Tuesday, January 28, 2014

சாப்பாட்டு நேரத்தில் சொல்லாடல்-விளையாட்டு

நான், என் இரு மகன்கள், என் கணவர் - நால்வரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டால் ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடுவோம்.  முடிந்தவரை இப்பழக்கத்தைக்  கடைப்பிடிக்க முயல்கிறேன். இந்தப் பழக்கம் கொண்டுவர நான் பட்டபாடு இருக்கிறதே..தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பேசிக்கொண்டுதான் சாப்பிட வேண்டும் நடைமுறைபடுத்த பெரும்பாடாக ஆகிவிட்டது. இப்பொழுதும் வெளியூர் செல்லும் நேரங்களில் நழுவிவிடும்.

அமெரிக்காவில் இருந்தவரை இரவு உணவு பெரும்பாலும் ஒன்றாக உண்போம். இப்பொழுது கணவர் வரும் நேரம் அந்த நேரத்திற்குத்தான் தெரியும். அதனால் குடும்ப உணவு நேரம் வாரக்கடைசி நாட்களில் என்றாகிவிட்டது. சரி, விசயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது 'நினைவாற்றல் விளையாட்டு'
விளையாடலாம் என்று சொல்லிக்கொடுத்தேன். நான் பள்ளியில் படிக்கும்பொழுது விளையாடியிருக்கிறோம். ஒருவர் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்ல வேண்டும் (தண்ணீர்). இரண்டாமவர் அந்த வார்த்தையைச் சொல்லிப் பின் தன் பங்காக இன்னொரு வார்த்தையைச் சொல்லவேண்டும்(தண்ணீர் மின்விசிறி). மூன்றாமவர் முதல் இருவர் சொன்ன வார்த்தைகளையும் சொல்லிவிட்டுப் பின்னர் தன் வார்த்தையைச் சொல்ல வேண்டும்(தண்ணீர், மின்விசிறி, முக்காலி). இப்படியேத் தொடரும் விளையாட்டு. வார்த்தைகளை அவைசொல்லப்பட்ட வரிசையிலேயே சொல்லவேண்டும்.

வார்த்தைகள் சேரச் சேர மறதியும் குழப்பமும் சிரிப்பும் என்று நன்றாக இருக்கும். இவ்விளையாட்டை முதலில் ஆங்கில வார்த்தைகள் கொண்டுதான் விளையாடிக்கொண்டிருந்தோம். நேற்றுதான் தமிழில் என்று சொல்லி என் பிள்ளைகளுக்கு ஒரு கொக்கி போட்டேன். என்ன செய்றது, ஹிந்திய முட்டிகிட்டு தமிழ் படிக்கிறது கொஞ்சம் பின்னடைவு ஆகுதே..

சில வார்த்தைகள் அவர்களாகச் சொன்னாலும் சில வார்த்தைகளுக்குத்  தமிழில் என்ன என்று கேட்டுவிட்டுப் பின்னர் சொன்னார்கள். இருந்தாலும் விளையாட்டு நன்றாக இருந்தது.
நேற்று விளையாடிய சொற்கள்: தண்ணீர், மின்விசிறி, முக்காலி, பானை, தட்டு, குளிர்சாதனப் பெட்டி, கடிகாரம், மாதா, நாய், அழுத்தச் சமைகலம், பத்து, மூக்கு, அம்பத்தெட்டு, குடுவை, வெல்லம், கதவு, மேசை, கரண்டி, துண்டு,காலணி.

சிறியவன் ஒரு முறை 'தட்டு' சொல்லியிருந்தான். இன்னொரு முறை அதையே சொன்னான்..ஏற்கனவே சொல்லிட்டே என்றதற்கு, தட்டு - plate, தட்டு- மேசையில் தட்டிக்காண்பித்தான்.

