Tuesday, October 28, 2014

மழைக் காதலியே ... வருக! - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப்புரை

நூல் வெளியீடு அன்று கவிஞர் நீலா அவர்கள் ஒரு புத்தகம் கொடு என்று கேட்டார்கள். அப்பொழுது கையில் இல்லாததால் சென்று எடுத்து வந்து கொடுத்தேன். இடையில் பேசிய நண்பர்களின் உரையாடலில் சிறிது நேரம் கழித்தேக் கொடுத்தேன். ஆனால் கவிஞர் ஆர்.நீலா அவர்களோ உடனடியாகப் படித்துவிட்டு அங்கேயே மதிப்புரையும் எழுதிக் கொண்டுவந்து தந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அவர்களுக்கு மனம்நிறை நன்றியைச் சமர்ப்பித்து அவர் எழுதிக் கொடுத்ததை இங்கே தட்டச்சுகிறேன்.
 


-----------------------------------------------------------------------------------------------------------------------
               புழுக்கமான உச்சிவெயில் நேரத்தில் ஒரு வேப்பமரக்காற்று வீசினால் சட்டென்று ஒரு புத்துணர்வு தோன்றுமே...அப்படித்தான் இருந்தது 'துளிர் விடும் விதைகள்' கவிதைத் தொகுப்பைப் படித்ததும். அவரது கவிதைத் தொகுப்பைப் போலவே அவரும் ஒரு ஐந்தரை அடி அருவிதான்...!
               வாழ்க்கையின் அவசரகதியில் நாம் தவறவிடும் அற்புத கணங்களை தன் கவிதையில் குட்டி குட்டியாய்ப் பதிவு செய்திருக்கிறார் சகோதரி கிரேஸ் பிரதிபா. கூடவே சூழல் விழிப்புணர்வை பாலில் கலந்த தேன் போல உறுத்தாமல் இயல்பாகத் தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
(வலிந்து திணிக்கும் சில சொற்கள்தான் கொஞ்சம் உறுத்துகிறது). அறிவியலையும் இலக்கியத்தையும் கணினித்தமிழையும் இணைக்கும் விதமாக நீங்கள் மற்றுமொரு புத்தகம் அவசியம் எழுத வேண்டும் தோழி!
               'தமிழே உதவ மாட்டாயா?' என்ற காதல் குறும்புக் கவிதை அழகோ அழகு. காதலித்த அனைவரும் தன் கடந்த காலத்திற்குள் ஒரு முறை போய் வருவார்கள். மழை, மேகம், இடி, மின்னல் என்று இயற்கையைக் கொண்டாடும் அவருக்கு இயற்கைச் சூழலை பாழ்படுத்தும் நெகிழி (ப்ளாஸ்டிக்) உபயோகம் கோபத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா? அந்த இரு கவிதையுமே சிறப்பான பதிவு.
               எங்கே இவர் இயற்கையைக் கொண்டாடி மகிழ்ந்துவிட்டு தன்னைச் சுற்றி நடக்கும் பலவற்றைப் பதியாமல் விட்டு விடுவாரோ என்று ஐயப்படும் நேரத்தில் வருகிறது 'நாளைய சமுதாயம் நம் கையில்' என்னும் கவிதை. ஒவ்வொரு வரியும் ஒரு ஊசி.
               புதுக்கவிதையாக இருந்தாலும் எதுகை, மோனை, உவமை, உவமேயம் ஆகியவை இயல்பாக எடுத்தாளப்பட்டுள்ளது. அது கூடுதல் அணி சேர்க்கிறது. இன்னும் சில கவிதைகளில் நம் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து வருகிற விடுகதை, சிலேடை பாணியும் வருகிறது.
"அழகுவடிவம் ஈர்த்தாலும் 
அணைத்துக் கொஞ்சமுடியாது
பஞ்சணை போல் இருந்தாலும் 
படுத்துறங்க முடியாது"
இதன் விடை மேகம். இதை விடுகதை பாணி என்றால் 'உன் வாசம் நுகர்ந்தவுடன்' கவிதையைச் சிலேடைக்குச் சொல்லலாம். மேகத்திற்கு மட்டுமல்ல காதலுக்கும் இக்கவிதையைப் பொருத்திப் பார்க்கலாம்.
               அறிவியலை கவிதையில் கொண்டுவந்து வெற்றி பெற்ற கவிஞர்கள் மிகக் குறைவு. அவர்களுக்குள் கிரேஸ் பிரதிபாவும் வர வாய்ப்புண்டு. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற அறிவியல் நூற்பாவை கவிதைக்குள் சொன்னவிதம் அருமை. அதேபோல் தோற்ற மயக்கத்தையும்.
               மல்லிபட்டினம் பகுதிக்கு மீனவர்களின் சொற்களை ஆய்வு செய்வதற்காகப் போயிருந்தேன். அங்கு ஒரு மீனவர் சொன்னார், வடக்கிலிருந்து வரும் காற்றை வாடை என்றும், தெற்கிலிருந்து வருவதை தென்றல் என்றும், கிழக்கிலிருந்து வருவதை கச்சான் என்றும் மேற்கிலிருந்து வருவதை கொண்டல் என்றும் காற்றை வகைபிரித்துச் சொல்வார்களாம். கிரேஸ் பிரதிபா மேகம் என்று கொண்டளுக்கு சொல்கிறார். இரண்டில் எது சரி?
               ஒரு சில இடங்களில் வார்த்தைகளைப் பரத்திக் கொண்டே போவதை தவிர்த்தால் கவிதை இன்னும் செட்டாக இருக்கும். பாலுமகேந்திரா படத்தில் ஒரு முழுப்படத்திலும் காட்சி காட்சியாய் ஒரு கதையைக் காண்பித்துவிட்டு கடைசிக் காட்சியில் அவரே தோன்றி, 'இந்தப்படத்தில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்...' என்று பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? கவிதையின் தலைப்பாக 'மழை இன்பம்' என்று பெயர் வைத்துவிட்டு, மழையை எதிர்நோக்கும் ஈர மனநிலையை அழகழகாய்ச் சொல்லிவிட்டு கடைசியில் 'இன்பம்...மட்டற்ற இன்பம்' என்று ஏன் சொல்லவேண்டும்?
               இயற்கையைக் கொண்டாடுபவர்கள் நிச்சயமாகத் தன் மொழியைக் கொண்டாடுவார்கள். மொழியைக் கொண்டாடுபவர்கள் உலகைக் கொண்டாடுவார்கள். உலகைக் கொண்டாடுபவர்கள் மனிதத்தைக் கொண்டாடுவார்கள். அப்படி ஒரு கொண்டாட்டமாய் 'துளிர் விடும் (க)விதைகள்' நூல் இருக்கிறது. இது செடியாகி மரமாகி விருட்சமாக வளர்ந்து நிழல் பரப்பவேண்டும்.
               ஒரு கவிதைக்கேயுரிய அழகியலோடு அகரம் பதிப்பகம் இதை பதிப்பித்திருக்கிறது. விலை ரூ 100.
               வாழ்த்துகள் தோழி ...
கோபங்கள் மின்னலாய் மறையட்டும்
நேசங்கள் வானமாய் நிலைக்கட்டும்
________________________
-----------------------------------------------------------------------------------------------------------------------


