சம்மட்டி அடி

"ஏ, முல்ல! என்ன பண்ற? ரேவதிக்கு காபி கொண்டு வா" என்று குரல் கொடுத்தாள் முல்லையின் மாமியார். சமையல் செய்துகொண்டிருந்த முல்லை காபி கலந்து எடுத்துச் சென்று நாத்தனார் ரேவதியிடம் கொடுத்துவிட்டு அட்டிலுக்கு விரைவாகத் திரும்பினாள். சமையலை முடித்துத் தானும் கிளம்பி அலுவலகத்துக்கு ஓடினாள். அதற்குள் அவள் மாமியார் நூறு வேலை ஏவியிருந்தாள். அவளுக்கு முல்லை மேல் அன்போ மதிப்போ எதுவும் இல்லை. தான் மாமியார் என்பதால்  முழு அதிகாரம் இருப்பதாகவே நம்பினாள். தன மகள் ரேவதியை செல்லமாகப் பார்த்த அதே கண்கள் மருமகள் முல்லையை அதிகாரமாகவே பார்த்தது.

அலுவலகம் செல்லும் வழியில் பழைய நினைவுகள் முல்லையின் கண்களில் குளமாய்  நிறைந்தன. முல்லை பெற்றோருக்கு ஒரே பெண். செல்லமாக வளர்ந்து உயர் பட்டப்படிப்பை முடித்தபின் ஒரு அலுவலகத்தில் மேலாளராகப் பணியில் அமர்ந்தாள். அவள் பெற்றோர் விமரிசையாகத் திருமணமும் செய்து வைத்தனர். கணவன் செழியன் நல்லவன், ஆனால் அவன் தாயாரிடம் அவனால் புரியவைக்க முடியவில்லை. "என்ன இருந்தாலும்   என் அம்மா, பொறுத்துக் கொள்" என்று சொல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவன் உதவலாம் என்று நினைத்தாலும் தாயார் விடுவதில்லை. ஊரைக் கூட்டும் அளவுக்கு கூச்சல் போடுவாள்.

இப்படியாகக் கழிந்த நாட்களில் முல்லைக்கு நிறைய வருத்தம் இருந்தது. சண்டை போடத் தெரியாது, மனமும் இல்லை. கணவனிடம் குறைப்பட்டாலும் ஒன்றும் மாறுவதில்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்க்கையை சில நேரம் மகிழ்ச்சியாக சில நேரம் வருத்தமாக என்று ஓட்டிக் கொண்டிருந்தாள். அலுவலம் வந்ததும் அவள் எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

இப்படி சில திங்கள் சென்றபின் ஒரு நாள் அவள் மாமியார் மகனிடம், "செழியா, ரேவதிக்கு வரம் பாக்கனும்டா, படிப்பை மு டித்துவிட்டாளே...ஆகவேண்டியதைப்  பாருடா" என்றாள். செழியன் அவளிடம், "அம்மா, எனக்கும் ஆசைதான்..ஆனால் அவள் இப்படியே செல்லமாக இருந்துவிட்டுப் போகட்டும். மாமியார் வீடு சென்று அவள் நாளை துன்பப்பட்டால் என்னால் தாங்கமுடியாது அம்மா" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் குளியலறை சென்று விட்டான். முல்லையின் மாமியார் சம்மட்டியால் அடிவாங்கியதைப் போல அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலையில் அட்டிலுக்குச் சென்ற முல்லைக்கு கண்களையும் காதுகளையும் நம்ப முடியவில்லை. "எழுந்துட்டியா, இந்தா காபி " என்று அவள் மாமியார் காப்பியை நீட்டிக் கொண்டிருந்தாள். ஒருபுறம் அவள் நறுக்கிக்கொண்டிருந்த வெண்டக்காய் முத்து முத்தாய்ச் சிரித்தது. காபியை வாங்கிய முல்லையின் கரங்களில் சூடு தெரிந்ததால் இது கனவில்லை என்று உறுதியானது. சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த செழியன், "முல்ல, நீ போய் குளிச்சுட்டு கிளம்பு..மீதிய நான் பாத்துகிறேன்" என்ற தாயின் குரலைக் கேட்டு மனதில் சிரித்துக் கொண்டான்.

9 கருத்துகள்:

  1. இந்த செழியன் போல் நிறைய பேர்கள் இருந்தால்....

    அடி சரியான சம்மட்டி அடி தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திரு.திண்டுக்கல் தனபாலன்.
      தொடர் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி, என்னை ஊக்கப்படுத்துவதாய் இருக்கிறது. நன்றி!

      நீக்கு
  2. இவரைப்போல எல்லா மகன்களும் அம்மாவுக்கு புரியவைத்தால் தனிக்குடித்தனம் போகாமல் மாமியார்,மருமகள் பிரச்னை இல்லாமல் கூட்டு குடும்பம் தழைத்தோங்கும்.தொடருங்கள் வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அனைத்து அம்மாக்களும் புரிந்துகொள்வதுடன் மாறவும் வேண்டுமே...
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.கவியாழி கண்ணதாசன்!

      நீக்கு
  3. உண்மையை உணர்த்த இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மென்ட் தான் தேவை படுகிறது.... காலத்திற்கு ஏற்ற கதை.. நன்று !!

    பதிலளிநீக்கு
  4. க‌ல‌க்குற‌ கிரேஸ், மிக‌வும் அருமையான‌ க‌தை.

    மீண்டும் குழ‌ந்தைக‌ள் க‌தைக‌ள் தொட‌ர‌வும். தின‌மும் இர‌வில் க‌தை யோசிக்க‌ வேண்டியுள்ள‌து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா!
      முயற்சி செய்கிறேன், எது எழுத வேண்டும் என்று யோசிக்கிறேனோ, அது தடைபட்டுப்போகிறது :) ஊக்கத்திற்கு நன்றி!

      நீக்கு
  5. ரொம்ப நல்லா இருக்குங்க இந்த கதை ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...