Thursday, January 31, 2013

எண் எழுத்து இகழேல்

பதுமன் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிய வாளியில் முகர்ந்த தண்ணீரை அருகிருந்த குடங்களில்  ஊற்றிக் கொண்டிருந்தான். குடத்திற்கு இரண்டு ரூபாய் என்று ஊர் மக்கள் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு ஊதியமாய் அவனுக்குக் கொடுப்பார்கள். இப்படி கடினமாகத் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது அவனுக்கு. பெற்றோர் படிக்கச் சொன்னபொழுது கேட்காமல் விளையாடிக் கொண்டே இருந்துவிட்டான். இப்பொழுது இந்த மாதிரி சிறு சிறு கூலி வேலைகள் செய்து வாழ்க்கை ஒட்டிக் கொண்டிருந்தான்.

பதுமனை நம்பி ஒரு மனைவி, ஒரு மகன். மகன் இளவரசு இரண்டாவது படித்துக் கொண்டிருந்தான். அன்று அவன் தண்ணீர் எடுக்கச் சென்ற பொழுது இளவரசுவும் பள்ளி விடுமுறை என்பதால் உடன் சென்றான். தந்தை நீர் நிறைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ஒரு ஆள் 'இந்தா, 11 ரூபாய்" என்று கொடுத்ததைக் கேட்டான். உடனே இளவரசு, "குடத்திற்கு இரண்டு ரூபாயாக ஏழு குடத்திற்கு மொத்தம் 14 ரூபாய், ஐயா" என்று சொன்னான். அந்த ஆளும் சினத்துடன் இன்னும் மூன்று ரூபாய் கொடுத்தான். இது போலவே அன்று பலரிடம் நிகழ்ந்ததால் திகைத்தான் பதுமன். தனக்கு எண்ணும் கணக்கும் தெரியாததால் மக்கள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்து வருந்தினான்.

மகனைக் கட்டிக் கொண்ட பதுமன் "எனக்கும் உனக்குத் தெரிந்த  எழுத்தையும் எண்ணையும் சொல்லிக் கொடுப்பா" என்று  சொன்னான். இதற்கு தான் "எண் எழுத்து இகழேல்" என்று அவ்வை ஆத்திச்சூடியில் சொன்னார் போலும்.

அதனால் குழந்தைகளே, எண்ணையும் எழுத்தையும் தேவையில்லை என்று இகழாமல் நன்றாகப் படியுங்கள், வாழ்வில் முன்னேறுங்கள்!


Wednesday, January 30, 2013

திருமலை நாயக்கர் இன்று மஹாலுக்கு வந்தால்...

திருமலை நாயக்கர் இன்று வந்து மகாலைப் பார்க்க நேர்ந்தால் என்று மனதில் தோன்றிய கற்பனை உங்களுக்காக ...

நான்கு நூறு ஆண்டுகள் ஆகப்போகிறதே  அரண்மனையைக் கட்டி, பார்த்து வரலாம் என்று வந்தேன்..பாதிக்கு மேல் காணவில்லை. இருப்பதைப் பார்த்தால் மனது வருந்துகிறது..அழகாகத்  தூண்கள் அமைத்துக் கட்டினேன்..இப்பொழுது தூணுக்கு ஒரு 'காதல்' ஜோடி !
தூண்கள், சுவர் எல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறார்கள்..இதயமும் அதைத் துளைக்கும் அம்பும் பெயர்களும் - எங்கு பார்த்தாலும்! எதற்கு வரைந்தார்களோ, ஆனால் என் இதயத்தை பல அம்புகள் துளைத்தது போல இருக்கிறது!


ஆஹா! எவ்வளவு புறாக்கள்! ஆனால் அதன் கழிவுகளைச்  சுத்தம் செய்தால் நன்றாய் இருக்குமோ! அங்கு இருவர் தூணில் என்ன சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்? ஒரு  பெண் அவர்களிடம் இப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே! ஆனாலும் நிறுத்தாமல் கிறுக்குகிறார்கள். இவர்கள் சரித்திரம் பொறிப்பதர்க்குத்தான் தூண்கள் வைத்தேன் என்று நினைக்கிறார்கள் போலும். வைத்தேன் என்று எதற்கு நினைக்கிறார்கள்..தூண்கள் அவர்களுக்காய் இருக்கிறது, அவ்வளவுதான்! புரியாதவர்கள்..கல்வெட்டுகளே காணாமல், மதிக்கப்படாமல் போகின்றன..
அங்கு என்ன வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்? ஓ, சாப்பாடு..உல்லாசச் சாப்பாடு. அலுவலகத்தில் சொல்லப்போகிறேன் என்று ஒரு பெண் செல்கிறாளே..பார்ப்போம். அட, அங்கே ஒருவரையும் காணோமே?..

வருங்கால சந்ததி சரித்திரம் அறியும், போற்றும் என்று நினைத்தேனே..என் சக அரசர்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்..சரி இருப்பது வரை மகிழ்ச்சி! கிளம்புகிறேன்..யாராவது சம்பந்தப்பட்டவர்களிடம்  சொல்லுங்களேன்..கொஞ்சம் பராமரித்தால் சரித்திரம் விளங்கும் என்று...

