட்டும் இக்கேள்வி! 

"உனக்கு ஆளத் தெரியாதது 
உன்னை மட்டும்தானே?" புழுவின் கேள்வி புத்தியைச் சுடும்.

"மேவும் அழகெல்லாம் தீயவாய் தின்றதோ
மேனியும் புண்மலிந்தாயே! - இவை
யாவும் பிரிவினைப் பேயின் திருவிளை 
யாடல் இதை மறந்தாயோ?" அணைகளைத் திறக்காமல் நாட்டிற்குள்ளேயே பிரிவினைப் பேய் ஆடுவதில் அழகெல்லாம் தீயவாய் தான் தின்றது..

'கூவாய் கருங்குயிலே', 'நர்சரிப் பூக்கள்' அருமை.

"இந்த கரும்புகளின்
குறும்புகள் 
கசக்கும் போதெல்லாம் - 
;புத்தகத்த எடுறா' என்பதே
உச்ச பட்ச தண்டனை" ஆகா!! நானும் இதைச் செய்திருக்கிறேனே! :( இனி செய்ய மாட்டேன்.

திரு.முத்துநிலவன் அவர்களின்  காதல் கடிதம் மிகவும் நன்றாய் உள்ளது. சொத்துரிமையும் பெண் அடிமையும், திருமணம் தோன்றியது, கற்பு - பலவகை, கண்டிப்பாய் வாசியுங்கள். 

"இப்போது சொல்கண்ணே!
 ஏன் உன்னை அழகி யாக்க
இப்பாவலன் நெஞ்சில்
எண்ணாமல், உன்னறிவை
இன்னும் வளர்க்கவே 
எண்ணுகிறான், புரிகிறதா?" - புரிகிறதா? புரிகிறதா? அனைவரும், குறிப்பாகப் பெண்களும்  புரிந்துகொள்ளுங்கள். மதிப்பைப் பெரும் போரில் ஓரணியாய்த் திரளுங்கள்.

இக்கவிதைகள் தளத்தில் பகிர்ந்தவைப் படித்திருக்கிறேன்..சமுதாய மற்றும் வாழ்வியல் மாற்றங்களோடு பெண்களை அடிமைப்படுத்தியதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.. கண்டிப்பாக அனைவரும் அறிய வேண்டியன இவை. ஆசிரியரின்  பெண் சமத்துவ மனதிற்கு வணக்கம்.

'ஏன் இந்தக் கொலைவெறி?' பாடலைக் கிண்டல் செய்யும் இப்பாடல் திரு.முத்துநிலவன் அவர்கள்  எழுதியதா? யாரோ இலங்கை மாணவர் பாடியது என்று முகநூலில் பகிரப்பட்டதே..இதுதானா என்று மீண்டும் தேடிப்பார்க்கிறேன்.

பின்னுரை படித்தவுடன், "ஆகா!! எவ்வளவு உயர்ந்த மனிதர்! அவர் நட்பு கிடைத்ததே பெரும் பாக்கியம், இதில் அவருடைய தங்கையானதில் பெரும் மகிழ்ச்சி." என்பதாய் உள்ளம் நினைத்தது, மிகுந்த மகிழ்ச்சியுடன்

"ஆசிரியர் என்பவுங்க யாரு?
...
பெற்றோர் என்பவுங்க யாரு?" அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விசயம்.

"திறந்து விடுங்கள்
திசைகளை சூரியனே தீர்மானிக்கட்டும்" அருமை! மரபோ, புதுசோ - கவிதைகள் படைத்து தமிழைப் போற்றுவோம்!

மொத்தத்தில் 'புதிய மரபுகள்' மிக மிக மிக மிக அருமை! ஒவ்வொன்றும் எனக்குப் பிடித்திருக்கிறது..மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இதனை பெயருக்குச் சொல்லவில்லை, உள்ளத்து வார்த்தைகள்! இன்னும் நிறைய கவிதைகளைப் பற்றி எழுத விருப்பம் இருந்தாலும் நூலை நீங்களே வாசித்து இன்புறும் பேறு பெற இத்தோடு விட்டுவிடுகிறேன். காலத்திற்கேற்ப என் பிள்ளைகளுக்கும் படித்துக் காட்டப் போகிறேன். புதிய மரபுகளைப் படித்த இனிய தாக்கத்தில் கவிதைகள் ஊறுகின்றன எனக்கு. 

முத்துநிலவன் என்ற ஆளுமையைப் படித்து ஆனந்தித்து விட்ட  மகிழ்ச்சியுடனும் அன்புடனும்,
கிரேஸ் பிரதிபா 
http://thaenmaduratamil.blogspot.com/
kodimalligai@gmail.com

21 comments:

 1. அனைத்தும் படித்தேன், தேன், தேன்.
  நூலை கண்டிப்பாக வாங்குவேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ..முதல் பதிப்பு அனைத்தும் விற்று அடுத்த பதிப்பு போடப்போகிறார்கள் அண்ணா, தவறாமல் வாங்கி விடுங்கள்.

