நிலக்கடலை கொறிக்கலாம்

ஆர்ப்பரிக்கும் அலைகடல்
ஆரவார மெரீனா கடற்கரை
பரந்த மணலில் ஏனோ கண்ணாடித் துண்டுகள்?
நடப்பவர் காலை முத்தமிடவா? இல்லை
கடல் வாழ் ஓருயிரைக் கொல்லவா?

நிலக்கடலை கொறிக்கலாம் - ஆனால்
நீலக் கடலைக் குப்பையாக்கலாமோ?
கரைசேரும் கிளிஞ்சல் பொறுக்கலாம்
கரையிருந்து  ஓடுகள் போலாமோ?


ஆழி சேரும் ஒரு பிளாஸ்டிக் பை
ஆமை ஒன்றைக் கொல்லலாம்
பனிக்கடல் மிதக்கும் பிளாஸ்டிக் பை
பறவை ஒன்றைக் கொல்லலாம்


உணவென்றே பிளாஸ்டிக்கை உட்கொண்டு
உயிர் விடும் சில உயிர்கள்
தூக்கியெறியும் பிளாஸ்டிக் வளையங்கள்
தூக்குக் கயிறாய்க் கொல்லும் சில உயிர்கள்


ஆறறிவு இருப்பது ஐந்தறிவை அழிக்கவா?
ஆய்ந்து அறிந்து இயற்கையைப் போற்றவா?

குப்பையை ஆங்காங்கே வீசலாமோ?
மக்காத பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாமோ?


Images: thanks google

34 கருத்துகள்:

  1. வருக மீண்டும் வருக ... (பளளி கல்லூரி்க் கோடை விடுமுறை முடிந்து மீண்டுவரும் இளைய வகுப்பினரை வரவேற்கும் மூத்த வகுப்பினரின் வரவேற்பு நினைவுக்கு வருதா?) அருமை சகோதரி. சுற்றுச் சூழல் துறையினர் பயன்படுத்தக் கூடிய ஆழ்ந்த சொல்நயமும், ஓசைநயமும், கருத்தாழமும் கொண்ட, இன்றைய சமூகத்தினர் கவனிக்க வேண்டிய கவிதை. ஆழி சேரும் ஒரு பிளாஸ்டிக் பை
    ஆமை ஒன்றைக் கொல்லலாம்
    பனிக்கடல் மிதக்கும் பிளாஸ்டிக் பை
    பறவை ஒன்றைக் கொல்லலாம் - எனும் இடத்தில் ஓசை நயமும் அருமை. தொடரட்டும், இந்த உணர்வு உம் கவிதை வழியே பற்றிப் படரட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி ஐயா. பள்ளி கல்லூரியின் வரவேற்பைவிட வலைத்தளத்தில் உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது ஐயா. உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி.

      நீக்கு
  2. ஆறறிவு இருப்பது ஐந்தறிவை அழிக்கவா?
    ஆய்ந்து அறிந்து இயற்கையைப் போற்றவா? - “ஐந்து பெரிது, ஆறு சிறிது“ எனும் வைரமுத்துவின் புகழ்பெற்ற கவிதையை நினைவு படுத்தும் அரிய வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரமுத்துவின் அக்கவிதையினைப் படித்திருக்கிறேன். அவரின் வைர வரிகளை நினைவு படுத்துவதாய் என் கவிதை அமைந்தது மகிழ்ச்சி தருகிறது, மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  3. வணக்கம்
    சகோதரி.

    சரியான விழிப்புணர்வுப்பதிவு...இந்த நூற்றாண்டில் இப்படி என்றால் இனி வருகிற நூற்றாண்டில் எப்படி இருக்கும் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் பதிவு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  4. படிக்கும்போதே வேதனை தருது கிரேஸ். படங்கள் கண்ணைக் கலங்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ராஜி, நாம் செய்யும் தப்புகளுக்கு பாவம் மற்ற உயிர்கள்...
      உங்கள் கருத்துரைக்கு நன்றி ராஜி.