Tuesday, January 29, 2013

ஐயமிட்டு உண்

அன்று மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. காலையில் உணவு முடித்தபின் அம்மா, அப்பா, அமலி மூவரும் கிளம்பினர். அமலிக்கு எங்கு போகப் போகிறோம் என்று தெரிந்தே இருந்தது. நேராக ஒரு மளிகை கடைக்குச் செல்வர். அங்கு அரிசி மூடையும் பருப்பும் வாங்கிக்கொண்டு ஒரு இனிப்புக் கடையில் சில இனிப்புகளும் வாங்கிக்கொண்டு அங்கிருந்த ஒரு ஆசிரமத்திற்குச் செல்வார்கள். யாருமற்ற குழந்தைகள் அங்கு இருந்தனர். அவர்களைப் பார்த்து கொள்ள என்று சிலர் இருந்தனர். அங்கு இருந்தவர்கள் நிறைய பேர் அவளுக்கு பரிச்சயம். குழந்தைகளுக்குஅமலி கையால் இனிப்பு எடுத்துக் கொடுப்பதும் வழக்கம். பிறகு அந்த குழந்தைகளுடன் விளையாடிவிட்டு மதிய உணவிற்கு வீடு திரும்புவர்.

அமலிக்கு இப்பொழுது ஆறு வயது. அவளுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இந்த வழக்கம் இருக்கிறது. இன்று அவளுக்கு நிறைய கேள்விகள் மனதில் எழுந்தது. திரும்பி வீட்டிற்குச் செல்லும்பொழுது அம்மாவிடம் கேட்டாள், "ஏன் அம்மா எப்பயும் இங்க அரிசியும் மிட்டாயும் வாங்கிட்டு வரோம்?" என்று கேட்டாள்.

அதற்கு அம்மா, "இந்த குழந்தைகளுக்கு யாரும் இல்லை. இங்கு தான் வளர்கிறார்கள். அவர்களை பார்த்து கொள்ள போதுமான பணம் ஆசிரமத்தில் இல்லை. நாமும் நம்மாலான உதவியை இல்லாதவர்களுக்குச் செய்ய வேண்டும். 'ஐயமிட்டு உண்' என்று ஆத்திச்சூடியில் படித்தாய் அல்லவா? தர்மம் செய்து விட்டு உணவு உண்ண வேண்டும் என்று அவ்வைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். ஒவ்வொரு நேரமும் இங்கு வந்து உணவு கொடுப்பது எளிதான காரியம் இல்லை என்பதால் அரிசியும் பருப்பும் மாதம் ஒரு முறை வாங்கிக் கொடுக்கிறோம். நானும் அப்பாவும் நீ பிறந்ததிலிருந்து இப்படிச் செய்கிறோம். நம்மைப் போல பலர் பலவிதமான உதவிகள் செய்வதால் ஆசிரமத்திற்கு குழந்தைகளைப் பராமரிக்க உதவியாக இருக்கிறது." என்று சொன்னாள்.

அடுத்த முறை எப்பொழுது செல்வோம் என்று அமலி ஆவலாக எதிர்பார்க்க  ஆரம்பித்தாள். அப்பா வாங்கிக்கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை ஆசிரமத்திற்குப் போகும்பொழுது எடுத்துச் செல்லலாம் என்று அம்மாவிடம் கொடுத்தாள். அம்மா பெருமிதத்துடன் அமலியை அணைத்துக்கொண்டாள்.

Saturday, January 26, 2013

திருக்குறள் கூறும் உணவுக் கட்டுப்பாடு

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு 
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து பின் உண்ணும்உணவை அது செரிக்கும் அளவு அறிந்து உண்டால் உடம்பை நெடுங்காலம் போற்றி வாழலாம்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் 
நோயள வின்றிப் படும்.
ஒருவன் தன்  பசி அளவினை அறியாமல் அதிகம் உண்டால் நோயும் அளவின்றி வரும்.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து.
உண்ட உணவு செரித்ததை அறிந்து உடம்புக்கு மாறுபடாத உணவுகளைத் தெளிவாக அறிந்து நன்றாக பசித்த பின் உண்ண  வேண்டும்.

திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உண்ட உணவு செரித்ததற்கு பின்னால் மீண்டும் உண்ண வேண்டும். உடம்புக்கு மாறுபடாத உணவைத் தெரிந்து அதுவும் செரிக்கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் உடம்பை நீண்ட காலம் போற்றி வாழலாம்.
இதை அறியாததாலா இல்லை மனதில் இருத்தாதலாலா இன்று பல நோய்கள், மருந்துகள் என்று வாழ்க்கை.
பிறகு டயட், டயடீசியன், நுட்ரிசநிஸ்ட், எடை குறைப்பு  என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கும் வாழ்க்கைச் செல்வத்தை அறிந்து பயன்படுத்தினாலே ஆரோக்கியமாய் வாழலாம்.

