விளைக வயலே வருக இரவலர்

ஐங்குறுநூறு 2,  பாடியவர் ஓரம்போகியார் 
தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல்.
"வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே யாமே
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க என வேட்டேமே"

எளிய உரை:  வாழ்க ஆதன்!  வாழ்க அவினி!  வயல் மிகுந்த விளைச்சல் தரட்டும்இரவலர் வந்து பலன் பெறட்டும் என  விரும்புகிறாள் தாய்.  பல நீல வண்ண இதழ்கள் கொண்டு நெய்தல் மலர் போல இருக்கும் குவளை மலர்கள் மலரும் குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடன் தலைவியின் நட்பு வழி வழியாகச்  சிறந்து இருக்கட்டும் என விரும்புகிறேன் நான்.

விளக்கம்:  சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்  ஆதன் என்றும் அவினி என்றும் பெயர் பெற்றிருந்தனர்.  மன்னனை வாழ்த்திப் பாடல் துவங்குகிறது.  தோழி இங்குத் தாய் என்று குறிப்பிடுவது தலைவியை.  நீல மலர்கள் கருப்பொருளாகும். வயல் உரிப்பொருளாகும்.

சொற்பொருள்:   வாழி ஆதன் வாழி அவினி -  வாழ்க ஆதன் வாழ்க அவினி விளைக வயலே - வயல்கள் நல்ல விளைச்சல் தரட்டும்வருக இரவலர் - பிச்சை கேட்பவர் வந்து பயன் பெறட்டும்,  என வேட்டோளே யாயே - என விரும்புகிறாள் தாய்,  யாமே நானும்,  பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் - பல நீல இதழ்களோடு நெய்தல் மலர்களைப் போன்ற,  தண் துறை ஊரன் கேண்மை - குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய  நட்பு,  வழி வழிச் சிறக்க என வேட்டேமே - வழி வழியாகச் சிறக்கட்டும் என்று விரும்புகிறேன்.

ஐங்குறுநூறு சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றிற்கும் 100 பாடல்கள் உள்ளது. நூறு பாடல்களும் பத்து பத்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு திணைக்குரிய 100 பாடல்களையும் ஒரே ஆசிரியரேப்  பாடி உள்ளார்.  அதில் மருதத் திணைக்குரியப் பாடல்களை ஓரம்போகியார் என்ற புலவர் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்கள் 'வேட்கைப் பத்து' என்று பெயர் கொண்டுள்ளன. அதில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளப் பாடலே மேலே குறிப்பிடப்பட்டிருப்பது. 


திணைகளில் கருப்பொருள் பற்றியும் உரிப்பொருள் பற்றியும் விளக்கி ஒரு பதிவு இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
சங்க இலக்கியப் பாடல்களை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய இந்த முயற்சி பலன் கொடுக்க உங்கள் கருத்துகள் உதவும்.  மேலும் ஏதாவது விவரம் சேர்க்க வேண்டுமா என்றும் சொன்னீர்கள் என்றால் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.  நன்றி!

17 கருத்துகள்:

  1. அழகான விளக்கமும், பாடலும் கிரேஸ். தங்கள் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள் :)

    //திணைகளில் கருப்பொருள் பற்றியும் உரிப்பொருள் பற்றியும் விளக்கி ஒரு பதிவு இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்// - காத்து கொண்டு இருக்கிறேன் :)


    பதிலளிநீக்கு

  2. இந்த விஜய வருஷம் முதற்கொண்டே
    ஐங்குறு நூறு காப்பியத்தில் இருக்கும் அத்தனை
    பாடல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக்
    தினமும் எளிய பொருளுடன் இலக்கணக்குறிப்புடனும்
    தருவின் அது தமிழன்ர்களுக்குத் தாங்கள்
    தரும் பெரும் ஊற்றாயமையும்.

    இதற்கென ஒரு தனிப்பதிவும் தொடங்கலாம்.

    தாங்கள் செய்யவிருக்கும் தமிழ்த்தொண்டுக்கு
    தலையாய நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி சுப்புத்தாத்தா அவர்களே! தனிப் பதிவு வைத்தால் சரியாக கவனித்துச் செய்ய முடியுமா என்று ஒரு சந்தேகம்..ஏனென்றால் ஆங்கிலத்தில் ஒன்று வைத்துக் கொண்டு, அதை விட இங்கேயே நிறைய எழுதுகிறேன்..மேலும் இந்த வலைப்பூவிற்கு இப்பொழுதான் வாசகர் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..அதனால் ஒரு குழப்பம்...உங்கள் ஆலோசனையை மனதில் வைத்து முயற்சிக்கிறேன் சுப்பு தாத்தா..நன்றி பல!

      நீக்கு
  3. அருமை... கண்டிப்பாக தொடருங்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமை தொடருங்கள் புதுதகவலையும் தாருங்கள் உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே!

      நீக்கு
  5. விளக்கம் அருமை பாராட்டுக்கள் சகோதரி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி விமல் அவர்களே!

      நீக்கு
  6. பாடலும் அதற்கான தெளிவான விளக்கமும் மிக அருமை தோழி. வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  7. //திணைகளில் கருப்பொருள் பற்றியும் உரிப்பொருள் பற்றியும் விளக்கி ஒரு பதிவு இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
    சங்க இலக்கியப் பாடல்களை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். //

    தோழி... நான் உங்களிடம் கேட்கவிழைந்ததை நீங்ககளாகவே இங்கு கூறியிருப்பது மிகுந்த மகிழ்வாயுள்ளது. காத்திருக்கின்றேன் நானும். தாருங்கள்...

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் கொடுக்கப் பார்க்கிறேன் தோழி!
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி பல!

      நீக்கு
  8. மிக அருமை சகோதரி. மிக்க நன்றி. பயணம் தொரட்டும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...