ஐங்குறுநூறு 27 - கதிர் கொண்டு வளைச் செல்லும் களவன்



ஐங்குறுநூறு 27, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது
 
"செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன்
தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய்."

படம்: நன்றி இணையம்

எளிய உரை: செந்நெல் விளைந்த அழகிய வயலில் நெற்கதிரை எடுத்துக்கொண்டு நண்டு குளிர்ந்த அகத்தை உடைய மண் பொந்திற்குள் செல்லும். அத்தகைய ஊரைச் சேர்ந்தவனை எண்ணி  ஒளிவீசும் வளையல் நெகிழுமாறு துன்பத்தால் வருந்துவது ஏன் தாயே?

விளக்கம்: பொருள் ஈட்டச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வராததால் அவனுக்குப் புற ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டது என்று வருந்தும் தலைவிக்குத் தோழி, அவன் உன் மேல் அன்பு நிறைந்தவன், அப்படியிருக்க தோள் மெலிந்து வளை நெகிழுமாறு வருந்துவது ஏன் தோழி என்று கூறுகிறாள். கதிர் கொண்டு தன் அகம் செல்லும் நண்டைப் போல தலைவனும் பொருள் ஈட்டிக் கொண்டு இல்லறம் திரும்புவான் என்று பொருள்படத் தோழி சொல்வதாக அமைந்துள்ளது.

சொற்பொருள்: செந்நெல் - செந்நிற நெல், அம் – அழகிய, செறுவில் – வயலில், கதிர் கொண்டு – நெற்கதிரை எடுத்துக்கொண்டு, களவன் – நண்டு, தண் – குளிர்ந்த, அக – வீடு, மண் அளைச் செல்லும் – மண் பொந்திற்குச் செல்லும், ஊரற்கு – ஊரைச் சேர்ந்தவனுக்கு, எல் – ஒளியுடைய, வளை நெகிழ சாஅய – வளையல் நெகிழ்ந்து அவிழ, அல்லல் – துன்பம், உழப்பது - வருந்துவது, எவன் கொல் அன்னாய் – ஏன் தாயே 

என் பாடல்:
"அழகிய வயலில் களவன் செந்நெற் கதிர் கொண்டு
குளிர்ந்த மண் வளைச் செல்லும் ஊரற்கு 
ஒளி பொருந்திய வளை நெகிழ்ந்து அவிழ
அல்லல் உழப்பது ஏன் தாயே?"

32 கருத்துகள்:

  1. மிக இனிமை. தங்கள் வரிகளும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கவிதையை
    அதன் கருத்து சிறிதும் சிதையாமல்
    அற்புதமான எளிமையான கவியாக்கித் தந்தது
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அழகுத் தமிழ்ப் பாடல். அதற்கு விளக்கம் தந்ததுடன் உங்களின் பாடலையும் தந்தது வெகு சிறப்பு. நன்றாக அமைந்திருக்கிறது உங்கள் கைவண்ணம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  4. மனதில் நிற்கும் பாடல், உரிய விளக்கத்துடன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கமும் பாடலும் :) வாழ்த்துக்கள் கிரேஸ்

    பதிலளிநீக்கு
  6. சிறந்த இலக்கிய விளக்கம்

    பதிலளிநீக்கு
  7. பழந்தமிழ்ப் பாடலை எளிமையாக்கி -
    நாங்களும் அறியத் தந்தமை அருமை..

    கவிநயம் அழகு. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. அருமைாயன பகிர்வு. எளிமையான விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
  9. அழகான பாடல் விளக்கம்! உங்கள் பாடலும் மிகப்பொருத்தம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அருமையான பாடலும் விளக்கங்களும் தோழி ! மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்
    தொடர்ந்தும் இது போன்ற நல் விளக்கங்கள் தமிழ் பேசும் நல்லுலகிற்குத் தேவை
    தொடருங்கள் நாமும் தொடர்கின்றோம் .

    பதிலளிநீக்கு
  11. தமிழை கரைத்துக் குடித்தவரின் விளக்கமும் தெளிவும் என்னே அருமை, மிகவும் அழகான பாடலை எளிமையாக தந்தமைக்குப் பாராட்டுகள்... தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழைக் கரைத்துக் குடித்திருக்கிறேன் என்று சொல்லமுடியாது, காதலிக்கிறேன் என்று சொல்லலாம் :)
      மிக்க நன்றி சகோ

      நீக்கு
  12. வணக்கம் சகோ !

    ஐங்குறு நூறின் அரும்பொருளோ டும்கவியும்
    பொங்கிடுதே யுள்ளம் புகுந்து !

    அருமை அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ.