நம் முன்னோர் அறிந்த பலவற்றை ஆராய்ச்சி செய்து இன்று கற்றுக்கொண்டிருக்கின்றனர் பிறர்.
ஜேம்ஸ் கோல்குஹன் (James Colquhoun) இயக்கிய 'Hungry for change' என்ற ஆவணப்படம் பார்த்தேன். டயட், எடை குறைப்பு என்று வியாபாரமாக்கி மக்களை மீண்டும் நீண்டும் தங்கள் பொருட்களை வாங்கச் செய்யும் வியாபாரத் தந்திரம் பற்றி அழகாகச் சொல்லியுள்ள படம். எளிதாக இருப்பதாலும், எளிதாக கிடைப்பதாலும், கவர்ச்சியான பாக்கெட்டில் வருவதாலும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத பொருட்களை வாங்கி உண்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் படம். இப்படமோ இன்றைய ஆராய்ச்சிகளோ எதுவும் தேவை இல்லை. நமக்கே தெரியுமே. நம் தமிழ்ச் செல்வம் இருக்கிறதே! அதைக் கடைபிடித்தால் என்ன என்று ஆதங்கமாக உள்ளது.

புதுமை நன்றுதான், ஆனால் திருக்குறளும் இன்னும் பல நம் வாழ்வியல் நூல்களும் பழமையானாலும் என்றும் புதியதாய் நன்மை பல கற்றுக்கொடுப்பதாய் உள்ளது. உணர்வோம்! கற்போம்! கற்றதை செயல்படுத்துவோம்! இனிதாய் வாழ்வோம்!

Thursday, January 24, 2013

உன்னைப் பார்த்த வினாடி

நான் பார்த்த படபடக்கும் பட்டாம்பூச்சி
அழகிய கோவைப் பழத்தில் அமரப் போகின்றதென நினைத்தேன்
அவ்விதம் நடக்கவில்லை என்றபோதுதான்  புரிந்தது
நான் பார்த்தது பட்டாம்பூச்சி அல்ல, உன் கண்கள்
கோவைப் பழமும் அல்ல, உன் உதடுகள் என்று!

Wednesday, January 23, 2013

அவசர வேகம் தேவையா?

சில நாள் பயணமாக தாய்நாடு சென்று திரும்பியிருக்கிறேன். பல மாற்றங்கள் பார்த்தாலும் என் மனதில் பிசையும் ஒரு விஷயம் உண்டு. எங்கு பார்த்தாலும் அவசரம். சாலையில் பெருகியிருக்கும் வாகனங்கள். ஆனால் நிதானம் இல்லை. அனைவருக்கும் முதலில் செல்ல வேண்டும். மற்ற அனைவரும் வெட்டியாக செல்வதுபோலவும் தனக்கே முக்கியமான வேலை இருப்பது போலவும் ஒரு அவசரம். நூலிழையில் அடிபடாமலோ உயிர்தப்பியோ சென்றவர்கள் பலர். முன் சென்ற வண்டியில் லேசாக இடித்து நிலை தடுமாறினார் மிதிவண்டியில் சென்ற ஒரு பெரியவர். என் இதயம் பட படவென்று தாளம் போட்டது. நல்ல வேலையாக அவரும் சமாளித்துச் சென்று விட்டார். இடித்த வண்டியும் எதுவும் நடக்காதது போல் சென்று விட்டது. இப்படி பல சம்பவங்கள்!
சிகப்பு சிக்னலில் குறுக்கே வரும் வண்டிகள் அருகில் இல்லை என்று பார்த்து விட்டு ஒரு கும்பலே வண்டி ஓட்டிச் செல்கிறது. கார், ஆட்டோ, இரண்டு சக்கர வாகனங்கள் என்று அனைவரும்! எதற்கு இந்த அவசரம் என்று எனக்குப் புரியவில்லை. சாலை விதிமுறைகளும் யாருக்காகவோ என்று இருக்கிறது. மக்கள் தொகை அதிகம் என்பதால் உயிர் மலிவாகி விட்டதா என்று வருத்தமாக இருக்கிறது. அதிகாரிகள் கவனிக்க வேண்டுமா இல்லை மக்கள் உணர வேண்டுமா? தெரியவில்லை..கடவுளே! என் நாட்டையும் மக்களையும் காப்பாற்று! 

Monday, January 21, 2013

தேக்கம்

சில பதிவுகள் வரைவுகளாய்  உறங்க
உருண்டோடியது ஒரு திங்களுக்கும் மேலே
மூன்று வாரங்கள் தாய் மண்ணில் உறவாடிவிட்டு
திரும்பி வந்தாலும் விலகாத நினைவுகள்
சில பல ஏக்கங்கள் சில பல குழப்பங்கள்
வரைவுகளை தட்டி எழுப்பவா?
குழப்பங்களை உறங்கச் சொல்லவா?
தெரியவில்லை, ஆனால் என் தமிழே!
என் விரல்களைத் தழுவ நீ வந்தேயாக வேண்டும்!
தேக்கத்தைச் சீராக ஓடச் செய்ய வேண்டும்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...