முகம் புதைத்தாள் அவன் ஆகம்!

பாண்டில் ஏற்றி சின்மலர் சூடி 
இன்னே வருவாரா என் தலைவர் என 
மேன் மாடத்தில் கரங்கள் பனிப்ப 
பூந்துகில் போர்த்திய தலைவியின் உள்ளம் 
மகிழ் சிறந்து மலருமாறு 
பெரும்பெயல் பேணாமல் பாய்பரி ஏறி 
அழகியக் கோயில் சேர்ந்த தலைவன் 
புதுவது இயன்ற பொலந்தொடி அணிவித்து 
அன்பு மிகத் தழுவத் தன் முகம் 
புதைத்தாள் தலைவி, அவன் ஆகம்!


நெடுநல்வாடை வாசித்துக் கற்றுக் கொண்ட தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதிய கவிதை இது.

விளக்கம்:  விளக்கு ஏற்றி சில மலர் சூடி. இப்பொழுதே தலைவன் வருவாரா என்று எதிர்பார்த்து மேன்மாடத்தில் நின்று, கரங்கள் குளிர்வதால் பூக்கள் வரைந்த ஆடையினைப் போர்த்திக்கொள்கிறாள். அவளின் உள்ளம் மகிழுமாறு, பெரு மழையினையும் பொருட்படுத்தாமல் விரைவாகச் செல்லக்கூடிய குதிரையில் ஏறி அரண்மனை வந்த தலைவன், புதிதாய்ச் செய்த பொன்னாலான வளையலை அணிவித்து அன்புடன் தழுவ, அவன் மார்பில் முகம் புதைத்தாள் தலைவி.

சில சொற்களின் பொருள் கீழே..

பாண்டில்- விளக்கு 
பனிப்ப - குளிர 
மகிழ் சிறந்து - மகிழ்ச்சி நிறைந்து 
பெரும்பெயல் - பெரும் மழை 
பேணாமல் - பொருட்படுத்தாமல் 
பாய்பரி  - விரைந்து செல்லும் குதிரை 
கோயில் - அரண்மனை 
புதுவது இயன்ற - புதிதாகச் செய்த 
பொலந்தொடி -  பொன்னால் ஆன வளையல்  
ஆகம் - மார்பு 

10 கருத்துகள்:

  1. தூய தமிழ் சொற்கள் கொண்டு எழுதிய கவிதை அருமை.பல புதிய சொற்களும் அவற்றின் பொருளும் அறிந்து கொண்டேன். நன்றி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.தமிழ்முகில்.

      கவிதை பிடித்தமாய் இருப்பதற்கும் சொற்கள் பயன்பட்டதற்கும் மகிழ்ச்சி. மிக்க நன்றி!

      நீக்கு
  2. அருமை கிரேஸ். என்ன ஒரு புலமை. சூப்பர். கலக்குரிங்க :-). நிறைய வார்த்தை தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலமையெல்லாம் இல்ல ஸ்ரீனி..நீங்க வேற..ஏதோ படிச்சத எழுத முயற்சி பண்றேன்...அழகான தமிழ்ச் சொற்களை அனைவருக்கும் சொல்ல ஆசை..அவ்ளோதான்.
      மிக்க நன்றி ஸ்ரீனி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      நீக்கு
  4. சகோ கிரேஸ்!

    நெஞ்சை அடைக்குது உங்கள் திறமை. அருமை!
    விக்கித்து வாய்மொழி மறந்து வாழ்த்துக்களை மட்டும் இங்குதிர்த்துச் செல்கின்றேன்.

    வாழ்க! வாழிய நின் திறமை! வாழிய வாழியவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ இளமதி, மிகவும் நன்றி! உங்கள் கவிதைகளும் அழகோ அழகோ..நீங்கள் இப்படி பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே! வாழ்த்துக்கு நன்றி!

      நீக்கு
  5. அருமையான‌ க‌விதை கிரேஸ்... ப‌டித்த‌ சொற்க‌ளை உப‌யோகப்ப‌டுத்தும் உன் திற‌மை விய‌க்க‌ வைக்க‌க்கிற‌து.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...