Wednesday, November 21, 2012

தொலை தொடர்பும் உறவுகளின் தொடர்பும்

தொலை தொடர்பு சாதனங்கள் மிகுந்து விஞ்ஞான வளர்ச்சி ஓங்கி இருந்தாலும் உறவுகளின் தொடர்பு குறைந்து விட்டது என்ற தவிர்க்க முடியாத உண்மை அவ்வப்பொழுது மனதை வருத்தும்.

நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
நிலவு ஒளியில் கூட்டாஞ்சோறு உண்டு  
நான்கு தலைகள் அம்மா மடியில் இருத்தி 
கைகளைப் பூ போல் சேர்த்து நிலாப் பாடல்கள் பாடி
அதனைக் கண்டு சிரித்த விண்மீன்களை எண்ணிக் 
கூடி இன்புற்று இருந்த காலம் கனவென 
கணினியில் தொலைந்தது கண்டு நோம் என் நெஞ்சே!
தொலை தொடர்பு மிகுந்து அருகே தொடர்பு அறுந்து 
வாழும் வாழ்க்கை கண்டு நோம் என் நெஞ்சே!

இதற்கு என்ன வழி? எங்கே கோடு போடுவது? எப்படிப்  போடுவது? என்ற கேள்விகளுக்கு எளிதாக விடை கிடைப்பதில்லை. மேலே உள்ள பாடலை வரைவாக வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில்  நான் பின்பற்றும் ஒரு வலைப்பதிவில் அந்த நண்பர் "தொலைதொடர்பு அடர்த்தி"  என்ற தலைப்பில் ஒரு இடுகை பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்தவுடன் எனக்கு ஒரு முல்லைப்பாட்டின் பாடல் நினைவு வருகிறது. அதையும் சேர்த்து இப்பதிவை வெளியிடலாம் என்று முடிவு செய்தேன்.

"சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
 உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் 
நடுங்குசுவல் அசைத்த கையள், "கைய 
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, 
இன்னே வருகுவர், தாயர்" என்போள் 
நன்னர் நன்மொழி கேட்டனம்; அதனால் 
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் 
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து 
வருதல், தலைவர், வாய்வது; நீநின் 
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என 
காட்டவும் காட்டவும் காணாள் , கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப "
--முல்லைப்பாட்டு அடிகள் 12 -23 
(சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு, இதில் மொத்தம் 103 அடிகள் உள்ளன)

தலைவனை எதிர்பார்த்து துயர் கொண்டிருந்த தலைவியைத் தேற்ற தோழி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தாயைக் காணாமல் துயர் உற்றது. அதனைப் பார்த்து குளிரால் நடுங்கித் தோள்களைக் கைகளால் கட்டிக் கொண்டிருந்த ஆயர்குலப் பெண், "வளைந்த கோலினைக் கையில் வைத்துள்ள கோவலர் பின் நின்று செலுத்த உன் தாயார் இப்பொழுதே வருவாள்" என்று கூறிய நன்மை தரும் சொல்லைக் கேட்டோம்.
நல்லவர்களின் நல்ல சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து போரினை இனிதே முடித்து தலைவன் வருவான். இது உண்மை. நீ துன்பத்தால் எழுந்த வருத்தத்தைக்  களைவாயாக!மாந்தளிரின் நிறம் உடையவளே! என தலைவியிடம் மீண்டும் வற்புறுத்திக் கூறவும், தலைவி ஆற்றாளாய் அழுகை மிகுந்து குவளை மலர்ப் போன்ற மையிட்ட கண்களில் முத்துப் போன்ற நீர்த்துளிக்க வருத்தத்தில் இருந்தாள்.

பிரிவில் ஏக்கமும் அன்பும் மிகுந்து, தலைவனை எதிர்பார்த்து இருந்த தலைவி. அவள் துயரைப் புரிந்து தேற்றும் அன்புடைய தோழி. இவர்கள் இருவரும் பார்க்கும் இயற்கையின் குறிப்புகள். கன்றின் துயரையும் புரிந்து அன்புடன் தேற்றும் ஆயர்குலப் பெண். இவ்வாறாக அழகானஒரு வாழ்வியல் பாடல் இது.

ஆனால் இன்று, எளிதாக அழைக்க ஒரு அலைபேசி. அதனை எடுக்கவும் நேரம் இல்லாத் தலைவன். கோபம் மிகும் தலைவி. ஆறுதல் சொல்லத் தோழியா? அனைவரும் ஓடும் ஓட்டத்தில் யாருக்கும் யாருக்காகவும் நேரம் இல்லை.
மேலும் சிந்திப்பதை இந்தப் பதிவைப்  படிப்பவர்களுக்கு விட்டு விடுகிறேன்!
எங்கோ ஒரு சிறு மாற்றம் நேர்ந்தால், சிறு மாற்றங்கள் சேர்ந்து நல்ல மாற்றமாக அமையும் என்றும் நம்புகிறேன். என் பிள்ளைகளுடன் விளையாடச் செல்கிறேன்...

நண்பரின் பதிவிற்குச்  செல்ல: http://www.gunathamizh.com/2012/11/blog-post_21.html
நன்றி முனைவரே!

8 comments:

 1. எல்லாமுமே அவசரம்... எதற்காக...?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

   Delete
 2. சிந்திக்க தூண்டும் அருமையான பதிவு கிரேஸ். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி உறவுகளுக்கான வெளியை குறைத்துக் கொண்டே வருகிறது. இனி வரும் காலம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற பயத்தையும் தருகிறது. இப்பதிவின் மூலம் ஒரு முல்லைப்பாட்டினையும் தெரிந்து கொண்டேன். நன்றி :-)

  ReplyDelete
 3. அருமையான காலத்துக்கு ஏற்ற பதிவு.
  நன்று.

  எனது வலையின் இணைப்புக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. அருமையான விளக்கம் சகோதரி. நண்பர் குணாவின் வலைப்பக்க இணைப்பைச் சேர்த்துக் கொடுத்தது நன்று. அதேபோல முல்லைப்பாட்டின் எண்ணையும், இடையில் வரியெடுக்கப்பட்டதற்கான குறிப்பையும் தந்து பதிவு செய்தல் நல்லது. தொடர்ந்து இவ்வழியில் பணியாற்றுங்கள். இது தமிழின் வருங்கால வைப்பு நிதி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. முல்லைப்பாட்டு அடிகளின் எண்களை சேர்த்துவிட்டேன், உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா. உங்களைப் போன்ற தமிழ் அறிஞரின் ஆலோசனை எனக்குப் பெரிதும் உதவியாகவும் ஊக்கமாகவும் இருக்கும்.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...