கனவுக் கணவனே கனவைக் கேளாயோ


கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ
கனவிலும் நனவிலும் (என்) நெஞ்சத்தில் நிறைவாயோ

காலைக்  காபி அருகருகே அருந்திட வேண்டும்
கண்கள் இரு வார்த்தை உதடுகள் இரு வார்த்தை பேசவேண்டும்

அலுவல் முடித்து எந்நேரம் திரும்பினாலும்
காத்திருக்கும் கன்னத்தில் முத்தம் ஒன்று வேண்டும்

நாளும் ஓர் நிமிடமேனும் தோள் சாய வேண்டும்
நிகழ்வுகள் நிம்மதியாய்ப் பகிர்ந்திட வேண்டும்

இயந்திர வாழ்வில் இதயத்தில் நானினிக்க வேண்டும்
அயர்ந்து அலுத்தாலும் 'அன்பே' என்றொரு வார்த்தை வேண்டும்

கோபங்கள் மின்னலாய் மறைந்திட வேண்டும்
நேசங்கள் வானமாய் நிலைத்திட வேண்டும்

குழந்தைகள் இரண்டு இனிதாய் வளர்க்க வேண்டும்
அமளி துமளி அலுக்காமல் பகிர்ந்திட வேண்டும்

முதிர்ந்து நடுங்கும்பொழுதும் கைகோர்க்க வேண்டும்
கண்கள் சுருக்கும் பார்வையிலும் காவியம் பேச வேண்டும்

எனக்கு நீ உனக்கு நான் எந்நிலையிலும் தாங்கிட வேண்டும்
கனவில் சில கலைந்தாலும் கலையாக் காதல் வேண்டும்

கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ
கணக்கில் சேர்க்காமல் நேசிப்பேன் அறிவாயோ 

18 கருத்துகள்:

  1. உதடுகள் இரு வார்த்தை பேசவேண்டும்//ஒன்றியும் வார்த்தையும் பேச முடியுமே

    பதிலளிநீக்கு
  2. வாவ் !!.. என்ன சொல்லி பாராட்டுவதுனு தெரியல. அருமை அருமையான கவிதை கிரேஸ். நீங்க கேட்கும் அனைத்தும் என்றென்றும் தங்கள் அன்பு கணவரிடமிருந்து கிடைத்து கொண்டு இருக்கும் என்பதில் ஐயமில்லை :)

    பதிலளிநீக்கு
  3. நியாயமான ஆசையே
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வேண்டும் எல்லாம் நடக்கட்டும்...
    கனவு நிஜமாகட்டும்...
    நிஜம் தானோ...?
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. ஒரு பெண்ணின் அனைத்து ஆசைகளை உள்ளடக்கி விட்டர்கள் அக்கா மிகவும் அருமை ...

    பதிலளிநீக்கு
  6. அன்புத்தோழியே...
    உன்னோடு நான் தனியே பேசவேண்டும் என்
    எண்ணத்தை எப்படித் திருடினாய் கூறவேண்டும்...:).

    இதமான இல்லறத்தின் உயர்வும் இதுவே
    இயம்பினாய் உண்மைஇதை உணர்ந்து நீயே

    அழகாக கவிபாடி அமைத்தாயே உறவை
    அனைவருக்கும் கிடைத்தாலோ அதுவே மேன்மை!...

    உளம்நிறை உணர்வுக்கவிதை. வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  7. ''..கனவுக் கணவனே என் கனவைக் கேளாயோ..''' http://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/
    இப்படிப் பல இங்கும் காணலாம்.
    நேரமிருப்பின் செல்லலாம்.
    எனக்கக் கருத்திடும் பிரச்சனை எனக்குப் புரியவில்லை சகோதரி. ஸ்ரவாணிக்கும் இதே பிரச்சனை அவர் மின்னஞ்சலில் கருத்திட அதை நான் வலையில் இடுகிறேன். நான் தொழில் நுட்பத்தில் பரம ஏழை.
    வேதா. இலங்காதிலகம். (There are so many followers I have...)

    பதிலளிநீக்கு
  8. @கவியாழி: உண்மைதான்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நிஜமாகட்டும் என்றுதான் கவியாக்கினேன்.. :) உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

    பதிலளிநீக்கு
  10. @ஹிஷாலீ: மகிழ்ச்சி, மிக்க நன்றி அன்புத் தங்கையே!

    பதிலளிநீக்கு
  11. @இளமதி: எண்ணங்கள் ஒன்றாய் இருப்பது மகிழ்ச்சி தோழி, உங்களோடு பேசுவதும் மகிழ்ச்சிதான். :)
    அனைவருக்கும் கிடைத்தால் மேன்மை என்று உண்மை உரைத்தீர்கள். பாராட்டுக்கு மிகவும் நன்றி இளமதி!

    பதிலளிநீக்கு
  12. நன்றி இலங்காதிலகம் அவர்களே..மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. காலை முதல் இரவு வரை... இளமை முதல் முதுமை வரை... இனிக்கும் காதலை இரக்கும் காதல் மனைவியின் எதிர்பார்ப்புகள் யதார்த்தம். கனவுக்காதலன் அறிவோம். கனவுக்கணவன் புதியவன். கனவுக்கணவன் நனவுக்கணவனாய் கண்மணியின் விருப்பங்களை நிறைவேற்றுவானாக!

    மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  14. @கீதமஞ்சரி: ஆழமான கருத்துரைக்கு மிக மிக நன்றி! கனவுக்காதலன் கைபிடித்துவிட்டால் கனவுக்கணவன் தானே :) உங்களின் அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தலை வணங்கி மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. @கரந்தை ஜெயக்குமார்: வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...