பூத்த கரும்பில் காய்த்த நெல்லில்

ஐங்குறுநூறு 4,  பாடியவர் ஓரம்போகியார்
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.

"வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பில் காய்த்த நெல்லில்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என வேட்டேமே"


எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி! பகைவர் புல்லைத் தின்னட்டும். பார்ப்பனர்  வேதம் ஓதட்டும்  என  விரும்புகிறாள் தாய்.  கரும்பு பூத்தும் நெல் விளைந்தும் செழித்த ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு பொதுச் சொத்தாக ஆக வேண்டாம் என்று விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  என்று தலைவனை வாழ்த்துகிறாள் தோழி.  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  தலைவியை விட்டுப் பரத்தையிடம் தலைவன் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறாள்.  நெல், கரும்பு ஆகியவை கருப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி -  வாழ்க ஆதன்  வாழ்க அவினி,  பகைவர் புல் ஆர்க - பகைவர் புல் தின்னட்டும்,  பார்ப்பார் ஓதுக - பார்ப்பனர்  வேதம் ஓதட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே – நான்,  பூத்த கரும்பில் - பூத்திருக்கும் கரும்பு,  காய்த்த நெல்லில் - விளைந்த நெல்லில்,  கழனி ஊரன் மார்பு - கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு,  பழனம் ஆகற்க -பொதுவாக ஆக வேண்டாம்,  என வேட்டேமே - என விரும்புகிறேன்

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது.  நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன.  அதில் நான்காவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. 

10 கருத்துகள்:

  1. சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் உங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. இன்னும் சற்று நீளமாகவே விளக்கவுரை தந்தால் மேலும் பலருக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.செல்லப்பா அவர்களே! உங்கள் கருத்தை மனதில் வைத்து முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  2. நன்றிகள் பல கிரேஸ் :). உங்கள் தயவினால் நானும் ஐங்குறுநூறு படித்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் :)

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    அப்படியே ஒரு கதை போலேவே தொடரவும் செய்யலாம்... (திருக்குறள் அதிகாரங்கள் போல)

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்.
      //திருக்குறள் அதிகாரங்கள் போல// - எனக்குப் புரியவில்லை , தயவுசெய்து விளக்குகிறீர்களா? என் அறியாமைக்கு மன்னித்துக் கொள்ளவும் :)

      நீக்கு
  4. அருமை தோழி.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. இலக்கியம் படிக்க வேண்டிய ஆசையையும் அவசரப் படுத்தி விட்டீர்கள்.நல்ல பதிவு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. @கவியாழி கண்ணதாசன்: மிக்க மகிழ்ச்சி..நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...