ஆனாலும் சில கேள்விகள் எழுந்தன,
1. "ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையாக இருப்பது ஏன் தமிழில் இரண்டு மூன்று வார்த்தைகளாக இருக்கிறது?"
உதாரணம்: குக்கர் - அழுத்த சமைகலம் (பிரஷர் குக்கர் என்றால் தான் அழுத்தசமைகலம்,,ஆனால் பொதுவாக அதைத் தான் குக்கர் என்கிறோம்)
பிரிட்ஜ் - குளிர் சாதனப் பெட்டி
அதானே, ஏன் ஒரு வார்த்தையாக அமைக்கக்  கூடாது? தெரிந்தால் சொல்லுங்களேன்..

2. முதலிலேயே விசிறி என்றால் fan என்று அவர்களுக்குத் தெரியும். நேற்று நான்  மின்விசிறி என்று சொன்னேன்..அதற்கு விளக்கம் கேட்டுவிட்டு, பின்னர் ஏன் எலெக்ட்ரிக் fan என்று சொல்வதில்லை என்று கேட்டனர்.அட, ஆமாம்  fan-ஐ விசிறி என்று சொல்லாமல் மின்விசிறி என்றுதானே சொல்கிறோம்...

16 comments:

 1. ரசிக்க வைக்கும் விளையாட்டு... தொடர வாழ்த்துக்கள்...

  தமிழில் பல சொற்கள் இருப்பது தான் சிறப்பே... யானையின் தமிழ்ப்பெயர்களை பாருங்கள் - இனிய நண்பரின் தளத்தில் :

  http://eniyavaikooral.blogspot.com/2014/01/blog-post_23.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.தனபாலன்!
   கண்டிப்பாகச் சென்று பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி!

   Delete
 2. சாப்பிடும் போது தமிழ் ஆராய்ச்சி !? நல்லதுதான்

  ReplyDelete
  Replies
  1. :) முட்டி மோதி எப்படா தமிழ் சொல்லிகுடுக்குறதுனு இங்க வந்து நின்னாச்சு ராஜி.
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   Delete
 3. உண்மை.. நானும் பல தடவை யோசிச்சு இருக்கேன் ஏன் தமிழாக்கம் எளிதாக இல்லை என்று .. ஒரு வேலை தினசரி பயன்படுத்த ஆரம்பித்தால் electric fan சுருங்கி fan ஆனது போல மின்விசிறி சுருங்கி விசிறி ஆகுமோ?

  ReplyDelete
  Replies
  1. தமிழாக்கம் கடினம் என்று சொல்லமுடியாது ஸ்ரீனி..சொற்கள் இருக்கலாம்,,நாம் அறியாமல் இருக்கலாம்..

   Delete
 4. அது சரி சாப்பாடு என்ன ஆச்சு?

  ReplyDelete
  Replies
  1. சரியான கேள்விதான் உஷா..அப்பப்போ சாப்பிடு, சாப்பிடு என்று சொல்லி ஒருவழியாகச் சாப்பிட்டாச்சு...
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உஷா!

   Delete
 5. சிந்தனைக்கு சிறப்பான துளிகள்
  வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்.
   கருத்துரைக்கு நன்றி!

   Delete
 6. அருமை கிரேஸ்.. பயன்பாட்டில் இருப்பதால் ஆங்கில வார்த்தைகள் சுருங்கி இருக்கலாம். தமிழில் பேசினாலும், பொதுவாக இவ்வார்த்தைகளுக்கு ஆங்கிலம் தானே பயன்படுத்துகிறோம். :))

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் நினைக்கிறேன் தியானா. நீ சொல்வது உண்மைதான், இவ்வார்த்தைகளைத் தமிழில் எங்கே பயன்படுத்துகிறோம்?
   கருத்துரைக்கு நன்றி தியானா. :)

   Delete
 7. ரசித்தேன்.

  வார்த்தை விளையாட்டு - நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 8. ஆஹா இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கே!!!!.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...