Wednesday, June 26, 2013

நீரைப் போன்ற மென்மையானவள்

" மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் வித்தன்றே"

மலையின் அழகை கண் முன் கொண்டு வரும் இப்பாடல் குறிஞ்சித் திணையில் கபிலரால் பாடப்பெற்றது.

பாடல் விளக்கம்: விண்ணைத்தொடும் மலையிலிருந்து குதித்து ஓடும் வெண் முத்தைப் போன்ற தூய அருவி கற்குகைகளில் எதிரொலிக்கும் பல மலர்கள்  மலர்ந்திருக்கும் மலைச் சாரலில் வசிக்கும் அகன்ற தோள்களையுடைய குறவனின் இளம் மகள் நீரைப் போன்ற மென்மையான சாயல் உடையவள், நெருப்பைப் போன்ற என் குணத்தை அணைத்துவிட்டாளே!

ஒரு பெண் தன் மனதை ஈர்த்ததை எவ்வளவு அழகாகத் தோழனிடம் சொல்கிறான் தலைவன்! நீரைப்போன்ற மென்மையான சாயல் கொண்டவள் நெருப்பைப் போன்ற தன்னை  அணைத்ததுபோல ஈர்த்துவிட்டாள்  என்று சொல்கிறான். காதலின் வலிமையைப் பாருங்கள்! காதலுடன் இயற்கைக்காட்சியை  இணைத்து பாடப்பெற்ற அழகிய பாடல். காதல் வந்தால் இயற்கை மேலும் அழகாகத் தோன்றும்தானே?

சொற்பொருள்:  மால் வரை - விண்ணைத்தொடும் மலை, இழிதரும் - பாய்ந்தோடும், தூவெள் அருவி - தூய வெள்ளை அருவி, கல்முகை - மலைக்குகை, ததும்பும் - நிரம்பிய, பன்மலர் - பல மலர்கள், சாரல் - மலைச்சாரல், சிறு குடிக் குறவன் - சிறிய கூட்டத்தின் தலைவன், பெருந்தோள் - அகன்ற தோள்களையுடைய, குறுமகள் - இளம் பெண், நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற மென்மையான குணம், தீ ஓரன்ன - நெருப்பைப் போன்ற, என் உரன் வித்தன்றே - என் தின்மையை அணைத்தே

17 comments:

 1. காதல் வந்தால்... என்றும் காதல் இருந்தால் இயற்கை உட்பட அனைத்தும் அருமை அழகு தான்...

  சொற்பொருள் மற்றும் ரசிக்க வைக்கும் விளக்கத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.தனபாலன்

   Delete
 2. காதலின் சிறப்பையும் காட்டுவளத்தையும் ஒருங்கே பறைசாற்றிய வரிகள். நீரும் நெருப்புமாய் காதலர் குணங்களைக் குறிப்பிட்ட வரிகளின் பகிர்வுக்கும் தெளிவான விளக்கத்துக்கும் நன்றி கிரேஸ்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதமஞ்சரி

   Delete
 3. என்ன ஓர் அழகான சங்கப் பாடல், கவி நயமும் விவரணையும் கொள்ளை அழகு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அழகான பாடல்..உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..கருத்துரைக்கு மிகவும் நன்றி நிரஞ்சன்!

   Delete
 4. குறிஞ்சித்திணையின் கொள்ளை அழகில்
  குளிர்ந்து மனம் குதூகலிக்கின்றதே!...

  அறிந்து நீர்தரும் அமிழ்தான பாடலும்
  அழகான பொருளுடன் அமர்ந்ததென் அகத்திலே!

  மிகவும் ரசித்தேன் தோழி!
  உங்கள் தயவால் நாமும் அறிகிறோம் இப்படியான அருமைகளை!.

  பகிர்தலுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!.

  ReplyDelete
 5. தலைவி தோழியிடம் கூறும் பாடல்கள் தான் அதிகமாகக் கேள்விப்பட்டு இருக்கேன். தலைவன் தோழனிடம் கூறும் அருமையான பாடல். நன்றி கிரேஸ்..

  ReplyDelete
  Replies
  1. நிறையப் பாடல்கள் அப்படி இருக்கின்றன தியானா, ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன்..இப்போதைய வேலைச்சுமையால் கொஞ்சம் தாமதமாகிறது..
   நன்றி!

   Delete
 6. ரசித்தேன் சுவைத்தேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயக்குமார்.

   Delete
 7. நல்ல பாடலுக்கு ஒரு நல்ல விளக்கம்.. நல்ல படத்துடன். நன்றி

  ReplyDelete
 8. நல்லவேளை பொருள், விளக்கம் எல்லாம் சொல்லீட்டீங்க! இல்லைனா என்னைமாரி ஆளுக்கு எல்லாம் கஷ்டம்தான். "காதல்" வலிமையானது, இனிமையானது. அழகானது எல்லாம் சரிதான். அந்தக் காதலின் இனிமை அழகு எல்லாம் நிரந்தரமானதா? காலத்தால் அழியாததா? என்பதே விவாதத்திற்குரியது. :-)

  அருவி நீரைக்காட்டி நீங்க மென்னீர் போன்றவள்னு சொல்றதன்னவோ சரிதான். அருவி நீர் பொதுவாக கால்சியம் மற்றும் மக்னீசியம் உப்புக்கள் கலக்காமல் மென்மையாகத்தான் இருக்கும். கடல்நீரும், கடலுக்கு அருகில் உள்ள கிணற்று நீரும்தான் அந்த உப்புக்கள் கலந்து கடின நீராவதுண்டு.

  அந்த காதலனுக்கு கெமிஸ்ட்ரிகூட தெரிஞ்சு இருக்கு பார்த்தீங்களா? காதல் வந்தால் பாமரனுக்கும் கெமிஸ்ட்ரிகூட வந்துடும் போல!!! னு நான் சொல்லீட்டு ஓடியே போயிடுறேன்! :-)

  ReplyDelete
  Replies
  1. //அந்தக் காதலின் இனிமை அழகு எல்லாம் நிரந்தரமானதா? காலத்தால் அழியாததா // பதில் சொல்வது கடினம்தான் வருண், ஆழமான காதலில் இந்த வரிகள் உண்மை என்று நினைக்கிறேன்..துன்பம் வந்தவுடன் ஆட்டம் காணுவது எல்லாம் காதல் மாதிரியோ :) இன்னும் பிரிதல்,ஏங்குதல் எல்லாம் இருக்கே..
   //கடல்நீரும், கடலுக்கு அருகில் உள்ள கிணற்று நீரும்தான் அந்த உப்புக்கள் கலந்து கடின நீராவதுண்டு.
   அந்த காதலனுக்கு கெமிஸ்ட்ரிகூட தெரிஞ்சு இருக்கு பார்த்தீங்களா? காதல் வந்தால் பாமரனுக்கும் கெமிஸ்ட்ரிகூட வந்துடும் போல!!!// அட, ஆமாம்! இதத்தான் இப்போ எல்லாரும் 'கெமிஸ்ட்ரி', 'கெமிஸ்ட்ரி' என்று சொல்றாங்களோ...
   கருத்துக்கு நன்றி வருண்!

   Delete
 9. எதிர் துருவங்கள் ஈர்த்து கொண்டன !!.. அழகான பாடல் கிரேஸ். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல :). படமும் அருமை .

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...