      நீக்கு
  5. "குப்பையை ஆங்காங்கே வீசலாமோ?
    மக்காத பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தலாமோ?" என
    சிந்திக்க வைக்கும் சிறந்த வரிகள் போட்டு
    ஆறறிவு, ஐந்தறிவு, பகுத்தறிவு எதுவெனக் கேட்டு

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. தங்களது வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா...

    கடற்கரையில் மட்டுமா இயற்கையை மாசுபடுத்துகிறார்கள். நிலமெங்கிலும் தானே!!!

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முற்படும் கவிதை அக்கா...

    நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெற்றிவேல், மகிழ்ச்சியாக உள்ளது.
      ஆமாம் எங்கும் மாசுபடுத்துவது நடக்கிறது..நான் மெரீனா சென்று மனம் வருந்தியது இங்கே கவிதையானது..

      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
  8. புவியினை நேசிக்கும் ஒரு கவிதை...
    வாழ்த்துக்கள்
    படங்கள் மனதை வேதனைப்படுத்தியது.
    மீண்டு வருகை நல்வரவு..
    வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2014/01/blog-post_2280.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மது.

      உங்களின் இந்த பதிவை படித்திருக்கிறேன், பகிர்விற்கு நன்றி. இங்கு வரும் நண்பர்கள் படிக்க எளிதாய் இருக்கும்.

      நீக்கு
  9. அருமையான வரிகளாலான சூழல் கவிதை... அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி கிரேஸ்..
    இடைவெளிக்குப்பின் உங்களை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி எழில்.
      உங்கள் வரவேற்பும் மகிழ்ச்சி தருகிறது. உளமார்ந்த நன்றி.

      நீக்கு
  10. சுற்றுச் சூழலை மாசடைய வைத்து உயிர்ப் பலி எடுக்கும் ஆறறிவு
    படைத்த மனிதர்களுக்கு புத்தி புகட்டும் கவிதை வரிகளைக் கண்டு
    உள்ளம் உருகி நின்றது வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் ஆழமான கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. கிரேஸ் செல்லம் எங்க போய்டீங்க இவ்ளோ நாளாய்?
    அருமையான ஒரு விழிப்புணர்ச்சி கவிதையோடு வந்திருக்கிறீர்கள்!
    பொருத்தமான படங்கள் வேறு அட்டகாசம். தலைப்பு சூப்பர் கவிதையை போலவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை, விருந்தாளி, பின்னர் உடல்நலக்குறைவு என்று இணையம் வரமுடியவில்லை அன்பு மைதிலி. இப்பொழுதுதான் தேறி சற்று அமர முடிகிறது. உங்கள் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிக்க ஆவலாகவே இருந்தேன். உங்கள் அன்பிற்கு நன்றி.
      உங்கள் இனிய கருத்துரைக்கும் நன்றி தோழி.

      நீக்கு
  12. சகோ..
    வரிகளுக்கு வலு சேர்த்தது படங்கள் ...

    பதிலளிநீக்கு
  13. வருக.. வருக :). வலைதளத்துக்கு மீண்டும் வருக ... அட்டகாசமான பதிவு... :)

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொருவரும் உணர வேண்டும்... இணைத்த படங்களும் கலங்க வைத்தது...

    தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...கலங்கவைக்கும் படங்கள் இணையத்தில் நிறைய இருக்கிறது சகோதரரே :(
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  15. விழிப்புணர்வுக் கவிதை சகோதரியாரே
    படங்கள் ஒவ்வொன்றும் மனதைக் கனக்கச் செய்கின்றன
    இந்நிலை என்று மாறுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரரே. இந்நிலை மாறித்தான் ஆகவேண்டும்..நம்மாலான முயற்சியை செய்வோம்.

      நீக்கு
  16. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு....

    ஆறறிவு கொண்டவர்கள் ஐந்தறிவு கொண்டவற்றை அழிக்கலாமோ......

    சரியான கேள்வி.... தொடர்ந்து அழித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட், ஆமாம் சிறிது இடைவெளியாகிவிட்டது. நலமா?

      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...