Friday, August 29, 2014

ஆணியே ...

piece dosai
fish dosai


மகன் தோசை வார்க்கிறார்

என் இளைய மகன்  அவனுடைய விளையாட்டு ஓட்டலில் சாப்பிட அழைத்தான்..சென்றேன், அங்கு நடந்த உரையாடல்:

அவன்: என்ன வேண்டும்?
நான்: தோசை
அவன்: சட்னியா சாம்பாரா?
நான்: இரண்டும் :)

Thursday, August 28, 2014

இவள் அழகை இழப்பது ஏன்?

மண்ணாலான நண்டு வளையைப் பாருங்கள், நெல் மலர்களால் அது நிறைந்ததைப் போல தேடிய செல்வத்தால் இல்லத்தை நிறைக்க விரைந்து வருவான் அவன். இவள் ஏன் தன்னுடைய மிகுதியான அழகை இழக்கிறாள்? வேம்பு பூத்ததைப் பாருங்கள், மணம் முடிக்கவே வேண்டியதைச் செய்யுங்கள்.

Wednesday, August 27, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் திரு.யாழ்பாவாணன் ஐயா நடத்தும் கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பும் கவிதைகள் கீழே!
கீழிருக்கும் படத்திற்கு ஒரு கவிதை எழுத வேண்டும்..தோழி தாய்க்குச் சொல்வதுபோல எழுதிவிட்டேன். (சங்க இலக்கியத் தாக்கம் :) ). தீபத்திருநாளிற்கு ஊருக்கு வரும் தலைவனை மணம் முடித்து வையுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாள் தோழி.


"உண்ணாமல் உறங்காமல் வாடியிருந்தவள் 
உண்கண் கலங்க வருந்தியிருந்தவள்
பட்டுவிலக்கிப் பாதை பார்த்திருந்தவள் இன்று 
பட்டாடையும் பகட்டு இழைகளும் அணிந்தனளே 

மையிட்ட புருவ வில்லின் நடுவே செஞ்சாந்திட்டு 
மையல் விழிகள் ஒளிரப் பார்ப்பது எங்கே?
உள்ளகம் மலர் வேண்டுமென்று  நீ அழைக்க 
உள்ளம் உகளப்  புதவில் நிற்பது ஏன் தாயே?

மலர் கொண்ட மஞ்சிகைத்  தன்னிடமே வைத்து 
மயில் இயல் வஞ்சியவள் வாசலில் சிலையானாளே  
செறிதொடி கரங்கள் மாலை சூட்டக் காத்திருக்கே 
செங்காந்தள் அவிழும் ஊரன் தீபத்திருநாள் வருகிறானே"

சொற்பொருள்: உண்கண் - மையிட்ட கண், இழை - அணிகலன், மையல் - காதல், உள்ளகம் - உட்புறம், உகள - துள்ள, புதவு - வாயில், மஞ்சிகை - கூடை, மயில் இயல் - மயில் போன்ற, வஞ்சி - பெண், செறிதொடி - நெருக்கமாய் அணிந்த வளையல்கள்

அடுத்த கவிதை நான் சாலையில் பார்த்த ஒரு தாயும் குழந்தையும் ஏற்படுத்திய தாக்கம். வாகன நெரிசலில் இருசக்கர வண்டியில் முன்னால் குழந்தையை நிறுத்திச் சென்றுகொண்டிருந்த தாய் தடுமாறி விழப்போனார்.. பதறிவிட்டேன், தலைக்கவசமும் போடவில்லை. ஒரு புறம் லாரி, மறுபுறம் சாலையின் நடுவில் இருக்கும் டிவைடர். உழற்றிக்கொண்டே ஓட்டிக்கொண்டிருந்தார். புதிது போல,,தலைக்கவசம் அணிய வேண்டுமல்லவா? எதிர்மறையாக எழுதுவதற்கு மனம் ஒப்பவில்லை என்றாலும் இதைப் படிக்கும் ஒருவரேனும் தலைக்கவசம் தவறாமல் அணிய ஆரம்பித்தால் நலமே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

WEAR HELMET! Image:Thanks Google

தலைக்கவசம் குடும்பக்கவசம் 

"வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தானே வந்தாய்
வீதியில் அழவைத்து எங்கு சென்றாய் அம்மா?

முன் சென்ற வண்டி நம் முன்னால் வர
முட்டி விழுந்தோமே அம்மா

நான் இந்த பக்கமும்  நீ அந்த பக்கமும் 
நடுவில் இருந்த கல்லில் இடித்துவிட்டாயாமே

தலைக்  கவசம் அணியவில்லை என்றே
தலைக்குத் தலை ஏதோ சொல்கின்றனரே

தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா
தலைக் கவசம் ஏன் வாங்கவில்லை?

மிட்டாய் கேட்டு அடம் பிடித்த நானும்
மினுக்கும்  தலைக் கவசம் கேட்கவில்லையே

தனியாக அழுகின்றேன் வருவாயோ அம்மா 
தலைக்கவசம் வாங்கியே வீடு செல்வோம் அம்மா

வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தானே வந்தாய்
வீதியில் அழவைத்து எங்கு சென்றாய் அம்மா?"