18 comments:

 1. தங்களது கவிதைக்கு மிக அருமையாக விமர்சனம் கொடுத்திருக்கிறார்.
  அந்தச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்..உங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 2. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 3. அன்புள்ள சகோதரி அவர்களுக்கு, மதுரையில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பினைப் பற்றிய தங்கள் பார்வையினையும், தாங்கள் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா பற்றியும் தங்கள் வலைத்தளத்தில் படங்களுடன் விரைவில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.
   கண்டிப்பாக வெளியிடுவேன் ஐயா, இப்பொழுது வெளிநாட்டுப் பிரயாண வேலையில் இருப்பதால் அங்கு சென்றவுடன் பதிவுகள் இடுவேன். அதுவரை பொறுத்தருள்க...நன்றி ஐயா.

   Delete
 4. சிந்தனை கேள்விகளோடு விமர்சனம் நன்று...

  சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 6. இதுதான் நீலா! எனது இலக்கியச் சகோதரி. வலைப்பக்கம் பற்றித் தெரிந்தும் இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்னும் ஆதங்கத்தில் எங்களுடன் மதுரை வந்தார். வந்த இடத்தில் தந்த நூலுக்கு எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். இதுதான் நீலா. இவரது கவிதைநூலுக்கு நான் எழுதிய முன்னுரையைப் படியுங்கள் - நன்றி. http://valarumkavithai.blogspot.in/2013/09/blog-post_9232.html

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா, உடனே படித்து எழுதிக் கொடுத்துவிட்டார்கள்...எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!

   Delete
 7. சென்று வா! தங்கையே சென்றுவா! எங்கிருந்தாலும் இலக்கியப் பயணம் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..கண்டிப்பாக! இப்பொழுது இன்னும் ஊக்கமும் பொறுப்பும் அதிகரித்ததுள்ளதை உணர்கிறேன்.

   Delete
 8. புத்தகத்தை வாங்கத் தூண்டும் மதிப்புரை! வாழ்த்துக்கள்! விரைவில் வாங்கி விடுகிறேன்! நன்றி!

  ReplyDelete
 9. நல்ல விமர்சனம்...சரியான திறனாய்வு..கவிதையை செதுக்கும் உளியாய்...வாழ்த்துகள்மா

  ReplyDelete
 10. கொண்டல் என்ற சொல், மேகம், கீழ் காற்று என்று பொருள்படுகிறது.
  1. Receiving, taking;
  கொள்ளுகை. உணர்ங்கற் றலையிற்பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5);
  2. Cloud;
  மேகம். கொண்டல் வண்ணாகுடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6).
  3. Rain;
  மழை. (ஞானா, 43, 14, உரை.

  கொள்ளுதல் ; மேகம் ; காற்று ; கீழ்காற்று ; கிழக்கு ; மேடராசி ; கொண்டற்கல் ; மகளிர் விளையாட்டுவகை என பல பொருள் தரும். (நன்றி:தமிழ் இணையக் கல்விக் கழகம்)

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...