      வாழ்த்திற்கும் அழகிய பாவில் சொன்ன கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  13. விளக்கவுரை அருமை சகோதரி...
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. மிகவும் தாமத வருகைக்கு வருந்துகிறேன்மா..
    அரிய பணியைத் தொடர்வதற்கு முதலில் வாழ்த்துகள். ஆங்கிலத்தளத்திலிருந்து தமிழ்த்ளம் வரும் புதிய உத்தி மிகவும் பயனுடையது (ஒரே கல்லுல ரெண்டு மாங்கா) நல்ல யோசனையும் கூட. விளக்கம், மொழியாக்கம் வழக்கம்போல அருமை. பாடலின் “களவன்“ என்பது “கள்வன்“ என்றாகிவிட்டதே? தமிழ்இணையக் கல்விக்கழகத் தளம் பார்க்க - http://www.tamilvu.org/library/libindex.htm 21-30பாடல் தொகுதிக்கே “களவன் பத்து” என்ற பெயர் நினைவிலிருந்து, தளத்திலும் பார்த்தேன். அன்பு கூர்ந்து கவனிக்கவும், தொடரவும் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பணி அனைவரும் அறிந்ததே ஐயா..அதில் நேரமெடுத்து என் பக்கம் வருவதே எனக்கு மகிழ்ச்சி. ஆங்கிலப் பதிவிலும் தமிழைச் சேர்த்து ரொம்ப பெரிதாகுவது போலத் தோன்றியது, அதனால் தான் ஐயா. நீங்கள் சொல்வது போல ஒரே கல்லில் இரண்டு மாங்காயும் கூட :) உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க அன்றி ஐயா.
      ஆமாம் ஐயா, இரண்டில் எதைப் பயன்படுத்துவது என்று எனக்கும் குழப்பம் தான். கள்வன் என்றால் திருடன் என்றும் பொருள் இருப்பதால் 'களவன்' என்றே பயன்படுத்தலாமோ?

      நீக்கு
  15. பாரி நிலைய வெளியீடாக வந்துள்ள பேரறிஞர் வையாபுரியாரின் பதிப்பையும் பார்த்தேன் “களவன்“ என்றே வந்துள்ளது (பக்-250, இரண்டாம் பதிப்பு, 1967) தமிழகராதிகளில் பார்த்தால் -களவன், கள்வன்- இரண்டுமே “நண்டு“ எனும் பொருள் தருவதாகக் குறிப்பு உள்ளது. ஆக... புள்ளியில்லாமல் எழுதும் ஓலைச்சுவடி எழுத்தாளர்களின் குழப்பம் இது என்று புரிகிறது. எப்படியோ, என் நினைவில் இருந்ததைக் கொண்டு பல பதிப்புகளையும் பார்த்து, ஒப்பிட்டு, ஒரு தெளிவுக்கு வர முடிந்தது. ஆய்வைத் தூண்டிய பதிவுக்கு நன்றிம்மா. எனது திருச்சி நண்பர் ஜோசப் விஜூவிடமும் கேட்டிருக்கிறேன். அவரது வலைப்பக்கம் பார்க்க -http://oomaikkanavugal.blogspot.in/ ஆழ்ந்த தமிழறிஞர், ஆங்கில ஆசிரியர்! அவரும் பின்னூ்ட்டத்தில் மேல் விவரங்களை எழுதுவார் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ஐயா? ஆய்ந்து அதை எனக்கும் தெரிவித்தமைக்கு உளமார்ந்த நன்றி ஐயா. இதைக் குறித்த குழப்பம் எனக்கு இருட்னஹ்து என்றாலும் அதை அப்படியே விட்டு வைத்திருந்தேன்...அதை சுட்டிக்காட்டி தெளிவு பெறவும் வழிகாட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா. உங்கள் நண்பர் ஜோசப் விஜூ அவர்களின் வலைப்பக்கம் பார்க்கிறேன். பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா. களவன் என்றே எழுதலாமோ என்று நினைக்கிறேன் .

      நீக்கு
    2. கள்வன்-களவன் ஐயம் தெளிவாகி களவன் என்று மாற்றிவிட்டேன். சகோதரர் விஜூ அவர்கள் தன்னுடைய தளத்தில் அழகாய் விளக்கியுள்ளார்,
      http://oomaikkanavugal.blogspot.in/2014/07/blog-post_11.html. அவருக்கும் உங்களுக்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
  16. கிரேஸ் பெண்கள் கணவனை தவிர பிற கவலைகளே அற்றவகளாக அன்று இருந்திருக்கிறார்கள் இல்லையா? காதலால் காத்திருந்தால் சரி , பாவம் அவளோ அன்று வேறு போக்கிடமே , வாழும் வழியே இல்லாமல் காத்திருந்தாள் என்றால் நல்லவேளை நாம் அந்த தலைமுறையில் பிறக்கவில்லை என மகிழ வேண்டியது தான்:))
    தம எட்டு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மைதிலி, ஔவையார் போன்ற சில பெண்களைத் தவிர அப்படித் தான் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். காதல், அன்பு என்று சொல்லியே பெண்களை அடிமைபோல வைத்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. வாழ்வில் காதலும் அன்பும் ஒரு அங்கமே தவிர அதுவே வாழ்வாகிவிடாது. ஆமாம் நாம் நல்லவேளையாக அப்பொழுது பிறக்கவில்லை, இன்றும் முழுமையாக சமத்துவம் வந்துவிடவில்லை எனினும். :)
      கருத்துரைக்கு நன்றி தோழி

      நீக்கு
  17. நல்ல பாடல், அருமையான விளக்கம்....களவன்/கள்வன் கலந்துரையாடல் பதிவுகளும் வாசித்தோம் சகோதரி.....

    உங்கள் எல்லோரது தமிழும் விளையாடுகின்றது....நாங்கள் எல்லாம் சும்மா தான் சகோதரி!

    பதிலளிநீக்கு
  18. செ.தேவிபாலா
    இவ்வரிகளை முதலில் வாசிக்கையில் அக்கால வாழ்வை இக்கால வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க தோன்றுகிறது.மிக எளிமையான விளக்கம்.மேலும் இப்பாடலை தங்கள் நடையில் உருவாக்கிய விதம் மிக அருமை.தங்கள் படைப்புகள் தொடர்ந்து மெருகேற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...