Image: Thanks Google


Thursday, August 14, 2014

மார்போடு தழுவியவள் வருந்துவது ஏன்?ஐங்குறுநூறு 29, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை, தோழி செவிலியிடம் சொன்னது
"மாரி கடி கொளக் காவலர் கடுக
வித்திய வெண் முளை களவன் அறுக்கும் 
கழனி ஊரன் மார்புற மரீஇத் 
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது எவன் கொல் அன்னாய் "
மார்போடு தழுவியவள் பசலை கொள்வது ஏனோ?

Tuesday, August 12, 2014

களவன் என்றே தெளிந்தேனே


Image:Thanks Google
சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இதில் வரும் களவன் பத்து  என்ற பத்துப் பாடல்களில் 'களவன்' என்ற சொல் வரும். களவன் என்றால் நண்டு. நண்டின் ஏதேனும் ஒரு செய்கையைச் சொல்லி அதன் மூலம் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும் இப்பாடல்களில். இந்தக் 'களவன்' என்ற சொல் நிறைய குழப்பம் கொடுத்தது. 'களவன்' சரியா? 'கள்வன்' சரியா? புள்ளி வருமா? வராதா? எது சரியான சொல்? எனக்கும் குழப்பம் இருந்தாலும், உ.வே.சா. அவர்களின் உரையில் 'கள்வன்' இருப்பதைப் பார்த்து அப்படியே பயன்படுத்தினேன். அதை ஆன்றோரிடம் கேட்டுத்  தெளிவுபெறவேண்டும் என்று கூட எனக்குத் தோணாமல் போயிற்று. என் பதிவுகளை இந்த இணைப்புகளில் பார்க்கவும், ஆங்கிலத்தில், தமிழில். ஆனாலும் இதைப் பார்த்த திரு.முத்துநிலவன் அண்ணா எனக்கு அன்பாகச் சுட்டிக் காட்டியதுடன் உதவவும்  முடிவு செய்து, திரு.விஜு அண்ணாவையும்  அழைத்தார்கள். அவர் அழகாக இந்த குழப்பத்தைத் தீர்த்து வைத்தார்கள். அழகான எளிதான அந்த பதிவிற்குச் செல்ல உள்ளங்கவர் களவன் என்ற இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். மனம்கனிந்த நன்றியுடன் இதைப்  பதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், தாமதமாகிவிட்டது. முத்துநிலவன் அண்ணாவிற்கும் விஜூ அண்ணாவிற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

ஓலைச் சுவடிகளில் இருந்து பாடல்களைப் படித்து உரை எழுதும்பொழுது ஏற்படும் குழப்பங்களையும் அதை திரு.உ.வே.சா. அவர்கள் எப்படி தெளிவுபடுத்திக்கொண்டார் என்பதையும் அழகாச் சொல்லியிருக்கும் விஜூ அண்ணாவின்  சொல் வேட்டை என்ற பதிவையும் பாருங்கள்.

நன்றி.

Saturday, August 9, 2014

பாத அளவும் மதிப்பீடும்

இன்று ஒரே அடிபிரதட்சினம் வீட்டில் ... :)
என் இளைய மகனுக்கு குத்துமதிப்பாகக் கணக்கிடுவதற்குச் சொல்லிக்கொடுத்தேன். இன்று அவனுடைய பாத அளவு அளவுகோலாக எடுத்துக் கொண்டேன். சோபாவின் நீளத்தை முதலில் அளந்து கொள்ளச் சொன்னேன். சோபாவின் நீளம், அவன் பாத அளவில், 13. பிறகு அடுமனையிலிருந்து வாசல் கதவு வரை எத்தனை பாத அளவு இருக்கும் என்று குத்துமதிப்பாகச் சொல்லச் சொன்னேன்.

Thursday, August 7, 2014

தமிழ் கற்கிறோம் - எழுத்து அட்டைகள்

விடுமுறை ஆரம்பித்தபொழுது, சில மாதங்களுக்கு முன் தமிழ் எழுத்துகளை அட்டையில் எழுதி வெட்டிக்கொண்டு தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தினேன். சிறியவனுக்கு எழுத்துகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தினேன். தெரிந்த சில எழுத்துகளை வைத்து சொற்கள் என்று படிப்படியாக முன்னேறுகிறோம். ஆமை மாதிரி மெதுவாக இருக்கிறதே என்றும் நினைப்பதுண்டு. எனது 5, 9 வயதுகளில் எவ்வளவு தெரிந்தது என்று எனக்கு நினைவில்லை..ஆனால் பெரியவர்களாகும் பொழுது என்னை மாதிரி வாசிக்கவும் எழுதவும் வைத்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். கீழே இருப்பது இன்று என் இளைய மகனின் பயிற்சி.

 நான் சொல்லும் வார்த்தையை எழுதி அதற்கு ஏற்றவாறு படமும் வரையச்சொன்னேன். வயிற்றில் 'square'வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அதனால் கட்டத்தை அவன் அப்பாவின் வயிற்றில் வரைந்திருக்கிறான். :)
இங்கு இடையில் குறும்பு, தானாக ஆங்கிலத்தில் ஏதோ எழுதுவதற்கு இடைவெளி எடுத்துக்கொண்டான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...