   Delete
 2. அழகான ரசனை...

  // அதெப்படி அவர் எழுதியதை யாரும் படிக்காமல் இருப்பது...? // அதானே..?

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..

   ஆமாம், திரு.முத்துநிலவன் அண்ணா கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் :)

   Delete
  2. 19வயதில் எழுதியதம்மா அது. அப்போதைய கவிதைச்சூழல். அதை எனது “பழைய பனைஓலைகள்“ என்பேன். என் வலைப்பக்கத்தில் ஒன்றிரண்டை இட்டேன். படிக்க வருவார் இல்லை. தொடரவில்லை. (நேரமிருந்தால் பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_5.html

   Delete
 3. புதிய மரபுகள்
  கவி ஒவ்வொன்றும்
  அருமை
  நானும் படித்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா, ஒவ்வொன்றும் அருமை!

   நன்றி

   Delete
 4. மகுடம் மணிகளால் சிறப்பு பெறும்.....நல்ல கவிதைகள்...நடு நிலையான விமரிசகர்களால் பரப்பப்படும்....தங்களின் விமரிசனமே....தேடிப்படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது....நானும் தேடிப்படிக்கிறேன்....பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாகப் படியுங்கள்..மறுபதிப்பு போடப்போகிறார்கள் திரு.முத்துநிலவன் அண்ணா..தவற விட்டுவிடாதீர்கள்

   Delete
 5. நன்றிம்மா.
  உன் அன்பால் என்கவிதை மேலும் சிறப்பாகத் தோன்றுகிறது.
  உன் அக்கறையால் இன்னும் சிறப்பாக எழுதத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அண்ணா..நான் வாசித்து மகிழ்ந்ததையே எழுதியிருக்கிறேன்.உங்கள் கவிதைகள் சிறப்பானவைதான் அண்ணா :)

   Delete
 6. அட.. ! எத்தனை உயரத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள்?..!
  கிடைத்தற்கரிய நூல்களெல்லாம் கைவரப் பெற்றுப்
  படித்து மகிழ்ந்து எம்முடன் பகிர்கின்றீர்களே!.. அருமை!

  அறிகின்றேன் இன்று உங்களால்!..
  நானும் இப்படியான நூல்களைப் பெறுவதெப்படி
  என ஆழ்ந்து யோசிக்கின்றேன்.. பார்ப்போம்..!

  நல்ல விமர்சனப் பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. உயரத்தில் எல்லாம் அன்புத்தோழி..புத்தகம் படிக்கக் கிடைத்தது என் பாக்கியம்..நான் மகிழ்ந்ததைப் பகிர்கிறேன் அவ்வளவே.
   நன்றி தோழி

   Delete
 7. தோழி இளமதி கிரேஸ் இன்னும் அதிக உயரத்தில் இருக்கிறார். நம்மாக நம்மோடு பழகுவதால் தன்னடக்கத்தோடு தன் உயரத்தை வெளிக்காட்டாது இருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பு பணி உண்மையிலேயே மிக உயர்ந்த விஷயம்!!!

  அண்ணாவின் எழுத்துக்களை நீங்கள் அலசி பேசும் போது தான் இதுவரை சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது என நான் படித்த வரிகளுக்கு உண்மையான பொருள் உணர்ந்தேன். மிகமிக அருமை டியர்!! நீங்கள், அண்ணா, குட்டீஸ் எல்லோரும் நலம் தானே?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, டியர் நீங்களுமா? உங்களோடு ஒருத்திதான் நான், உயரம் ஒன்றும் இல்லை. மொழிபெயர்க்கும் பணியை நீங்கள் எல்லாம் ஊக்குவித்துப் பாராட்டுவது பெரிய விசயம்..நன்றி டியர்.

   //சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது // வாவ் நன்றி டியர் ..நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும் நலம் தானே? விரைவில் பேச காத்திருக்கிறேன்...

   Delete
 8. வணக்கம் !

  ஆராய்ந்து உணர்ந்து அகத்தினில் பட்டத்தைத் தேனாய்ச் சொரிந்த
  பண்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !கவிஞர்
  முத்துநிலவன் ஐயாவின் கவிதைகள் காலத்தை மகிழ வைக்கும்
  இன்ப ஊற்றாகத் தவழவும் என் மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
  இங்கே உரித்தாகட்டும் .சிறப்பான விமர்சனம் மேலும் தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி..
   உங்கள் வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றி

   Delete
 9. ஒரு நூல் விமர்சனம் என்பது அப்புத்தகத்தை மற்றவர்களைப் படிக்கத் தூண்ட வேண்டும். அவ்வகையில் உங்களின் விமர்சனம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி எழில்

   Delete
 10. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...