ஐங்குறு நூறு 23 - கொடிய தெய்வமாய் ஆக...



ஐங்குறு நூறு 23, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

“முள்ளி வேர் அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித்
தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்”

எளிய உரை: முட்செடிகளின் வேர்களிடையே நண்டை விரட்டி, பூக்களைப் பறிப்பர் பெண்கள். அத்தகைய அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன் தெளிவாக வாக்குரைத்து என்னைச் சேர்ந்தான். இப்போது தாக்கும் கொடிய தெய்வமாய் ஆனதால் என்ன செய்வது தோழி?

விளக்கம்: பெண்கள் நண்டை விரட்டியும் கரைகளில் உள்ளப் பூக்களைப் பறித்தும் விளையாடுவர். அதனால் பெண்கள் என்ற வார்த்தை உரையில் சேர்க்கப்பட்டது. அழகிய ஓடைகள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று தெளிவாக வாக்குக் கொடுத்து தலைவியுடன் சேர்ந்துவிட்டுப் பின்னர் தாக்கும் கொடிய தெய்வமாய் மாறிவிட்டானே என்று தலைவி சொல்கிறாள். வருத்தத்துடன் என்ன செய்வது என்று தோழியிடம் கேட்கிறாள். தன்னைப் பிரிந்த தலைவன் தலைவிக்குக் கொடிய தெய்வமாய்த் தெரிகிறான்.

சொற்பொருள்: முள்ளி வேர் – முட்செடிகளின் வேர், அளை – வளை, கள்வன் – நண்டு, ஆட்டி – துரத்தி, பூக்குற்று – பூக்களைப் பறித்து, எய்திய புனல் அணி ஊரன் – அழகிய ஓடைகள் ஓடும் ஊரைச் சேர்ந்தவன், தேற்றம் செய்து – தெளிவாக வாக்களித்து, நம் புணர்ந்து – என்னுடன் சேர்ந்து, இனி – இப்போது, தாக்கணங்கு ஆவது – தாக்கும் தீய தேவதை ஆவது, எவன் கொல் அன்னாய் – என்ன செய்வது தோழி

என் பாடல்:
"முட்செடிகளின் வேரிடை நண்டை விரட்டி
மலர் பறிக்கும் அழகிய ஓடைநிறைந்த ஊரன்
தெளிவாக வாக்குரைத்து சேர்ந்தான் இப்போது
தாக்கும் தீயதேவதையாய், என்ன செய்வது தோழி?"


20 கருத்துகள்:

  1. வணக்கம்...

    தலைவி தோழியிடம் வருந்திய நிகழ்வை அழகாக விளக்கியுள்ளீர்கள்...

    பாராட்டுகள்... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. நண்டுகள் ஓடித்திரியும் ஓடைக் கரையில் -
    ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்து,
    கூடிக் களிக்கும் முன்னே - கேட்டிருக்க வேண்டும்,

    தோழி!.. தெளிவாய்ப் பேசியவன் - எரிவாய்ப் பேயானான்!..
    இப்போது என்ன செய்வது?... எனும் இந்தக் கேள்வியை!..

    மீண்டும் தமிழ் வகுப்பில் இருப்பதாக உணர்வு!..
    அழகாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..காலம்கடந்து கேள்விகேட்டு என்ன பயன்?
      உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  3. நினைத்தது நடக்கவில்லையென்றால் தெய்வம் கூட கொடியது ஆகி விடுகிறது பாருங்கள்... அதுவும் காதல் என்றால் சொல்லவா வேண்டும்...?

    சொற்பொருள் விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...தெய்வம்..அதுல என்ன கொடிய தெய்வம் அப்டின்னு ரொம்ப நேரம் முழிமுழினு முழிச்சிட்டு..ஒருவழியாப் பதிவப் போட்டுட்டேன்..
      நன்றி.

      நீக்கு
  4. அழகான ஐங்குறுநூற்றுப் பாடலும் தெளிவான விளக்கமும் கண்டு ரசித்தேன் கிரேஸ். பாராட்டுகள். பக்தனை சோதிக்கும் தெய்வம் கொடிய தெய்வம்தானே!

    பதிலளிநீக்கு
  5. தெய்வத்தில் கொடிய தெய்வமும் உண்டோ.. ? உண்டு போல.. தெய்வம் என்றே வார்த்தை மூலம் பாராட்டி கேள்வி பட்டு இருக்கேன்.. முதல் முறை இப்ப தான் திட்டி பார்கிறேன் ...
    பாடலும், பகிர்வும் அருமை கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே...தாக்கணங்கு என்பதற்கு பேய் என்றும் பொருள் கொள்ளலாமாம்..நான் அவ்வார்த்தையைப் பயன்படுத்தவில்லை விளக்கத்தில்.
      நன்றி ஸ்ரீனி.

      நீக்கு
  6. நீரெழுத்தாய் மாறிப் போனது என் தலைஎழுத்து! இந்த கவிதைக்கு நான் எழுதிய ஹைக்கூ இது? அழகான விளக்கம் பகிர்வுக்கு நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  7. நண்டு வலைக்கு திரும்பிருச்சு
    பாவம் பொண்ணு புலம்புது. ஹும்...........
    காட்சியாய் இருந்தது கவிதை !
    வாழ்த்துக்கள் தோழி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, கவித்துவமா கருத்தைச் சொல்லிட்டீங்களே..
      நன்றி மைதிலி.

      நீக்கு
  8. பயனுள்ள கருத்துப் பகிர்வு
    தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. விபரமாக விளக்கியுள்ள மையால் ரசித்தேன்.....! நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...