Tuesday, September 3, 2013

தாயகம் தந்த வரவேற்பு

தாய்நாடு சேர்ந்திடுவேன் என்றே உவப்புடன் வந்த என்னுடைய சில அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்தே இப்பதிவு. நேரம் தவறி அயர்ந்த கண்களை அரற்றிவிட்டு முதலில் சென்றது பள்ளி சேர்க்கைக்கு. பெரியவன் மூன்றாம் வகுப்பு, சிறியவன் LKG. (LKG என்பதைத் தமிழில் எழுதலாம் என்று பார்த்தால் விளையாட்டுமுறை கல்வி என்று உள்ளது..பெயரில் ஒன்றும் வகுப்பில் ஒன்றுமாய் இருப்பதால் விட்டுவிட்டேன், பொறுத்துக்கொள்ளுங்கள்).

வெகு தூரம் ஒரு பள்ளி 
மிகு கட்டணம் ஒரு பள்ளி 
இடையிலே சேர்க்கை இல்லை 
சில பள்ளிகளில் 
ஹிந்தி பாடம் நிறைய இருக்கே 
எழுத்துகள் தெரிந்தால் பத்தாது (மெனக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்தது பலன் இல்லையா!!!)
சில பள்ளிகளில் 
பள்ளிகளில் இத்தனைப் பேதங்களா 
பேதலித்து போனேன் பேதை நான் 
சுதாரித்து பெரியவனை சேர்த்தாச்சு ஒரு பள்ளியில் 
45 நிமிடம் பேருந்தில் ஆகும் என்பதால் 
மறுத்துவிட்டேன் இளையவனை சேர்க்க 
அருகில் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம் என்று 
ஆனது ஒரு திங்கள் 
இன்று தான் முடிந்தது LKG சேர்க்கை 

விமானம் ஏறி வருவது மட்டும் அல்ல தாய்நாடு சேர்வது, பல திங்கள் கடக்கும் வேலை  ஆகிவிட்டது. மற்ற பாடங்கள் கடினமில்லை என் சிங்கக்குட்டிக்கு, ஹிந்தி ஒன்றுதான் இப்பொழுது முட்டவும், உதைக்கவும் செய்கிறது. அதையும் வழிக்கு கொண்டுவந்து விடுவோம் என்று நம்புகிறேன்.

சரி, பள்ளியை தவிர்த்து என்னை  திகைக்க வைத்த ஒரு நிகழ்வு..

என் தங்கையின் திருமணம் - அதில் என்ன திகைக்க என்று கேட்கிறீர்கள? திருமணம் நன்றாக நடந்தது. மேடையில் கவரில் வைத்து அன்பளிப்பு கொடுப்பார்கள் அல்லவா? அவற்றையெல்லாம் ஒரு பையில் வைத்திருந்தேன். உடன் என்னுடைய கைப்பை, அதில் என்னுடைய iphone5, கணவரின் அலைபேசி, சில சிறிய நகைகள்! மேடையில் ஏறிய நண்பர்கள் விசாரித்ததற்குப் பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால் இரண்டு பையையும் காணோம்..ஒரே நிமிடத்தில் மேடையில் இருந்து எங்கள் பின்னாடியே திருடப்பட்டுவிட்டன. என் தவறு  பைகளை கீழே வைத்தது, ஒரே நிமிடம் தான்..அருகில் திருடன் இருக்கிறான் என்று அறியவில்லை நான்..போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம்...
இப்படியும் திருட்டு நடக்கிறது நண்பர்களே, சில வினாடிகள் போதும் திருடுபவர்களுக்கு..கவனமாக இருங்கள், தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்..அதற்காகவே இதைப் பகிர்கிறேன். 

9 comments:

 1. இதற்கென்றே வருவார்களோ...? கவனமாக இருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் திரு.தனபாலன், தெரியாமல் போய்விட்டது. மதுரையில்தான் :(

   Delete
 2. உங்கள் தாய்நாட்டு அனுபவம் வித்தியாசமாக இருக்கின்றது. அதுசரி நீங்கள் ஊரோடு போய்விட்டீர்களா?....
  கைப்பையைத் தொலத்தது மனசைப் பிசைகிறது தோழி!
  அவசியம் அவதானம் மேற்கொள்வதற்காக
  நல்ல பகிர்விது.
  நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தோழி இளமதி, இங்கே வந்துவிட்டோம். அலைபேசி, பணம், நகை எல்லாம் திருடுபோய் மனது வருத்தமாக இருக்கிறது..அன்றே நினைத்தேன் வலையில் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்று..உங்கள் வருகைக்கும் என் வருத்தம் பகிர்ந்ததற்கும் நன்றி தோழி

   Delete
 3. உன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது ஐயமில்லை கிரேஸ். பள்ளி சேர்க்கை எப்பொழுதும் பெரிய வேலை தான். ஹிந்தி எளிதாக கற்றுக் கொள்வான். திருமணத்தில் திருட்டு போவது இப்பொழுது நிறைய கேள்விப்படுகிறேன். நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், திருடர்களுக்கு ஒரிரு நிமிடங்கள் போதும் திருடுவதற்கு..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கருத்துரைக்கு நன்றி தியானா.

   Delete
 4. திருமண வீட்டில் எல்லோருமே நம் சொந்தங்களாகவும் நமக்கு வேண்டப்பட்டவர்களாகவும் இருப்பதால் எவரையும் சந்தேகிக்கவும் இயலாது. நடந்த நிகழ்வு மிகவும் வருத்தம் தரும் செய்தி. அதோடு எல்லா சமயங்களிலும் எச்சரிக்கையாயிருக்கத் தூண்டும் பகிர்வு. பிள்ளையின் பள்ளி சேர்க்கை மற்றுமொரு மனவருத்தம் தரும் செய்தி. பலகாலமாய் விலகிப்போய்விட்ட நம்மூர் நமக்குப் பழக சில காலமெடுக்கும். மனத்தைத் தேற்றிக்கொள்ளுங்கள் கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், சந்தேகப்படுவது கடினம். விநாடி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.
   ஆமாம், பழக சிலகாலம் ஆகும்..ஆறுதலான கருத்துரைக்கு மிகவும் நன்றி தோழி கீதமஞ்சரி.

   Delete
 5. எவ்வளவு பிரச்னை..
  இனிமேல் நல்லவை மட்டும் தான் காத்து கொண்டு இருக்கிறது :)

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...